“Merry Christmas!” என்ற வாழ்த்து எப்படி ஆரம்பித்தது?

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “A Christmas Carol” குறுநாவலால்தான். அதற்கு முன்னும் இப்படி வாழ்த்து இருந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்த குறுநாவல் வெளிவந்த பிறகுதான் இந்த வாழ்த்து பிரபலம் ஆகி இருக்கிறது.

குறுநாவல் 1843-இல் – சரியாகச் சொன்னால் டிசம்பர் 19, 1843-இல் – வெளியாகி இருக்கிறது. டிக்கன்ஸ் இதை கிறிஸ்துமஸுக்காகவே எழுதினார்.

டிக்கன்ஸ் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவரது எழுத்து மெலோட்ராமா நிறைந்தது (Great Expectations-இன் மிஸ் ஹாவிஷம்). அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் (சிட்னி கார்டன்-சார்லஸ் டார்னே உருவ ஒற்றுமை) விலக்கல்ல. ஆனாலும் அவரது எழுத்து வீரியம் வாய்ந்தது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அவ்வளவாக பேசப்படாத, அவரது எழுத்தில் கொஞ்சம் வித்தியாசமான, Hard Times.

A Christmas Carol புத்தகத்தை முதன்முதலாகப் படித்தபோது எனக்கு 20 வயது இருக்கலாம். Christmas Carol என்றால் என்ன என்று கூடத் தெரியாது, ஒரு பாடலைக் கூட நான் கேட்டதில்லை. என் பொது அறிவு அந்த அளவில்தான் இருந்தது. ஆனால் ஸ்க்ரூஜ் என்ற படிமம் மனதில் இருந்தது, எங்கேயோ கேள்விப்பட்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் வழியாக, அதுவும் ஏறக்குறைய தீபாவளி மலருக்காக எதையோ எழுதி அது ஒரு படிமம் ஆகவே ஆகிவிட்டதா, இத்தனை தாக்கம் உள்ள எழுத்தா என்று வியந்து போனேன். பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது என்று தெரிந்ததும் வியப்பு இன்னும் அதிகரித்தது.

எபனேசர் ஸ்க்ரூஜ் பணக்காரன்; கஞ்சன். எல்லாவற்றையும் ரூபாய்-பைசா, லாபநஷ்ட நோக்கில்தான் பார்க்கிறான். கிறிஸ்துமஸை வெறுப்பவன். ஏனென்றால் அன்று தன்னிடம் பணி புரியும் பாப் க்ராட்சிட்டுக்கு விடுமுறை தர வேண்டி இருக்கிறது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் அவனுடைய தொழில் கூட்டாளி ஜேகப் மார்லியின் ஆவி அவனைப் பார்க்க வருகிறது. மார்லிக்கு முக்தி கிடைக்கவில்லை, அவனது சுயநலம் அவனை பூமியிலேயே சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. மார்லி ஸ்க்ரூஜிடம் அடுத்தவருக்கு உதவி செய், இல்லாவிட்டால் உனக்கும் என் கதிதான் என்று அறிவுரைக்கிறான்.

ஸ்க்ரூஜுக்கு மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால கிறிஸ்துமஸ் காட்சிகளைக் காட்டுகின்றன. ஸ்க்ரூஜிற்கு இருந்த பந்தங்கள் – அவனது சகோதரியுடன், அவனது முதலாளியுடன், அவனது “காதலியுடன்” – எல்லாம் பணம் சேர்க்கும் வெறியால் ஒவ்வொன்றாக அறுபடுகின்றன. கடந்த கால கிறிஸ்துமஸில் ஸ்க்ரூஜின் காதலி அவனது மாற்றத்தை விவரிக்கிறாள், ஸ்க்ரூஜால் தாங்க முடியவில்லை. நிகழ்காலத்தில் பாப் க்ராட்சிட்டின் குடும்ப கிறிஸ்துமஸ் விருந்து காட்டப்படுகிறது. க்ராட்சிட்டின் மகன் டைனி டிம் நோயாளி, பணப் பற்றாக்குறையால் விரைவில் இறக்கப் போகிறான். எதிர்காலத்தில் ஸ்க்ரூஜ் இறக்கிறான், யாருக்கும் அவன் சாவில் அக்கறை இல்லை.

ஸ்க்ரூஜ் கருணாசீலனாக மனம் மாறுகிறான். எல்லாருக்கும் உதவி செய்கிறான். தன் குடும்பத்தோடு மீண்டும் இணைகிறான்.

முதல் முறை படிக்கும்போது கூட இது என்ன அறுபதுகளின் பிரபல இயக்குனர்களான பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் எடுக்கும் திரைப்படங்கள் மாதிரி இருக்கிறதே என்று தோன்றி கொண்டே இருந்தது. கஞ்சத்தனம் செய்யும் பணக்காரன் மனம் மாறும் சாதாரண கதைதானே என்று தோன்றியது. அதே நேரத்தில் டிக்கன்ஸின் எழுத்துத் திறமையும் (craft) தெளிவாகத் தெரிந்தது. ஸ்க்ரூஜின் தொழில் கூட்டாளியான மார்லியின் ஆவி தோன்றுவது, நேற்று-இன்று-நாளை என்று மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் வரும் காட்சிகளை வடிவமைத்திருப்பது, மிகைஉணர்ச்சி காட்சியாக இருந்தாலும் ஸ்க்ரூஜிடம் பணி புரியும் பாப் க்ராட்சிட் வீட்டு கிறிஸ்துமஸ் விருந்து – குறிப்பாக டைனி டிம்மின் சித்தரிப்பு என்று மிகக் கச்சிதமாக வடிவமைத்திருப்பது எல்லாம் தெரிந்தது. உண்மையில் மோசமான கதையாக இருந்தாலும் சரி, தேய்வழக்காகவே (cliche) இருந்தாலும் சரி, நல்ல காட்சிகளை அமைத்து சிறந்த திரைக்கதையாக மாற்றலாம் என்று உணர்ந்தது அப்போதுதான். மேலும் இது தேய்வழக்குதானா என்று சந்தேகமும் எழுந்தது. தேய்வழக்கும் ஒரு காலத்தில் புதுமையாக இருந்திருக்கும் இல்லையா? கஞ்சத்தனத்தை ஸ்க்ரூஜ் என்ற படிமம் இன்று உணர்த்துகிறது என்றால் ஏன் இந்த உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் பணக்காரன் என்ற தேய்வழக்கு இந்தப் புத்தகத்திலிருந்து உருவாகி இருக்கக் கூடாது என்று தோன்றியது.

சுருக்கமாகச் சொன்னால் டிக்கன்ஸ் இது பெரிய மானிட தரிசனத்தைக் காட்டுகிறது என்று நினைத்திருப்பார். ஆனால் அவர் காட்ட விழையும் தரிசனம் நூறு நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தேய்வழக்காக மாறிவிட்டது. ஆனால் அவரது எழுத்துத் திறமை புத்தகத்தை இன்னும் காலாவதி ஆகிவிடாமல் காப்பாற்றுகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Merry Christmas!

தொகுக்கப்பட்ட பக்கம்: டிக்கன்ஸ் பக்கம்

 

3 thoughts on ““Merry Christmas!” என்ற வாழ்த்து எப்படி ஆரம்பித்தது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.