நூலகத்திலிருந்து எட்டு மில்லியன் திருட்டு

அது என்னவோ ஒரு வாரமாக நூலகத்திலிருந்து திருட்டு என்று செய்தியாக கண்ணில் படுகிறது. போன் பதிவில் ஐம்பது வருஷத்துக்கு முந்தைய திருட்டு. இந்தத் திருட்டு ஐந்து வருஷத்துக்கு முன்னால்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது, ஆனால் இருபது முப்பது வருஷங்களாக நடந்த திருட்டு. அது அசோகமித்திரன் கதை போல வாழ்க்கையின், திட்டங்களின் அபத்தத்தைக் காட்டுகிறது. இது ஷெர்லக் ஹோம்ஸின் புகழ் வெற்ற வசனத்தை நினைவுபடுத்துகிறது – When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth.

நூலகம் பிட்ஸ்பர்கில் உள்ள கார்னகி நூலகம். பல அரிய புத்தகங்கள் இருந்திருக்கின்றன. 1644-இல் பதிக்கப்பட்ட Blaeu Atlas. 276 maps – அன்றைய ஐரோப்பியர்களுக்கு தெரிந்த உலக்த்தைப் பற்றிய முழு விவரங்களுக்கும் இருந்திருக்கின்றன. “செவ்விந்தியர்களின்” 1500 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகம். (272 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கின்றன, 2012-இல் ஒரு பிரதி கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது). புகழ் பெற்ற ஓவியர்/உயிரியல் ஆராய்ச்சியாளர் ஆடுபானின் புத்தகம் ஒன்று. சர் ஐசக் நியூட்டன், அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதி ஜான் ஆடம்ஸ், மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சன், பொகோஷியோ எழுதிய டெகமெரானின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆடம் ஸ்மித் எழுதிய Wealth of Nations, ஜார்ஜ் எலியட் எழுதிய Silas Marner போன்ற பல புத்தகங்களின் மிக அரிய first editions…

அஜாக்கிரதையா? இல்லவே இல்லை. 1992-இல் க்ரெக் ப்ரையோரே (Greg Priore) என்பவர் நூலக அதிகாரியாக சேர்ந்திருக்கிறார். பார்த்து பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அரிய புத்தகங்கள் ஆலிவர் ரூம் என்ற அறையில் இருக்கின்றன. அதன் உள்ளே வர ஒரே ஒரு வழிதான். வெகு சில சாவிகளே உள்ளன. நாளில் சில மணி நேரம் மட்டுமே அறை திறந்திருக்கும். அந்த நேரத்தில் ப்ரையோரே அங்கே உட்கார்ந்து வருபவர் போகிறவர்களைக் கண்காணிப்பார். உள்ளே நுழைபவர்கள் கையெழுத்திட வேண்டும். தங்கள் கோட்டுகள், பைகள் எல்லாவற்றையும் வெளியே வைத்தாக வேண்டும். உங்களுக்கு புத்தகம் வேண்டுமென்றால் ப்ரையோரேவைக் கேட்க வேண்டும். அவர்தான் எடுத்துத் தருவார். திரும்பித் தரும்போது புத்தகத்தை நன்றாக சரிபார்ப்பார். புகைப்படங்கள் நிறைந்த புத்தகத்திலிருந்து எதையும் கிழித்துவிட்டார்களா என்று பார்த்துக் கொள்வார். காமெராக்கள் அறையில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

பிறகு எப்படித்தான் திருட்டு நடந்தது? When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth. திருடியது ப்ரையோரேவேதான். Roger Ackroyd நாவலைத்தான் நினைத்துக் கொண்டேன்.

ப்ரையோரேவின் பிள்ளைகள் கொஞ்சம் பணச் செலவு பிடிக்கும் பள்ளிகளில், கல்லூரிகளில் படித்தார்கள். பணம் பத்தவில்லை. என்ன செய்வது? அவ்வப்போது ஒரு அரிய புத்தகத்தை, இல்லாவிட்டால் புத்தகத்திலிருந்து ஒரு ஓவியத்தை, ஃபோட்டோவை கிழித்துக் கொண்டு போய் விற்றிருக்கிறார். நாலைந்து வருஷம் முன்னால் ஆடிட் நடந்தபோது பிடிபட்டிருக்கிறார். சோகம் என்னவென்றால் அவருக்கு வீட்டுச் சிறை என்று ஒரு வருஷம் மட்டுமே தண்டனை.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: நூலகத் திருட்டு