நற்றிணையில் ஒரு கவிதை

விருந்து எவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
கரும்புஇமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்புஇல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணிநிறத்து அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப் பாஅய்
மலை இமைப்பது போல் மின்னிச்
சிலை வல்லேற்றொடு செறிந்த இம்மழைக்கே!

பெருங்குன்றூர்க் கிழார், பாடல் 112

அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமளியின் அதிபன் வருவதைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி,
நீலமணி அருவியென
மண் நிறைந்து ஒழுக,
மலை கண்ணிமைப்பது போல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி?

“மொழிபெயர்ப்பு” ஜெயமோகனுடையதுசங்க சித்திரங்கள் புத்தகத்தில். பெருங்குன்றூர்க் கிழார் காட்டையும் மழையையும் கண் முன் கொண்டுவந்துவிட்டார்! குறிப்பாக மலை இமைப்பது போல் மின்னி என்ற வரி. ஜெயமோகனும்தான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்