இந்தியாவின் முதல் காப்டனாக நான் கருதுவது பட்டோடியைத்தான். பட்டோடிக்கு முன் ஒரு சில நல்ல வீரர்கள் இருந்தார்கள், ஆனால் இந்தியாவை ஒரே டீமாக மாற்றியது பட்டோடிதான். அவருடைய வாழ்வே ஒரு போராட்டம்தான். ஒரு கண்தான் தெரியும், விபத்தில் இன்னொரு கண்ணில் பார்வை போய்விட்டது. அந்த ஒற்றைக் கண்ணை வைத்துக் கொண்டு அவர் இத்தனை தூரம் ஆடியது மிகப் பெரிய விஷயம். அதே போல அவர் காலத்தில் வலுவான வீரர்கள் இல்லை. உம்ரீகரும் குப்தேயும் அவர் காப்டனான் உடனேயே ஓய்வு பெற்றுவிட்டார்கள். காவஸ்கரும் விஸ்வநாத்தும் இன்னும் வரவில்லை. வேகப்பந்து வீச்சாளர் என்ற பேச்சே கிடையாது. பேடியும் பிரசன்னாவும் வர நாட்கள் இருந்தன. டீமில் தான் சுமாரான பாட்ஸ்மன்தான் என்று குறிப்பிடுகிறார், ஆனால் இவரை விட சிறந்த பாட்ஸ்மன் அறுபதுகளில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்ததை வைத்துக் கொண்டு போராடினார். அதனால்தான் பலரது இதயங்களைத் தொட்டுவிட்டார். எஞ்சினியர், ஜெய்சிம்ஹா போன்ற சக வீரர்களின் அன்பைப் பெற்றிருந்தார். பேடி, பிரசன்னா, விஸ்வநாத் போன்ற இளைஞர்களுக்கு அவர் ஏறக்குறைய தெய்வம். எதிரணி வீரர்கள் அவரது போர்க்குணத்தாலும் தலைமைப் பண்பாலும் கவரப்பட்டார்கள். குசும்புத்தனமான நகைச்சுவை பலரை கவர்ந்தது.
பட்டோடி இறந்தபோது இப்படிப்பட்ட பலரிடமும் கேட்டு வாங்கிய கட்டுரைகளை சுரேஷ் மேனன் Pataudi: Nawab of Cricket என்று ஒரு தொகுத்திருக்கிறார். பட்டோடி எத்தனை பேரின் நெஞ்சைத் தொட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
சஞ்சய் மஞ்ஜ்ரேகரை இன்று ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராகத்தான் தெரியும். ஒரு காலத்தில் அவர் பெரிய லெவலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில மாட்ச்களில் மட்டுமே ஜொலித்தார். அவருடைய தன்வரலாறான Imperfect-ஐ பரிந்துரைக்கிறேன். புத்தகம் முழுக்கத் தெரிவது நேர்மை. குறிப்பாக தன்னைப் பற்றி. தான் ஏன் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை என்பதை மிகவும் நேர்மையுடன் அணுகுகிறார். அப்பா விஜய் மஞ்ஜ்ரேகர் அந்தக் காலத்தில் பெரிய பாட்ஸ்மன். ஆனால் கிரிக்கெட் விளையாடிய காலத்திற்கு பிறகு அவரைப் பெரிதாக சீந்துபவர் எவருமில்லை. அந்தக் கோபம், அந்தக் காலத்து ஆணுக்கு உரிய விழுமியங்கள் எல்லாம் அவரை பெரிய கோபக்காரராக மாற்றி இருக்கிறது. பிள்ளைகளுக்கும் அம்மாவுக்கும் அவரைக் கண்டாலே பயம்தான். அந்த அச்சம் தன் குணாதிசயங்களை எப்படி மாற்றியது என்பதை உண்மையாக விவரிக்கிறார். பாகிஸ்தானோடு விளையாடிய போட்டிகளில் பெரிய வெற்றி அடைந்ததும் தனக்கு ஏற்பட்ட ஆணவம், அந்த ஆணவத்தை பம்பாய் கிரிக்கெட் வீரர்களிடம் வெளிப்படுத்திய விதம், தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திண்டாடியது எதையும் மறைக்கவில்லை. அன்று மேற்கு-வடக்கு இந்திய வீரர்களுக்கு உள்ளே இருந்த பூசல்கள், கபில்தேவ் போன்றவர்கள் காட்டிய வெட்டி பந்தாக்கள் எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார். அவரது அகச்சிக்கல்களை உண்மையாக விவரிக்கிறார். சிறந்த தன்வரலாறு.
சச்சின் டெண்டுல்கரைப் பற்றி புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன்? காவஸ்கர், திராவிட், செவாக், கோலி என்ற வரிசையில் அவரே first among equals. ஆனால் அவரது Playing It My Way புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். இந்த மாட்சில் சென்சுரி அடித்தேன், இதிலே அடிக்கவில்லை என்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? மிக கவனமாக சர்ச்சைகளைத் (க்ரெக் சாப்பல் தவிர) தவிர்த்திருக்கிறார். அது போரடிக்கிறது.
சௌரப் கங்குலியே இந்தியாவின் தலை சிறந்த காப்டன் என்று நான் கருதுகிறேன். இத்தனைக்கும் கங்குலி கிரிக்கெட்டின் நுணுக்கங்களை பூரணமாக உணர்ந்தவர் என்றோ சிறந்த மேலாண்மை திறமை (management skills) கொண்டவர் என்றோ நான் கருதவில்லை.சிறந்த தலைமைப் பண்பு (leadership skills) கொண்டவர். எந்த சூழ்நிலையிலும், வெளிநாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி ஜெயிக்க முடியும் என்ற தன் நம்பிக்கையை அணியின் தன்னம்பிக்கையாக மாற்றியவர் அவர்தான். ஒரு போட்டியில், இரண்டு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் அத்தோடு காலி என்ற பயத்துக்கு முடிவு கட்டியவர் அவர்தான். அவருக்கு சச்சின், திராவிட், லக்ஷ்மண், கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற சீனியர்களும், கோச்சாக இருந்த ஜான் ரைட்டும், அணியின் இளைஞர்களான செவாக், யுவராஜ், பார்த்திவ் படேல், ஹர்பஜன், ஜாஹிர் கான் போன்றவர்களும் பெரிய பலமாக இருந்தார்கள். இன்னும் சிலருக்கு – முக்கியமாக சடகோபன் ரமேஷுக்கு – இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 11 பேர்தான் விளையாட முடியும் என்ற நிலையில் யாருக்காவது வாய்ப்பு மறுக்கப்படுவது சகஜம்தான்.
கங்குலியின் A Century Is Not Enough புத்தகம் அவரது பலங்களையும் பலவீனங்களையும் ஒருசேரக் காட்டுகிறது. 92-இல், 19 வயதில், அவருக்கு ஆஸ்திரேலியா செல்ல ஏன் வாய்ப்பு தரப்பட்டது என்பது புரியாத புதிர். அவருக்கு பதிலாக ராமன், ராபின் சிங் என்று யாராவது போயிருந்திருக்க வேண்டும். 96-இல் காம்ப்ளி சொதப்பாமல் இருந்திருந்தால் அவருக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது. அதற்குப் பிறகு அவர் குழுவில் நிரந்தரமாக பங்கேற்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் சொதப்பி ஓரிரு போட்டிகளில் drop செய்யப்படுவதை எல்லாம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகத்தான் கருதுகிறார். தான் சரியாக விளையாடவில்லை என்று ஒரு முறை கூட இந்தப் புத்தகத்தில் அவர் ஒத்துக் கொள்வதில்லை. அவர் கேப்டனாக விளையாடியபோது டெஸ்ட் போட்டிகளில் அவரது பாட்டிங் சுமார்தான். திராவிட்தான் தன் தோள்களில் டீமை சுமந்தார். சச்சினும் லக்ஷ்மணும் அவருக்கு பெருமளவில் உதவினார்கள். செவாக் அவ்வப்போது போட்டிகளின் போக்கையே மாற்றினார். கங்குலியின் பாட்டிங் பங்களிப்பு இவர்களோடு ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால் க்ரெக் சாப்பல் அதை சுட்டிக் காட்டியதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதே போல IPL போட்டிகளில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் அதையும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த combativeness-தான் அவரை ஒரு சிறந்த காப்டன் ஆக்கியது என்று நான் கருதுகிறேன்.
ஆனால் ஒரு ஸ்டார் பேட்ஸ்மன் அணியிலிருந்து விலக்கப்படும்போது அவரது எதிர்காலம் என்ன, அவர் திரும்ப வழி உண்டா என்று யாரும் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது எத்தனை முட்டாள்தனமான செயல்? அதேதான் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதை மனதைத் தொடும் வகையில் விவரித்திருந்தார்.
கங்குலி match-fixing, அசாருதீன்-டெண்டுல்கர் காலத்து தகராறுகள் ஆகியவற்றைப் பற்றி கவனமாக எதுவும் சொல்லாமல் தவிர்க்கிறார்.
Rahul Dravid: Timeless Steel எனக்கு மிகப் பிடித்த இன்னொரு கிரிக்கெட் வீரரைப் பற்றிய தொகுப்பு. திராவிட் 2000-2006 காலகட்டத்தில் – ஆறேழு வருஷத்துக்கு – இந்திய கிரிக்கெட் டீமின் முதுகெலும்பு. சச்சினும் லக்ஷ்மணும் செவாகும் கூட இவருக்கு அடுத்த படியில்தான். ஆனால் சச்சின், லக்ஷ்மண், செவாக், ஏன் கங்குலி கூட இவரை விட அழகாக விளையாடக் கூடியவர்கள். எப்போதும் எப்படி தன் ஆட்டத்தை உயர்த்துவது என்று சிந்தித்து அதை செயல்படுத்தினார். ஆனால் இந்தப் புத்தகம் அதிதீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும்தான்.
Nice Guys Finish First திராவிடின் வாழ்க்கை வரலாறு. போர். தவிர்த்துவிடலாம்.
வி.வி.எஸ். லக்ஷ்மணின் 281 and Beyond புத்தகத்தில் தெரிவது அவரது insecurity. இரண்டு மாட்சில் சரியாக ஆடவில்லை என்றால் நம்மை தூக்கிவிடுவார்கள் என்ற பயம் அவரது career முழுக்க வியாபத்திருந்ததாம். பிரச்சினை வேறு – அவர் நுழைந்தபோது சச்சின், அசார், திராவிட், கங்குலி, சித்து ஐவரும் தங்கள் இடத்தை ஸ்தாபித்திருந்தார்கள். இவர் ஆறாவது பாட்ஸ்மனாகத்தான் வர முடியும். இல்லை என்றால் ஓபனராக வர வேண்டும். 281க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் நிலைபெற்றார், ஆனால் ஒரு நாள் போட்டிகளில் நித்யகண்டம் பூர்ணாயுசுதான். 2003 உலகக் கோப்பை போட்டியில் தினேஷ் மாங்கியா அல்லது சஞ்சய் பங்கருக்கு பதிலாக அவர் விளையாடி இருக்க வேண்டும். காப்டன் கங்குலியும் கோச் ஜான் ரைட்டும் எடுத்த தவறான முடிவு அது. டெஸ்ட் போட்டிகளில் அவரும் தனக்கு ஒரு இடத்தைப் பிடித்த பிறகும் சச்சின், திராவிட், கங்குலி, செவாக் ஆகிய நால்வரும் நிலைபெற்றுவிட்டார்கள். கங்குலி காப்டனாக இல்லாதபோதுதான் அவருடைய பாட்டிங் பங்களிப்பு என்ன என்று பார்க்க முடிந்தது. அருமையான பாட்ஸ்மனாக இருந்தாலும் இவர் நான்காவது இடத்தில்தான் இருந்தார். தன்னுடைய இடம் உறுதியானது இல்லை என்ற அச்சம் அவரை முழுவதும் பரிணமிக்கவிடாமல் செய்துவிட்டது. படிக்கக் கூடிய புத்தகம்.
பரத் சுந்தரேசன் எழுதிய Dhoni Touch புத்தகம் தோனியின் ஆளுமையை விவரிக்க முயற்சிக்கிறது. அடுத்தவர் சொன்னதைக் கேட்டுக் கொள்வார், ஆனால் முடிவுகள் அவருடையது மட்டுமே; நண்பர்களை ஒரு நாளும் மறக்க மாட்டார் என்று சொல்கிறது. படிக்கலாம்.
யுவராஜ் சிங்கின் Test of My Life அவரது கான்சர் நோய் காலத்தை விவரிக்கிறது. கங்குலி ஓய்வு பெற்ற பிறகு யூவிக்கு அந்த இடத்திற்கான வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யூவியின் திறமை டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுதாக வெளிப்படவில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பல முறை ஏன் யூவி சொதப்புகிறார் என்று தோன்றி இருக்கிறது, ஆனால் அவரது உடல் நிலை கடைசி சில வருஷங்களாகவே சீராக இல்லை என்று தெரிகிறது.
மொத்தத்தில் Pataudi: Nawab of Cricketமற்றும் Imperfect புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன். 281 and Beyond, A Century Is Not Enough, Test of My Life, மற்றும் Dhoni Touch படிக்கக் கூடியவை, படித்தே ஆக வேண்டியவை அல்ல.
தொகுக்கப்பட்ட பக்கம்: கிரிக்கெட்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...