ஆர். சூடாமணி சிறுகதைகள்

சூடாமணியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அதிகமாகப் படித்ததில்லை. இணைப்பறவை சிறுகதை எப்போதோ பள்ளிக் காலத்தில் துணைப்பாடமாக இருந்தது என்று நினைவு. அவரது சிறுகதைகள் அச்சில் இல்லை என்று நினைக்கிறேன். இணையத்திலும் அதிகமாக கிடைப்பதில்லை. அவருக்கு அஞ்சலி எழுதியபோது கூட குறைப்பட்டுக் கொண்டேன்.

சிறுகதைகள் தளத்தில் திடீரென்று சில சிறுகதைகளைப் பார்த்தேன். அதனால்தான் இந்தப் பதிவு. குறிப்பாக சொந்த வீடு சிறுகதையைப் படித்ததால்தான் இதை எழுதுகிறேன்.

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு கூட புத்தகங்கள் என் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தன. இந்த வருஷம் இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்க வேண்டும், இது ரொம்ப நாளாக தள்ளிப் போகிறது, இதை முடிக்க வேண்டும் என்று குருட்டு யோசனைகள் வந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் பெருங்காயம் வைத்த பாண்டம்தான். படிப்பது பழகிவிட்டது, அதனால்தான் படிக்கிறேன். சாப்பிடும்போது படிப்பது என்று ஒரு பழக்கம் இருந்தது, அது கூட இப்போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது என்று மாறி வருகிறது. உழைப்பு தேவைப்படும் புத்தகங்களை எடுத்துப் படிப்பதே இல்லை, பல மூறை படித்த புத்தகத்தை திருப்பிப் படிக்கிறேன். புத்தகம் ஒன்றை வாங்கி சில வருஷங்கள் ஆகிவிட்டன. புதிதாகப் புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் வைக்க இடமில்லை என்ற நிதர்சனம். வாழ்க்கைப் பிரச்சினைகள், சோகங்கள், வயதாவது எல்லாம் சேர்ந்து என்னை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இருக்கும் புத்தகங்களைத் தூக்கிப் போடவும் மனதில்லை. பாதிக்கு மேல் குப்பைதான், டைம் பாஸ்தான், இருந்தாலும் அலமாரிகளில் அடைத்து வைத்திருக்கிறேன்.

சொந்த வீடு சிறுகதை வயதான, வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அப்பா. பெரிய வாடகை வீட்டில் பல வருஷங்களாகக் குடி இருக்கிறார்கள். வீட்டின் சொந்தக்காரர் காலி செய்ய சொல்லிவிட்டார். ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி குடியேறப் போகிறார்கள். அப்பாவுக்கு ஒரு சின்ன அறை, அறை கூட இல்லை, மரத்தடுப்பால் அறை மாதிரி ஒரு இடம், அவ்வளவுதான். அப்பாவிடம் ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள்.

என்னையேதான் கண்டேன். மேலே என்ன சொல்ல?

சூடாமணி குறிப்பிட வேண்டிய எழுத்தாளர்தான். இலக்கியம்தான் படைத்திருக்கிறார். ஆனால் அவர் புதுமைப்பித்தனோ, அசோகமித்ரனோ அல்லர். அவருடையது மெல்லிய, குரல் எழும்பாத எழுத்து. மத்யமர், மேல் மத்யமர் பின்புலம். சில சமயம் உண்மையான சித்தரிப்பு வந்து விழுந்துவிடுகிறது.

சொந்த வீடு சிறுகதையையே எடுத்துக் கொள்ளுங்கள். குறைகள் தெரிகின்றன. நேர்கோட்டில் செல்லும், என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியும் எழுத்து. அதை உயர்த்துவது, புத்தகப் பிரியரான அப்பாவின் தவிப்பு உண்மையாக இருப்பதுதான்.

இணைப்பறவையிலும் அப்படித்தான். மனைவியை இழந்த தாத்தாவின் துயரம் அவருடையது, அவருடையது மட்டுமே. அது உண்மையாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் பேரன் பேத்திகள் தாத்தா மனசு கல்லு என்று பேசிக் கொள்வதெல்லாம் தேவையே இல்லாத (ஆனால் உண்மையான) சித்தரிப்பு.

அன்னியர்கள் சிறுகதையிலும் அக்கா தங்கை உறவு, அவர்களுக்குள்ளே உள்ள குணாதிசய வேறுபாடுகள் எல்லாம் உண்மையாக இருக்கின்றன. என் கண்ணில் இந்தக் கதையும், கடற்கரையில் ஒரு புது வித ஜோடி சிறுகதையும், சாம்பலுக்குள் என்ற சிறுகதையும் கச்சிதமாக எழுதப்பட்டவை. தேவையற்ற வார்த்தைகளே இல்லை.

இந்த ஐந்தையும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஜெயமோகன் தனது seminal சிறுகதைப் பட்டியலில் டாக்டரம்மா அறை என்ற சிறுகதையைப் பரிந்துரைக்கிறார். அது கிடைப்பேனா என்கிறது.

சூடாமணி பெண் எழுத்தாளர் என்றே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கு பெண் என்ற அடையாளம் தேவையில்லை, எழுத்தாளர் என்று சொன்னால் போதும் என்று தோன்றுகிறது.

சூடாமணியைப் பற்றிய் அருமையான கட்டுரை ஒன்றை சு. வேணுகோபால் எழுதி இருக்கிறார். முழுமையான அலசல் என்றே சொல்லலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சூடாமணி பக்கம்