(மீள்பதிவு, முதல் பதிவு 2014-இல்)
அ. மார்க்ஸ் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். அவரது சில புத்தகங்களை சமீபத்தில் படித்தேன். மார்க்ஸைப் பற்றிய என் எண்ணங்கள் எல்லாம் இந்தப் புத்தகங்கள் மூலம் உருவானவையே. மூன்று புத்தகங்கள் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு மேல் படிக்க எனக்குப் பொறுமை இல்லை. அரசியல் சித்தாந்த விளக்கம் எல்லாம் படிக்க நிறையவே பொறுமை வேண்டும்.
அ. மார்க்ஸ் கம்யூனிச சார்புடைய பெரியாரிஸ்ட் என்று தெரிகிறது. கம்யூனிசம் வேலைக்காகாது என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஈ.வெ.ரா. மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், திராவிட இயக்கமும், அவரது சித்தாந்தங்களும் தோல்வி அடைந்துவிட்டன என்று நினைத்தாலும் அவர் ஒரு காலகட்டத்தின் தேவை, தமிழகத்தில் ஜாதியின் தாக்கம் வட மாநிலங்களை விட குறைவாக இருக்க ஈ.வெ.ரா. ஒரு முக்கிய காரணம் என்றும் கருதுகிறேன். அதாவது எனக்கும் சில முன்முடிவுகள் இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் என்ற ஒரு புத்தகமே மார்க்ஸைப் புரிந்துக் கொள்ளப் போதும் என்று நினைக்கிறேன். இவை எல்லாம் 2004-2008 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள். மார்க்ஸ் இடதுசாரி பெரியாரிஸ்ட் சட்டகத்தின் மூலமே எந்தப் பிரச்சினையையும் அணுகினாலும், கம்யூனிச, திராவிடக் கட்சிகளையும் விமரிசிக்கிறார் – மென்மையான விமர்சனம்தான், ஆனால் அதையே நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு இடதுசாரி சார்புடையவர் லெனின், ஸ்டாலினின் தவறுகள் பற்றி வாயைத் திறந்திருப்பதே எனக்கு ஆச்சரியம்தான். மேற்கு வங்க கம்யூனிச அரசை நந்திகிராமம் பிரச்சினைக்காக கண்டிக்கிறார். அமெரிக்க எதிர்ப்பு எப்போதும் உள்ளாடுகிறது. கருணாநிதிக்கு மறைமுகமான ஆதரவு. (புத்தகம் வெளிவந்த பிறகு நிலை மாறி இருக்கலாம்.) ஜெயலலிதாவிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன, ஆனால் இவருக்குத் தெரியும் ஒரே குறை அவர் பிராமணர் என்பதுதான். அதை ஈ.வெ.ரா. மாதிரி நேரடியாக சொல்லவும் தைரியம் கிடையாது, நாமேதான் between the lines படித்துக் கொள்ள வேண்டும். சில பல இடங்களில் ஊரோடு ஒத்து ஊதாமல் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார். (குஷ்புவின் safe sex கருத்துக்கு ஆதரவு, மும்பை நடன பார்களை மூடுவதற்கு எதிர்ப்பு இத்யாதி)
சில ஸ்டேட்மெண்டுகள் சிரிக்கவும் வைக்கின்றன – “திராவிட” என்று அடைமொழி வைத்துக் கொண்டதால் inclusive nationalism-த்தை திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்துகின்றனவாம்! 2G, 3G என்று வந்தால்தான் inclusive nationalism எல்லாம் மேடைக்கு வருகிறது என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தும் இப்படி அடித்துவிடும் வாத்யாரே, நீ மேதை!
நான் புரிந்து கொண்ட நபிகள் மாதிரி ஒரு சப்பைக்கட்டை நான் பார்த்ததே இல்லை. முகமதின் சர்ச்சைக்குரிய செயல்கள் (மருமகள் உறவுள்ளவளை மணந்தது, சிறு குழந்தைகள் உட்பட்ட யூதர் குழுக்களை முழுமையாக வெட்டிச் சாய்த்தது…) எல்லாம் அவருக்கு வேறு வழியில்லாததால் செய்யப்பட்டவை என்று சுலபமாக முடித்துவிடுகிறார். என்னதான் நடந்திருந்தாலும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்.பெரியாரிஸ்ட் எப்படி ஒரு மதத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்றே புரியவில்லை. ஆனால் ஈ.வெ.ரா.வே அப்படி இஸ்லாமை புகழ்ந்து பேசினார் என்று அவர் காட்டுகிற மேற்கோள்களைப் பார்த்தபோது புரிந்தது.
ஈழத்தமிழ் சமூக உறவுகளும் அரசியல் தீர்வும் ஓரளவு சமநிலையோடு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இன்றைய சூழ்நிலையில் ராஜபக்சேயின் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேற்றமோ, தீர்வோ இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார். புலிகளின் ஃபாசிச அணுகுமுறையை சுட்டிக் காட்டுகிறார்.
எதையும் சுயமாக சிந்தியுங்கள் என்று சொன்ன ஈ.வெ.ரா.வை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் அவரது raison d’etre-யே கேலிக்கூத்தாக்கிவிடுகிறார்கள். மார்க்ஸ் அப்படி முழுமையாக ஜோதியில் ஐக்கியமாகிவிடவில்லை. அதே நேரத்தில் ஈ.வெ.ரா. என்னதான் சொல்ல் வந்தார் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார். அதுதான் அவரது முக்கியத்துவம் என்று நினைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்
One thought on “அ. மார்க்ஸ்”