கோட்சே ஏன் ஜின்னாவைக் கொல்ல முயலவில்லை?

இந்தியாவைப் பிளந்ததின் முக்கிய காரணி ஜின்னாதானே? Direct Action Day என்று அறைகூவல் விடுத்து நாட்டில் பெரும் கலவரங்கள் வெடிக்கச் செய்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இறக்கக் காரணமானவரும் ஜின்னாவேதான். ஏன் ஜின்னாவைக் கொல்ல ஒரு தீவிர ஹிந்துத்துவரும் முயலவில்லை?

Direct Action Day-க்குப் பிறகு ஜின்னா ஒரு வருஷமாவது பம்பாயில் இருந்திருப்பார். கோட்சே புணேயில் இருந்தார் என்று நினைக்கிறேன். ரயில் ஏறினால் சில மணி நேரங்களில் பம்பாய்க்கு போய்விடலாம். அட, பாகிஸ்தான் உருவான பிறகும் அந்த நாட்களில் கட்டுப்பாடுகள் அதிகம் கிடையாது. கோட்சே நினைத்திருந்தால் பாகிஸ்தானுக்குப் போயிருக்கலாம். தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகமில்லாத அந்த நாட்களில் ஒன்றிரண்டு துப்பாக்கிகள் கொலை முயற்சிக்குப் போதும். ஏன் கோட்சேக்கள் யாரும் அதற்கு முயலவே இல்லை?

காந்தியைக் கொல்ல இரண்டு மூன்று முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஜின்னாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்றைக்கு கணிசமான ஹிந்துத்துவர்களுக்கு காந்தி மீது இருந்த வெறுப்பு ஜின்னா மீது இருந்த வெறுப்பை விடக் குறைவு என்பது முரண்பாடாக இல்லையா? பிரார்த்தனையிலும் பஜனையிலும் நாளின் கணிசமான பகுதியை செலவழித்த அதிதீவிர ஹிந்துவான காந்திதான் முதல் எதிரி, ஆயிரக்கணக்கான ஹிந்துக்களின் படுகொலைக்கு நேரடி காரணியான ஜின்னா இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது விசித்திரமாக இல்லையா?

இன்றும் கோட்சே தேசபக்தன் என்று அவரை கணிசமான ஹிந்துத்துவர்கள் புகழ்வதை சர்வசாதாரணமாகக் காணலாம். சக ஹிந்துவை, அதுவும் தீவிர மத நம்பிக்கை உள்ளவரை கொன்றவர் கணிசமான ஹிந்துத்துவர்களைப் பொறுத்த வரையில் தேசபக்தன் என்பது விசித்திரமாக இல்லையா?

எனக்குத் தோன்றும் காரணம் ஒன்றுதான். காந்தி ஆன்மீகரீதியாக ஹிந்துவாக இருக்கலாம். ஆனால் அவரது அரசியலின் அடிப்படை வெறுப்பைக் கடக்க முயற்சிப்பது. குழுக்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்றுதான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் முயன்றார். போராடும் குழுக்களுக்கு இடையே கூட. ஆலை முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே, ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கு இடையே, ஏழை விவசாயிக்கும் மிராசுதாருக்கும் இடையே, ஹிந்துவுக்கும் முஸ்லிமுக்கும் இடையே, “ஹரிஜனுக்கும்” “உயர்ஜாதி” ஹிந்துக்களுக்கும் இடையே இருந்த கசப்புகள் வெறுப்பாக மாறிவிடக் கூடாது என்றுதான் முயன்று கொண்டே இருந்தார்.

அன்றைய அரசியல் ஹிந்துத்துவ இயக்கமோ (இன்றும்தான்) பிற மதத்தவர் ஹிந்துக்களை திட்டம் போட்டு ஒழிக்கிறார்கள் என்ற அச்சத்தையே முன்வைத்து நடத்தப்பட்டது/நடத்தப்படுகிறது. விதிவிலக்குகள் இருந்தாலும் பிற மதத்தவர் மீது வெறுப்பையே தன் அடிப்படையாகக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். சுதந்திரப் போராட்டத்துக்கு வெளியே நின்றது. விதிவிலக்குகள் இருந்தாலும் அன்றைய ஹிந்துத்துவர்கள் நாற்பதுகளின் இறுதியில் முஸ்லிம்களோடு போராடுவதையே தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, விட்டுக் கொடுங்கள், உயர்ந்த லட்சியங்களைக் கடைப்பிடியுங்கள் என்று மீண்டும் மீண்டும் போதித்த காந்தி, நல்லிணக்கத்துக்கு எப்போதும் முயன்று கொண்டே இருந்த காந்தி அவர்கள் கண்ணில் “துரோகி”. அதனால் அவர்தான் முதல் எதிரி. ஜின்னா, முஸ்லிம் லீக் போன்ற அரசியல் “எதிரிகள்” எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

இதோ நம் எதிரி என்று ஒரு குழுவைக் காட்டி, கசப்புகளை அதிகரிக்க வைத்து, வெறுப்பைத் திரட்டி அதன் மூலம் “தன்” குழுவைத் திரட்டுவதுதான் வெறுப்பியக்கங்களின் அடிநாதம். அது முஸ்லிம் வெறுப்பை முன்வைத்த ஹிந்துத்துவ இயக்கம் ஆகட்டும், பார்ப்பன வெறுப்பை முன்வைத்த திராவிட இயக்கமாகட்டும், அந்த வெறுப்புதான் அடிப்படை. ஜின்னாவை ஒழித்துக் கட்டிவிட்டால் எதிரிகள் பலவீனமடைந்துவிடுவார்களே! அப்புறம் யாரை வெறுப்பது? அன்று காந்தியை வசை பாடியவர்கள் இவர்களே.

காந்தி கொல்லப்பட்ட பின் எல்லாரும் வேறு வழியில்லாமல் அடக்கி வாசித்தார்கள். இன்று பல வருஷம் ஆகிவிட்டது. அவருக்குப் பின் இருக்கும் ஒளிவட்டம் மங்கிவிட்டது. அவரை வசை பாடுவது புருவங்களைத் தூக்க வைப்பதில்லை.

ஹிந்துத்துவம் பேசுபவர்களில் கணிசமானவர்கள் அவர் மீது வசை பாடுகிறார்கள். பாஜக ஆட்சியில் இருப்பதால் அவர்கள் குரல் உரத்துக் கேட்கிறது. ஆனால் காந்தி மீது வசை பாடுபவர்களில் நக்சலைட் என்றே சொல்லக் கூடிய கம்யூனிஸ்ட் சார்புடையவர்கள் உண்டு, பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் முதலில் அடிக்க வேண்டியது பார்ப்பானைத்தான் என்று வாய்ச்சொல் வீரம் பேசும் அதிதீவிர திராவிட இயக்கத்தினர் உண்டு, வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட தலித் இயக்கத்தினர் உண்டு. இவர்கள் அனைவருக்கும் காந்தியே தங்கள் இயக்கங்களின் அடிப்படைகளை ஆட்டம் காண வைக்கக் கூடியவர் என்று நன்றாகவே தெரிந்திருக்கிறது

காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறார். காந்தியைப் போன்ற உன்னத மனிதர்கள் மனித வரலாற்றில் அபூர்வம் என்று உறுதியாகக் கருதும் எனக்கும் காந்தி மீது விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக கிலாஃபத் இயக்கம் பற்றி எனக்கு கடும் விமர்சனங்கள் உண்டு. துருக்கியில் யார் தலைவராக வேண்டும் என்று இந்தியாவில் போராடுவதில் என்ன பொருளிருக்கிறது? முஸ்லிம்களை தேசிய இயக்கத்துக்குள் இழுக்க வேண்டும் என்பதற்காக சிறிய சமரசம் என்று நினைத்திருக்கலாம். பாலியல் வேட்கை, பிரம்மச்சரியம் பற்றிய அவரது எண்ணங்களோடு எனக்கு அனேகமாக இசைவில்லை. பச்சையாகச் சொன்னால் அக்மார்க் மடத்தனம் என்றே கருதுகிறேன். ஆனால் நான் காந்தியின் கால்தூசு கூட பெறமாட்டேன் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் இவர்கள் செய்வது விமர்சனம் அல்ல; ஏறக்குறைய அவரைத் திட்ட மாட்டோமோ என்ற அரிப்பு. காந்தி ஹிந்து பெண்களை கூட்டிக் கொடுக்கும் மாமா என்று ஒரு ஹிந்துத்துவர் சில மாதங்களுக்கு முன்னால் முகநூலில் எழுதினார். திட்ட வேண்டுமென்றால் திட்டிவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்கு ஆதாரமாக – காந்தி இப்படி சொன்னார், அதனால்தான் அவரை விமர்சிக்கிறேன் – என்று ஒரு “தரவை” முன்வைத்து திட்டுகிறார். அது பொய்யான “தரவு” என்று தெளிவாக நிறுவப்பட்ட பிறகும் இன்று வரை அப்படி சொன்னது தவறு என்று அவர் ஒத்துக் கொள்ளவில்லை. காந்தி அப்படி சொன்னதாக நான் கொடுத்த தரவு தவறு, ஆனால் காந்தி அதே மாதிரி வேறு எங்காவது சொல்லி இருக்கலாம், அவர் அப்ப்டி எங்கும் சொல்லவில்லை என்று நிறுவப்படும் வரை என் விமர்சனம் சரியே என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இன்றும் மனம் ஆறவில்லை. காந்தியைத் திட்ட வேண்டும் என்று ஆசை இருந்தால் திட்டிவிட்டுப் போகட்டும்; ஆனால் இதற்காக பொய்த் “தரவுகளை” ஆதாரமாகக் காட்டி, அது பொய் என்று நிறுவப்பட்ட பிறகும் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் அளவுக்கு ஒரு அதிதீவிர ஹிந்து மீது எப்படி ஒரு ஹிந்துத்துவருக்கு இத்தனை வெறுப்பு – வெறுப்பு என்றால் பத்தவில்லை, சென்னை மொழியில் காண்டு – ஏற்படுகிறது? அந்தப் பதிவும் அதற்கு வந்த மறுமொழிகளும்தான் இப்படி பொய்யான “தரவை” முன்வைக்கும் அளவுக்கு ஏன் காந்தி மேல் இத்தனை வெறுப்பு என்று யோசிக்க வைத்தது.

ஹிந்துத்துவர்கள் நேரு மீதும் வெறுப்பை உமிழ்வார்கள்தான். என் கண்ணில் அது புரிந்து கொள்ளக் கூடிய அரசியல். ஏனென்றால் இன்றும் காங்கிரஸ் நேருவின் வம்சாவளியினரின் சொத்து, நேருவுக்குப் பின் ஒளிவட்டம் இருந்தால் அது ராஹுலுக்கும் கொஞ்சம் பொசிந்துவிடலாம். அடிப்படையையே தாக்குவோம் என்ற எண்ணம்தான் என்று நினைக்கிறேன்.

ஆனால் இன்றைய அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத, மறைந்த எந்தத் தலைவர் மீதாவது வெறுப்பு என்று எங்காவது பார்த்திருக்கிறீர்களா? போஸ் மீது? படேல்? அம்பேத்கர்? ராஜாஜி? திலக்? அட வேண்டாம், ஜின்னா மீது இத்தனை வெறுப்பு உமிழப்பட்டு பார்த்திருக்கிறீர்களா?

செத்த பிறகு சிலை மட்டுமே வைக்க வேண்டும், இன்று இல்லாதவர்களை குறை சொல்லிவிடக் கூடாது, புகழ்மாலை மட்டுமே சூட்ட வேண்டும் என்று இந்தியாவில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. அந்த விதி உடைக்கப்படுவது நேருவுக்கும் காந்திக்கும் மட்டுமே. நேரு அரசியல் காரணங்களுக்காக தாக்கப்படுகிறார், சரி. ஆனால் ஜின்னாவைக் கூடத் தரக்குறைவாக விமர்சிக்காதவர்களுக்கு காந்தி மீது ஏன் இத்தனை காண்டு?

வளர்த்துவானேன்! காந்தி – வெறுப்பியக்கங்களின் முதல் எதிரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்

7 thoughts on “கோட்சே ஏன் ஜின்னாவைக் கொல்ல முயலவில்லை?

 1. பாகிஸ்தானுக்கு அடித்தளம் அமைத்தவர் சாவர்க்கர்; முகமது அலி ஜின்னா அல்ல
  1937இல் அகமதாபாத்தில் நடந்த 19ஆவது இந்து மகா சபை மாநாட்டின் தலைமையுரையில் சாவர்க்கர் கூறினார்:
  “ஒன்றுக்கொன்று பகையுள்ள தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் இந்தியா ஏற்கெனவே நல்லிணக்கமுள்ள தேசமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்றோ, அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலிருந்தாலே போதும் அதை ஒன்றிணைக்க முடியும் என்றோ கருதும் கடுமையான தவறிழைத்து வருகிறார்கள். இந்த நல்லெண்ணம் படைத்த, ஆனால் சிந்தனை செய்யாத இந்த நண்பர்கள் தங்கள் கனவுகளை, யதார்த்தங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வகுப்பு மோதல்களைக் கண்டு பொறுமையிழந்து அவற்றுக்கான பொறுப்பை வகுப்புவாத அமைப்புகள்மீது சுமத்துகிறார்கள். ஆனால், வகுப்புவாதப் பிரச்சினைகள் என்று சொல்லப்படுபவை பாரம்பரியமாக நம்மிடம் வந்து சேர்ந்தவையும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளவையுமான கலாச்சார, மத, தேசிய பகைமைதான்… நாம் இதற்கு தைரியமாக முகம் கொடுப்போம். இன்று இந்தியா என்பதை ஒன்றுபட்ட தேசம் என்று கருத முடியாது. மாறாக இந்தியாவில் முதன்மையாக இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற இரு தேசங்கள் இருக்கின்றன என்றுதான் கருத வேண்டும்.”
  வி.டி.சாவர்க்கர் இந்தக் கருத்துகளைக் கூறிய மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் ‘பாகிஸ்தான்’ என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை லாகூரில் 1940இல் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் எழுப்பப்பட்டன. அந்த மாநாட்டில் அந்தப் பெயரையும் பிரிவினைக் கோரிக்கையையும் முன்மொழிந்தவர் அப்போது வங்காள மாகாணத்தின் பிரதமராக இருந்த ஏ.கே.பஸ்லுல் ஹக் (அக்காலத்தில் மாகாண முதலமைச்சர்கள் ‘பிரதமர்’ என அழைக்கப்பட்டனர்). தனது தலைமையுரையில் ஜின்னா, முஸ்லிம்கள் தனி தேசமாக அமைகிறார்கள் என்ற கருத்துக்கு ஆதரவாக, வி.டி.சாவர்க்கரின் 1937ஆம் ஆண்டு இந்து மகா சபைத் தலைமையுரையிலிருந்து.

  Liked by 1 person

 2. /செத்த பிறகு சிலை மட்டுமே வைக்க வேண்டும், இன்று இல்லாதவர்களை குறை சொல்லிவிடக் கூடாது, புகழ்மாலை மட்டுமே சூட்ட வேண்டும் என்று இந்தியாவில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. அந்த விதி உடைக்கப்படுவது நேருவுக்கும் காந்திக்கும் மட்டுமே./ இதுவும் தவறு. நேருவும் காந்தியும் விமர்சிக்கப் படுகிறார்கள் ஆனால் பார்ப்பன சங்கிகளால் கடுமையாக விமர்சிக்கப் படுவதோடு அதிகம் ஆபாசமாகவும் அவதூறு செய்யப்படுபவர் பெரியார் மட்டுமே!

  Like

 3. பாகிஸ்தானுக்கு 550 கோடி ரூபாய் அரசு கஜானாவில் இருந்து அதுவும் காஷ்மீர் மீட்பு முயற்சியில் இருந்த போது கொடுக்கச் சொன்னது காந்தியா ஜின்னாவா. அது தான் காந்தியை கொல்லும் எண்ணத்தை வலுப்படுத்தியதாக கோட்சே தனது இறுதி வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். அவரது இறுதி வாக்குமூலம் ஒரு மிக முக்கியமான ஆவணம்.

  Like

 4. . If Godse had killed Jinnah (which he and Apte had vaguely considered when in the spring of 1947, the Pakistan Constituent Assembly was meeting in Delhi), it would still have been murder, but perhaps it would have been regarded as more consistent with his own logic: avenging the Partition of the Motherland on the man who had achieved this Partition by ruthless means. Instead, he killed a leader who had opposed Partition, even if not to the utmost, and who still professed the belief that the Partition could and should be undone in the near future. Like the Mahatma, Godse was harsher on his own kin than on the opposing camp.

  Like

 5. சுப்புராஜ், சவர்க்கார் சொன்னதால்தான் ஜின்னாவும் முஸ்லிம் லீகும் பாகிஸ்தான் கேட்டார்கள் என்று சவர்க்காரே கூட நம்பமாட்டார். ஈ.வே.ரா. விமர்சிக்கப்படுகிறார் என்று நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் என் கண்ணில் அதுவும் அரசியலே. மேலும் ஈ.வே.ரா.வின் வெறுப்பரசியல் விமர்சிக்கப்பட வேண்டியதே, நிராகரிக்கப்பட வேண்டியதே.

  வெற்றி, கோட்சேயின் வாக்குமூலம் முக்கிய ஆவணம் என்றே நானும் கருதுகிறேன். இதே தளத்தில் பார்க்கலாம் – https://siliconshelf.wordpress.com/2019/06/01/நான்-ஏன்-காந்தியைக்-கொன்/

  வாசுதேவன், ஜீப், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.