(மீள்பதிவு)
கஷ்டமான விடுகதை. பதிலை கண்டுபிடிக்கத் தேவையான எல்லா க்ளூக்களும் இருக்கின்றன. ஆனால் கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமம். பதில் இதுதான் என்று சொல்லும்போது அட, இதுதானா, இது நமக்குத் தோன்றவில்லையே என்று நினைக்க வைக்க வேண்டும். இதுதான் அகதா கிறிஸ்டியின் ஃபார்முலா. ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லா துப்பறியும் கதைகளுக்கும் இதுதான் ஃபார்முலா. அதில் அவர் மீண்டும் மீண்டும் வெற்றி அடைந்திருக்கிறார்.
இலக்கியம், தரிசனம் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் அகதா கிறிஸ்டியை புறக்கணித்துவிடலாம். ஆனால் அவர் சிறந்த craftswoman. துப்பறியும் கதைகளின் ஃபார்முலாவுக்குள் என்ன பெரிதாக எழுதிவிட முடியும்? அவரால் சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் வெகு சுவாரசியமான கதைகளை எழுத முடிந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் ‘red herring’ என்று சொல்வார்கள். யார் குற்றவாளி என்பதற்கு பல சாத்தியங்கள் இருக்கும். சாட்சியங்கள், கதைப் போக்கு மூலம் இவர்தான் குற்றவாளி என்று காட்டுவார், ஆனால் அவர் இல்லை என்று பின்னால் தெரியும். கிறிஸ்டியின் கதைகளில் red herring after red herring என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒரு உத்தி. அதை உல்டாவாகவும் பயன்படுத்துவார். இவர் குற்றவாளி இல்லை, இவர் இல்லை என்று ஷோ காட்டுவார். கடைசியில் அவர்தான் குற்றவாளியாக இருப்பார்.
அவரது நாவல்களைப் பதின்ம வயதில் படிக்க வேண்டும். அவரது உத்திகளை ரசிப்பதற்கு சரியான வயது அதுதான். பதின்ம வயதைத் தாண்டியவர்களுக்கு நான் பரிந்துரைப்பது நான்கு புத்தகங்கள் – Murder in the Orient Express, And Then There Were None (கும்நாம் என்று ஹிந்தியில் திரைப்படமாகவும் வந்தது), Murder of Roger Ackroyd, Mysterious Affair at Styles. அவற்றிலும் ‘first among equals’ என்று நான் கருதுவது Murder in the Orient Express-ஐத்தான்.
ஐரோப்பாவின் ஒரு மூலையிலிருந்து (துருக்கி) இன்னொரு மூலைக்குப் (பாரிஸ்) போகும் ரயில் Orient Express. இரண்டாம் உலகப் போருக்கு முன் ஐரோப்பாவில் இது பெரிய இணைப்பாக இருந்தது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் கொலை. கொலை நடந்த சில மணி நேரத்தில் கடுமையான பனிப்பொழிவால் ரயில் நின்றுவிடுகிறது. பெட்டியில் கிறிஸ்டியின் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் போய்ரோ பயணிக்கிறார். 12 பயணிகளில் யார் கொலை செய்தது என்பதுதான் மர்மம்.
12 பயணிகளும் ஒரு கலவையான கூட்டம். கொலை செய்யப்பட்டவனின் செகரட்டரி, வேலைக்காரன்; கொலை செய்யப்பட்டவன் தன் பாதுகாப்புக்காக அமர்த்தி இருக்கும் ஒரு detective; ஆங்கிலேய ஆர்மி மேஜர்; ஆங்கிலேய governess; ஒரு சீமாட்டி மற்றும் சீமான் (Count and Countess); சீமாட்டியின் பணிப்பெண்; ஒரு அமெரிக்க அம்மா; ஒரு இத்தாலியன்; இன்னொரு வயதான சீமாட்டி.
கொலையோ படு விசித்திரமாக இருக்கிறது. பல கத்திக் குத்துக்கள். சில பலமானவை, சில பலமற்றவை. சில் இடது கைக்காரன் குத்தியதோ என்று சந்தேகம். அங்கே ஒரு கர்ச்சீஃப் கிடக்கிறது. எப்போது இறந்தான் என்று கணிக்க முடியவில்லை. சிவப்பு கிமோனோ அணிந்த ஒருவன் கடந்து போனதை அமெரிக்க அம்மா பார்த்திருக்கிறாள். கொலை நடந்த நேரத்துக்கு எல்லோருக்கும் alibi இருக்கிறது.
போய்ரோ துப்பறிகிறார். அவர் கடைசியில் தரும் விளக்கத்தை யாராலும் ஊகிக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். மிகவும் திருப்தியான விளக்கம். மிகக் கஷ்டமான விடுகதைக்கு மிகவும் பொருத்தமான, அதே நேரத்தில் சிம்பிளான, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கக் கூடிய பதில் தெரியும்போது கிடைக்கும் திருப்தி போய்ரோவின் விளக்கத்தைப் படிக்கும்போது ஏற்படுகிறது.
உண்மையில் இது துப்பறியும் கதைகளில் ஒரு classic. Tour de force என்றுதான் சொல்ல வேண்டும்.
1934-இல் எழுதப்பட்ட புத்தகம். சிட்னி லூமெட் இயக்கத்தில் 1974-இல் திரைப்படமாகவும் வந்தது.
துப்பறியும் கதைப் பிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்
3 thoughts on “அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express’”