கூடன்பர்க் பைபிள் திருட்டு

கூடன்பர்க் முதன்முதலாக புத்தகங்களை அச்சிட்டவர். முதலில் அச்சிடப்பட்ட புத்தகம் பைபிள்தான். 1455-இல் அவர் அச்சிட்ட பைபிளுக்கு உலகில் 47 பிரதிதான் இருக்கிறதாம். (எங்கோ 48 பிரதி என்றும் படித்தேன்). அதில் ஒன்று ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கிறது.

1969-இல் விடோ அராஸ் அதைத் திருட முயன்றிருக்கிறான். அப்போது அவனுக்கு வயது 19. அன்று சிசிடிவி காமெராக்கள், எச்சரிக்கை மணிகளும் (alarm) கிடையாது. இரண்டு பெருங்கதவுகளுக்குப் பின்னால் இரட்டை அடுக்கு கண்ணாடிப் பேழை ஒன்றில் பைபிள் இருக்கிறது. கதவுகளுக்கு நூலகத்தின் மற்ற பூட்டுகள் மாதிரி இல்லாமல் வேறு விதப் பூட்டு. ஜன்னல்கள் தரையிலிருந்து ஐம்பது அடி உயரத்தில், எல்லாவற்றிலும் இரட்டை அடுக்கு கண்ணாடி.

அராஸின் திட்டம் மிக எளிமையானது. ஒரு நாள் மாலை நூலகத்தின் கழிப்பறை ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். ஒரு முதுகுப்பையில் (backpack) சின்ன சுத்தியல், ஸ்க்ரூட்ரைவர், டேப், முடிச்சுகள் உள்ள பலமான 40 அடி நீளக் கயிறு இத்யாதி. இரவு பத்து மணிக்கு கழிப்பறையின் ஜன்னல் மூலம் நூலகத்தின் கூரையில் ஏறுகிறான். அங்கே கயிறைக் கட்டுகிறான். கயிற்றில் இருக்கும் முடிச்சுகளை கைப்பிடியாகவும் கால்பிடியாகவும் பயன்படுத்தி கீழே இறங்குகிறான். கயிறு முடியும் இடம் ஜன்னல். ஜன்னலின் ஆறடி உயர வெளிக்கண்ணாடி மீது டேப்பை ஒட்டுகிறான். அதை உடைக்கும்போது கண்ணாடி சிதறல்கள் வெளியே விழாமல் டேப் தடுக்கிறது. உள்ளே சென்று உள்கண்ணாடியின் ஒரு சின்ன பகுதியை உடைக்கிறான். புத்தகம் இருக்கும் கண்ணாடிப் பேழைக்குப் போய்விட்டான். அடுத்தப்படி பேழையையும் உடைத்து புத்தகத்தை எடுத்து தன் முதுகுப்பையில் திணித்துக் கொள்கிறான். வந்த வழியே திரும்பி மீண்டும் கயிறு வழியாக மேலே ஏற ஆரம்பிக்கிறான்.

புத்தகம் அல்ல. புத்தகங்கள். புதிய ஏற்பாடு ஒரு புத்தகம், பழைய ஏற்பாடு ஒரு புத்தகம். அவன் கணிக்கத் தவறியது இந்தப் புத்தகங்களின் எடை. இரண்டும் சேர்ந்து 25 கிலோ இருக்கும். இந்த எடையைத் தூக்கிக் கொண்டு மேலே ஏற முடியவில்லை. கீழேயும் இறங்க முடியாது. ஏனென்றால் கயிறு ஜன்னல் வரைக்கும்தான் இருக்கிறது, அதற்குக் கீழே ஐம்பது அடி. வசமாக மாட்டிக் கொண்டான்.

கடைசியில் எடை தாங்காமல் கீழே விழுகிறான். தலையில், தொடையில் எலும்பு முறிவு. இவனது முனகல்கள் கேட்டு காவலாளிகள் வந்து இவனைக் காப்பாற்றி இருக்கிறார்கள். உண்மையில் அவனைக் காப்பாற்றியது அந்தப் புத்தகங்கள்தான், அவற்றின் மேலாகத்தான் விழுந்திருக்கிறான். புத்தகங்களுக்கு சின்ன அளவில் சேதம்.

இதை அசோகமித்திரனோ, முத்துலிங்கமோ சிறுகதையாக எழுதி இருந்திருந்தால் பெரிதும் சிலாகித்திருப்பேன். Truth is indeed stranger than fiction…

நீதிமன்றத்தில் மனநிலை சரியில்லை என்று விடுதலை அடைந்திருக்கிறான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: ஹார்வர்டில் திருட்டு 1, ஹார்வர்டில் திருட்டு 2