முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணாக்கர் இவர்தானாம். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை இருவரும் இவரிடத்தில் படித்தவர்களாம். 56-57 வயதில், 1921-ஆம் ஆண்டு மறைந்தார்.
முதலியார் பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களை பதிப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆசாரக்கோவை நூலுக்கு இவரது பதிப்பை செம்பதிப்பாகக் கருத வேண்டும். பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி ஆகிய பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். அறநெறிச்சாரம், ஹரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம் ஆகிய நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
முதலியார் எழுதிய அபிநவக் கதைகளை தமிழின் முதல் சிறுகதைகளாக எடுத்துக் கொள்ளலாம். கமில் சுவலெபில் அப்படித்தான் சொல்கிறார். என்ன, ஏறக்குறைய சிறுவர் கதைகள் மாதிரிதான் இருக்கும், அதனால் இவை சிறுகதைகள்தானா என்று கேள்வியும் கேட்கலாம். ஆனால் இந்தக் கதைகளின் வயது, நடை ஆகியவை எனக்கு charming ஆக இருந்தன.
ஆனால் முதலியாரின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவர் கட்டுரைகளைத்தான். அவை இன்றும் படிக்கக் கூடிய நடையில் இருக்கின்றன. சரளமாக எழுதி இருக்கிறார். இதே காலத்தில் எழுதிய பரிதிமால் கலைஞரை எல்லாம் தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருக்கிறது. இந்த நடையை அவரது முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.
தமிழ் (1904) என்ற தலைப்பில் தமிழ் மொழி, இலக்கண இலக்கியம், வடமொழி, தமிழரின் பூர்வீகம், பழமொழிகள், ஜாதிகள் என்று பலவற்றையும் பற்றி அன்று தெரிந்ததை வைத்து சிறப்பாக கட்டுரை எழுதி இருக்கிறார். இன்றும் படிக்கக் கூடியவையே. அவரது தமிழ்ப்பற்று தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அது வெறி ஆகிவிடவில்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தமிழ் வியாசங்கள் (1915) என்றும் பலவும் எழுதி இருக்கிறார். இவை அனேகமாக அறிவுரைகள். நான் ரசித்தது அதில் அங்கும் இங்கும் வரும் பழமொழிகளைத்தான். சிறு வயதில் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள – “பிள்ளைக்கு வாத்தியார், பெண்ணுக்கு மாமியார்” ! என் பெண்களிடம் சொன்னால் அடிக்க வருவார்கள், ஆனால் இது மூன்று தலைமுறைக்கு முன் உண்மையாக இருந்திருக்கும்தானே! (என் அத்தை ஒருவருக்கு என் அம்மாவுடன் ஏதோ தகராறு வந்தபோது சிறுவனான என்னிடம் “நாத்தனாரை எதிர்த்துப் பேசுகிறாளே உன் அம்மா!” என்று குறைப்பட்டுக் கொண்டாள். நாத்தனார் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது என்று எனக்கு தோன்றிய அதே சமயம் என் அம்மாவுக்கு 20 வருஷம் மூத்த என் அத்தைக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தோன்றியது. தினமும் ஒரு அணா சேமித்தால் “ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை!” – அதாவது ஆயிரம் நாளில் 62.50 ரூபாய் சேருமாம்.
தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். கம்பன் (1902), திருவள்ளுவர் சரித்திரம், கண்ணகி சரித்திரம் (1905), அக்பர், குசேலர் சரித்திரம், மஹாதேவ கோவிந்த ரானடே ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். பஞ்சலட்சணம் என்னும் இலக்கண நூலையும் (1903) மாணவர்களுக்காக எழுதி இருக்கிறார். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகையில் கற்பலங்காரம் என்ற நாவலையும் எழுதினாராம். வ.உ. சிதம்பரம் பிள்ளை இவருடன் சேர்ந்து தமிழாராய்ச்சி செய்திருக்கிறார். ராபின்சன் க்ரூசோ நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
முதலியார் தமிழ் இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு பற்றி தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். குறுந்தொகையில் நான்கு விழுக்காடு வடமொழிச் சொற்களாம். ஔவையார் பாடல்களில் எட்டு விழுக்காடாம். நான்மணிக்கடிகையில் 20 சதவிகிதமாம். திருக்குறளில் அதிகாரத்துக்கு ஒன்றிரண்டு வடமொழி வார்த்தைகளாம். நாலடியாரில் ஐந்து பாடல்களுக்கு ஒரு வடமொழி சொல்லாம். கரைத்துக் குடித்திருக்கிறார்.
முதலியாரின் மகன்களின் பெயர்கள்: பரிமேலழகர், சேனாவரையர், நச்சினார்க்கினியர்!
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்