எனக்கு காந்தி மேல் விமர்சனங்கள் உண்டு. முக்கியமான விமர்சனம் காந்தியின் வழியில் நடப்பது, சமரசம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம் என்பதுதான். நேருவும் ராஜாஜியும் படேலும் கூட அப்படி சமரசம் இல்லாமல் தங்கள் வாழ்வை நடத்த முடியவில்லை. என் போன்ற சாதாரண மனிதர்களால் எப்படி முடியும்? காந்தி என் கண் முன்னால் தினமும் இருந்தால், என் பிரக்ஞையில் எப்போதும் இருந்தால் சமரசம் குறையலாம். ஆனால் காந்தி போன்ற உன்னத மனிதர்கள் அபூர்வமாகவே
பிறக்கிறார்கள் உருவாகிறார்கள், தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர் போய் எழுபது வருஷம் ஆகிவிட்டது, வாழ்வின் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்சினைகளில் காந்தியை எங்கிருந்து நினைவில் வைத்துக் கொள்வது?
எனக்கு விளக்க உரைகள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. கோனார் நோட்ஸ் எதற்கு, அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நேராகப் படித்துக் கொள்கிறேனே என்றுதான் நினைப்பேன். அதிலும் வீடியோ எல்லாம் பார்க்க எனக்கு பொறுமையே இருப்பதில்லை. வரி வடிவத்தில் (transcript) இருந்தால் விரைவில் படித்துக் கொள்ளலாமே என்று தோன்றும். ஆனால் காந்தியின் எழுத்துக்களை படிப்பது எனக்கு சுலபமாக இல்லை. ஜெயமோகன் ஒருவருடைய விளக்கங்களை மட்டுமே விரும்பிப் படிக்கிறேன். காந்தியை இன்னும் நெருக்கமாக உணர வைத்தவர் அவர் ஒருவரே. அவரது வீடியோ உரைகளையும் பார்க்க எனக்கு சாதாரணமாக பொறுமை இருப்பது இல்லைதான், ஆனால் என்னையும் இந்த உரை கட்டிப் போட்டு வைத்தது.
காந்தியம் எங்கே தோல்வி அடைகிறது என்பதைப் பற்றி அருமையாக உரை ஆற்றி இருக்கிறார். எனக்கு ஏற்கனவே இவர் சொல்வதைப் போன்ற எண்ணங்கள்தான் – ஆனால் என் எண்ணங்களை எனக்கே தெளிவாக்கிவிட்டார்.
அதிகம் விவரிக்க விரும்பவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்
இந்த உரையை நேரில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மற்ற பேச்சாளர்களை கேட்ட பிறகு ஜெ.வின் உரையைக் கேட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக சாரதா நம்பி ஆரூரனின் உரை (youtube-இல் இருக்கிறதா என்று தெரியவில்லை) – ஜெ. சொல்லும் அந்த “உண்மைக்குப் பக்கத்தில் இருக்கும் வேறொரு உண்மை”.
அன்று கூட்டம் முடிந்தவுடன், மேடைக்கு கீழே அதைப்பற்றி நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார்.
-பாலாஜி.
LikeLike