ஒரிஜினல் பதிவு 2010-இல் எழுதப்பட்டது.
அசோகமித்ரன் ஒரு மேதை. சந்தேகமே இல்லை.
அயோவா பல்கலைகழகம் உலக எழுத்தாளர்களை ஒரு ஆறேழு மாத காலம் செமினார் மாதிரி ஏதோ ஒன்றுக்கு அழைத்திருக்கிறது. தமிழுக்கு அசோகமித்திரன் என்ற தியாகராஜன் – டகரஜான் என்று ஜப்பானிய பெண் எழுத்தாளர் கஜுகோவால் அழைக்கப்படுபவர். சைவ உணவு கிடைக்காமல், சரியாக சமைக்கவும் தெரியாமல், காப்பி (அதுவும் அமெரிக்க காப்பி), கார்ன் ஃப்ளேக்ஸ், சீரியல், பாதி வெந்த சாதம் இவற்றை வைத்து காலம் தள்ளுபவர். அவரது அனுபவங்கள்தான் இந்த கதை.
கிண்டலும் நகைச்சுவையும் புத்தகம் பூராவும் இழைந்தோடுகிறது. நாலு வரிக்கு ஒரு முறையாவது புன்னகையாவது வந்தே தீரும். ஷூவில் இருக்கும் அட்டையை எடுக்காமல் ஷூ கடித்துவிடுகிறது. யாரோ ஒரு நண்பன் வீட்டுக்கு போனால் நண்பனின் காதலியின் கணவன் இவரை தன் மனைவியின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட வருகிறான். பெருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு கதை எழுத திட்டம் இடுகிறார். எதியோப்பியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இவரை உடும்பு பிடியாக பிடித்துக் கொள்கிறார்.
பி.ஜி. வுட்ஹவுசுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்தாளர் தமிழில் கிடையாது என்று நினைத்திருந்தேன். அவரை விட subtle, மென்மையான, மேன்மையான நகைச்சுவை.
ஒரு கதை – மனிதர் சான் ஃபிரான்சிஸ்கோ, மற்றும் பல இடங்களில் நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் டென்வர் நகரத்தில் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். இந்தக் கதையை நான் சிறு வயதில் குமுதத்தில் படித்தேன். ஒன்றுமே புரியவில்லை, இதெல்லாம் என்னடா கதை என்று அலுத்துக் கொண்டேன். பீஹாரில் முதல் முறை பஸ்சுக்காக காத்திருந்து ட்ரக்கர் என்று அங்கு அழைக்கப்பட்ட ஒரு வண்டியில் பயணம் செய்யும்போதுதான் இந்த கதை திடீரென்று எனக்கு புரிந்தது. அதற்கு பத்து வருஷம் ஆயிற்று!
உண்மையில் அந்தக் கதை புரிந்த தருணம்தான் நான் அசோகமித்திரனின் மேதமையை முதல் முறையாக உணர்ந்த தருணம். நான் அசோகமித்திரனின் பக்தன் ஆனது அந்தத் தருணத்தில்தான். பரமபக்தன் ஆனது பிரயாணம் சிறுகதையைப் படித்த தருணத்தில்.
ஒற்றன் எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இடம் பெறுகிறது. ஆனால் ஆச்சரியம், ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இல்லை. ஜெயமோகனே ஏன் என்று ஒரிஜினல் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அவரது வார்த்தைகளில்:
இலக்கிய நகைச்சுவைக்கு நான் மூன்று அளவுகோல்களை வைப்பேன்.
1. மனிதசிந்தனைகளையும் செயல்களையும் நுட்பமாக அவதானித்து பதிவுசெய்தல் . உதாரணம் அபெ குபேங்கோ
2. உயர்தர அங்கதம். கேலி அல்ல. பகடி அல்ல. அங்கதம் தேவை. கேலியும் பகடியும் மேலோட்டமானவை. அங்கதம் மானுட வாழ்க்கையில் உள்ள அபத்தத்தை சித்தரிக்கிறது. உதாரணம் அந்தப் பூண்டு வாசனை.
3. எதிர்மறை தரிசனம். உன்னதமான மெய்மைத்தரிசனங்களை தலைகீழாக்கும் பார்வை. அந்த அம்சம் இக்கதைகளில் இல்லை என்பதனாலேயே இதை நான் அசோகமித்திரனின் சாதனை என்பதில்லை. அதற்கு அவரது பல கதைகள் உள்ளன.
அதே பதிவிலேயே ஜெயமோகன் தான் இந்தப் புத்தகத்தை விரும்புவதையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது நல்ல புத்தகம், ஆனால் இதை விட அருமையாக அசோகமித்திரன் எழுதி இருக்கிறார் என்பது அவர் கருத்து. அவரது வார்த்தைகளில்:
சாதாரணமாக சொல்லக்கூடிய ஆக்கம் அல்ல. ஒற்றன் சிறுகதைகளாக வந்தது. பின்னர் நாவலாக ஆக்கப்பட்டது. சிறுகதைகளாக இரு கதைகள் மகத்தானவை. ஒன்று அந்த பூண்டு வாசனை கதை. இன்னொன்று இலாரியா. சுஜாதா அதைப் போன்ற ஒரு கதையை கற்பனையே செய்திருக்கமுடியாது…
நர்மதா பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் இரண்டும் வெளியிட்டிருக்கின்றன. காலச்சுவடு பதிப்பக வெளியீட்டில் இரண்டு அத்தியாயங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. வாங்குபவர்கள் காலச்சுவடு பதிப்பக புத்தகத்தை வாங்குங்கள்! இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிவசங்கரா விளக்குகிறார்:
நர்மதா பதிப்பகத்தின் வெளியீட்டில் சேர்க்கப்படாத அந்த இரண்டு அத்தியாயங்கள் – “இப்போது நேரமில்லை” மற்றும் “அம்மாவின் பொய்கள்” என்று நினைக்கிறேன். 2003-04 காலகட்டத்தில் “ஒற்றன்” நாவலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, புத்தகத்தின் நீளத்தைக் கூட்டவேண்டி, தனிப் பிரசுரங்களாக இருந்த இவ்விரு அத்தியாயங்களும் புத்தகத்தில் மேலதிகமாக இணைக்கப்பட்டன
“ஒற்றன்”-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு “Mole!“.
நண்பர்கள் ராஜ் சந்திரா, ரெங்கசுப்ரமணி, சிமுலேஷன் மூவரும் இந்தப் புத்தகத்தை ரசித்திருக்கிறார்கள். ராஜ் சந்திரா தன்னுடைய டாப் டென்னில் இடம் பெறும் புத்தகம் என்கிறார். ரெங்காவின் பதிவு இங்கே. சிமுலேஷன் இந்த புத்தகத்தின் பரம ரசிகர். இங்கே அத்தியாயம் அத்தியாயமாக அலசி இருக்கிறார்.
ஆனால் இந்தத் தளத்தின் ஒரு காலத்திய சக பொறுப்பாளனான பக்ஸ் இதை பெரிதாக ரசிக்கவில்லை. அவனது வார்த்தைகளில்:
ஒற்றன் என்னைப் பொறுத்தவரை ஒரு லைட் கட்டுரை. பெரிதாக பாராட்டுவதற்கு இருப்பதாக தெரியவில்லை. சுஜாதவின் பிரிவோம் சந்திப்போம் பார்ட் 2 படித்தவுடன் என்ன தோன்றியதோ அது தான் தோன்றியது. தங்கள் அனுபவத்திற்கு வடிகால். ஆனால் சுஜாதா explicitஆக புனைக்கதையின் மூலம் சொல்லிய அமேரிக்க அனுபவத்தை, அசோகமித்ரனின் ஒரு 10 சதவிகிதம் travelogue, 20 சதவிகிதம் கதை போலவும், 70 சதவிகிதம் நகைச்சுவை கலந்த கட்டுரை மூலம் subtleஆக் கூறியிருக்கிறார். அதனால் இது பி.ச. வை விட மதிப்பு பெறுகிறது. “ஒற்றன்” என்ற தலைப்பு ஒரு அட்ராக்ஷன். அசோகமித்ரனின் பிரயாணம் போன்ற சிறுகதையை ஒப்பிடுகையில் இது சாதாரணப் படைப்பே.
பதிவை எழுதி பத்து வருஷம் ஆயிற்று, இந்தப் பத்து வருஷத்தில் அவனுடைய எண்ணமும் மாறி இருக்கலாம், என், ஜெயமோகன், ரெங்கா, ராஜ் சந்திரா, சிமுலேஷன் கண்களின் வழியாக அவனாலும் இந்தப் புத்தகத்தை பார்க்க முடிந்திருக்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்
மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அவரது கரைந்த நிழல்கள், பதினெட்டாவது அட்சக்கோடு, ஒற்றன் மூன்றும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள். மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு இணையாக இலக்கியம் படைத்தவர்கள் (அதாவது அந்த அளவுக்கு அவர்களது எழுத்து நேர்த்தியாக இருந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் க்ராஃப்ட்) என்று தமிழில் நான் இருவரை மட்டுமே சொல்வேன்: அசோகமித்திரனும், சுஜாதாவும். அசோகமித்திரனின் தண்ணீர் நாவலைக் குறியீட்டு நாவல் என்று சொல்கிறார்கள். அதனை ஒரு முறை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனால் எனக்குப் புரியவில்லை. அதேபோல அவரது இன்று என்ற நாவலும் எனக்குப் புரியவில்லை.
LikeLike
சுந்தர், கரைந்த நிழல்கள், பதினெட்டாவது அட்சக்கோடு, ஒற்றன் மூன்றும் எனக்கும் பிடித்த நாவல்கள். தண்ணீரும்தான்.
LikeLike