குறுந்தொகை 3

குறுந்தொகை 2 பிரபலமான “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி“. சிவனே மதுரை கோவிலில் இருந்து இறங்கி வந்து பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று பாடி பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாராம். நக்கீரர் சிவன் சொல்வது தவறு என்று வாதாடினாராம். எனக்கு இது கவிதையாகவே தெரிவதில்லை. சின்ன வயதில் கூட. பள்ளிப் பருவத்தில் சிவன் இப்படி ஒரு கவிதையை எழுதியதற்கு பதிலாக கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாம் என்று நக்கலடிப்பேன்.

முழுமைக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

– இறையனார், குறிஞ்சித்திணை.

எனக்கு அடுத்தபடி பிடித்த கவிதையான குறுந்தொகை 3க்கு போய்விடுகிறேன்.

தலைவி கூற்று:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்பு (Interior Landscape புத்தகத்திலிருந்து)

What She said:

Bigger than earth, certainly,
Higher than the sky,
More unfathomable than the waters
Is this love for this man

Of the mountain slopes
Where bees make rich honey
From the flowers of the Kurinji
That has such black stalks

தேவகுலத்தார், குறிஞ்சித் திணை.

ஐந்து வரியில் ஒரு microcosm-த்தையே காட்டிவிடுகிறார்.

சாதாரண விஷயம். என் காதல் இவ்வளவு பெரியது என்று தலைவி இரண்டு கைகளையும் எத்தனை தூரம் விரிக்க முடியுமோ அதற்கு மேலும் கொஞ்சம் விரித்துக் காட்டுவது போன்ற ஒரு கவிதை. அப்படி எல்லாம் சிந்திக்கும் நாயகிக்கு என்ன வயதிருக்கும்? வாலிபத்தின் காதலாகத்தான் இருக்க முடியும். இளைஞர்களின் காதல் காதலிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் (அவர்கள் பெற்றோர்களாக இல்லாத பட்சத்தில்) புன்னகைக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு கணத்தைத்தான் கவிஞர் காட்டுகிறார்.

இரண்டாம் பகுதியாக நாயகன் எந்த ஊர்க்காரன் என்று சொல்வதுதான் எனக்கு இந்தக் கவிதையை இன்னும் உயர்த்துகிறது. கவிதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

ராமானுஜன் ‘நிலத்தினும் பெரிதே’ என்பதை ‘Bigger than earth’ என்று மொழிபெயர்த்திருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும். ‘Bigger than earth, certainly,’ என்று மொழிபெயர்த்திருப்பது அபாரமாக இருக்கிறது. அதை நாயகி எப்படி சொல்லி இருப்பாள்? ‘Bigger than earth’ என்று ஆரம்பித்துவிட்டு, ஒரு நொடி அது உண்மைதானா, இல்லை மிகைப்படுத்திச் சொல்கிறோமா என்று யோசித்துவிட்டு, ‘certainly’ என்று தொடர்ந்திருக்க வேண்டும். ராமானுஜன் கவிதையை உள்வாங்கி அதைக் கவிதையாகவே மொழிபெயர்க்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.