ஹாரி பாட்டர் வகை – பார்டிமேயஸ் நாவல்கள்

பார்டிமேயஸ் நாவல்கள் ஹாரி பாட்டர் வகையைச் சேர்ந்தவை. சிறுவர்களுக்காக, பதின்ம வயதினர்களுக்காக, இல்லை என்னப் போல அரைக்கிழமாக ஆன பிறகும் மனதளவில் வளராதவர்களுக்காக எழுதப்பட்டவை. விறுவிறுவென்று போகும், அமானுஷ்ய பின்புலம் கொண்டவை. எழுதியவர் ஜோனதன் ஸ்ட்ரௌட்.

பார்டிமேயஸ் சக்தி வாய்ந்த ஒரு பூதம். அலாவுதீனின் பூதம் போல. ஒரு ஜின்னி. கதைகள் நடக்கும் காலத்தில் மந்திரவாதிகள் சாம்ராஜ்யங்களை ஆள்கிறார்கள். இங்கிலாந்து முதன்மை சாம்ராஜ்யம். ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டு. மந்திரவாதிகளின் பலம் அவர்களால் பூதங்களை அடக்கி தங்கள் கட்டளைகளை நிறைவேற்றச் செய்வது. ஆதிகாலத்திலிருந்து – அதாவது எகிப்து, சுமேரியா, அட்லாண்டிஸ், சாலமன் காலத்திலிருந்து இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

முதல் புத்தகம் Amulet of Samarkand (2003). இதில் நதானியேலுக்கு வயது 11. அவனுக்கும் லவ்லேஸ் என்ற சக்தி வாய்ந்த மந்திரவாதிக்கும் சிறு சண்டை. நதானியேலுக்கு தன் வயதுக்கு மீறிய அறிவு, ஆர்வம். லவ்லேசை பழிவாங்க அவன் பார்டிமேயஸை அடிமைப்படுத்தி லவ்லேஸிடம் இருக்கும் ஒரு தாயத்தை திருடி வரச் செய்கிறான். தாயத்து – சமர்கண்ட் தாயத்து – பார்டிமேயசை விட பல மடங்கு சக்தி வாய்ந்த இன்னொரு பூதத்தை கட்டுப்படுத்துவது. லவ்லேஸ் அந்த தாயத்தை வைத்து இங்கிலாந்தின் பிரதமராக சதி செய்துகொண்டிருக்கிறான். தாயத்து திருடுபோனதும் அதைத் தேடி அலைகிறான். நதானியேலின் கார்டியன் ஆன அண்டர்வுட், நதானியேல் மேல் பாசம் காட்டும் ஒரே ஜீவனான அண்டர்வுட்டின் மனைவி ஆகியோரைக் கொன்று அந்தத் தாயத்தை மீண்டும் கைப்பற்றுகிறான். நதானியேலும் பார்டிமேயசும் எப்படி லவ்லேசின் சதியை முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.

இரண்டாவது புத்தகம் Golem’s Eye (2004). இப்போது நதானியேல் அரசில் உயர்பதவி வகிக்கிறான். லண்டனில் அவ்வப்போது ஒரு பெரிய களிமண் சிலை இரவுத் தாக்குதல்களை நடத்துகிறது. மந்திரங்கள் அறியாத சில சாதாரணர்களை மந்திரங்களும் பூதங்களும் ஒன்று செய்ய முடிவதில்லை. அவர்கள் சின்ன அளவில் கொரில்லாத் தாக்குதல்களை நடத்துகிறார்கள். நதானியேலுக்கு அவர்களைக் கண்டுபிடித்து அடக்கும் பொறுப்பு தரப்படுகிறது. பார்டிமேயஸின் உதவியுடன் நதானியேல் மீண்டும் வெற்றி பெறுகிறான்.

Ptolemey’s Gate (2005) அடுத்த புத்தகம். இந்த முறை அரசை கவிழ்க்க சதிகாரர்கள் செய்யும் முயற்சிகள் பூதங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடுகின்றன. நதானியேல், கிட்டி, பார்டிமேயஸ் ஒன்றாகச் சேர்ந்து அதிகாரத்தை மக்களுக்கு மீட்கிறார்கள். ஆனால் நதானியேல் தன் உயிரை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நாவல்கள் விறுவிறுப்பான பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமே. பார்டிமேயஸின் நக்கலான பேச்சும் விவரிப்பும் கதைகளை சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால் பதின்ம வயதில் சுவாரசியமாக இருக்கும். எந்த வயதாக இருந்தாலும், ஹாரி பாட்டர் கதைகளை நீங்கள் ரசித்தால் இவற்றையும் ரசிக்க வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்