கமல் பரிந்துரை: அடிமையின் காதல்

எனக்கு வணிக நாவல்களில் கொஞ்சம் விருப்பம் உண்டு. அதுவும் சரித்திர நாவல்களில் விருப்பம் உண்டு. வாண்டு மாமாவைத் தாண்டி பெரியவர் புத்தகங்களுக்கு வந்தபோது சாண்டில்யனைத்தான் முதலில் விரும்பிப் படித்தேன். சாண்டில்யனே குழந்தை எழுத்தாளர்தானே என்று நக்கல் அடிப்பவர்களுக்கு பிடி சாபம்! ஜெகசிற்பியனையும் அகிலனையும் படிக்கக் கடவது!

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்கிறார். நான் கேள்விப்பட்டிராதது ரா.கி. ரங்கராஜன் எழுதிய அடிமையின் காதல் ஒன்றுதான். என்னடா இது, எனக்குத் தெரியாத வணிக நாவலா, அதிலும் நானும் ரா.கி.ர. எழுதிய முப்பது நாற்பது புத்தகமாவது படித்திருப்பேன், கேள்வியே பட்டதில்லையே, அதுவும் சரித்திர நாவலா என்று வியந்தேன்.

இணையத்தில் எங்கோ கிடைத்தது. படித்துப் பார்த்ததும் இன்னொரு வித வியப்பு. ஜெயமோகனையும் அசோகமித்ரனையும் சுந்தர ராமசாமியையும் கி.ரா.வையும் பரிந்துரைத்த அதே கமலா இதையும் பரிந்துரைத்தாரா என்று வியப்பு. மிகச் சராசரியான, குமுதத்தின் பக்கங்களை நிரப்புவதற்காகவே எழுதப்பட்ட நாவல். போயும் போயும் இதைப் பரிந்துரைத்தாரா என்று ஆச்சரியப்பட்டேன். என் கண்ணில் ரா.கி.ர.வே எழுதிய நான், கிருஷ்ணதேவராயன் இதை விடச் சிறந்த நாவல்.

பிறகு ரா.கி.ர. இந்த நாவலை 1966-67 வாக்கில் எழுதி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. அப்போது கமலுக்கு பனிரண்டு வயதிருக்குமா? இளமைப் பருவத்தில் வாசிப்பின் சாத்தியங்களை நம்மை உணர வைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் நம் மனதில் ஒரு soft corner இருக்கிறது. கல்கியும் க.நா.சு.வும் ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய ராஜாம்பாளை விதந்தோதி இருக்கிறார்கள். நான் சாண்டில்யனை எத்தனை குறை சொன்னாலும் அவர் எழுதி நான் படிக்காமல் விட்ட நாவல் கிடைத்தால் (நாலைந்து இருந்தால் அதிகம்) தவறாமல் படிப்பேன். இரும்புக் கை மாயாவி, அலிஸ்டர் மக்ளீன் என்று எனக்கு ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஜெயமோகன் வணிக நாவல்கள் பரிந்துரைகளில் பலவும் அவரது கறாரான விமரிசனப் பாணியில் பார்த்தால் படு சுமாரான வணிக நாவல்களாக இருக்கும். கமலுக்கும் இந்த நாவல் அப்படித்தான் என்று யூகிக்கிறேன்.

நாவல் வெளிவந்தபோது விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். ஐம்பதுகளில் எழுதி இருந்தால் எம்ஜிஆர் அனேகமாக திரைப்படமாக்கி இருப்பார். அவருக்கேற்ற கதைதான். நாயகன் கத்திச் சண்டை, குதிரை ஏற்றம், யானை சவாரி, எழுபது அடி கொடிக் கம்பத்தில் ஏறுதல், முடி திருத்துதல், நாதசுரம் வாசித்தல், குரல் மாற்றிப் பேசுதல் (ventriloquism) என்று ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கரைத்துக் குடித்திருக்கிறான். அவனுக்கு என்ன வேண்டுமென்றாலும் யாராவது வந்து உதவி செய்துவிடுகிறார்கள். வெள்ளைக்காரர்களின் சிறையிலிருக்கும் சிவசிதம்பரத்தைப் பார்க்க வேண்டுமா? உடனே ஒரு வெள்ளைக்காரக் குழந்தை வந்து வழிகாட்டுகிறது. பாதாளச் சிறையிலிருக்கும் நாயகியை விடுவிக்க வேண்டுமா? சிறைக்குப் போகும் ரகசிய வழி என்று அவனுக்காகவே தெளிவாக அவன் சாயும் கல்லில் எழுதி இருக்கிறது. ஏறக்குறைய வீட்டுச் சிறையிலிருக்கும் அரசியைப் பார்க்க வேண்டுமா? உடனே நாதசுரம் வாசிக்க வேண்டியவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது, அவனுக்கு பதில் இவன் போகிறான். ஏதோ தற்செயலாக ஒரு சம்பவம் நடந்தால் பரவாயில்லை, பத்து பக்கத்துக்கு ஒரு தற்செயல் சம்பவம் மூலம்தான் கதையை முன் நகர்த்துகிறார்.

அதுவும் நாயகன் மகா முட்டாள்தனமாக காரியம் செய்வது கடுப்பைக் கிளப்புகிறது. நாயகி தாமரை பூந்தமல்லி பெருவணிகர் பெத்தபெத்துவின் அடிமை. நாயகன் அவளைத் தப்புவிக்கிறான். இதோ உணவு கொண்டு வருகிறேன், இங்கேயே இரு என்று மயிலாப்பூரில் சொல்லிவிட்டுப் போகிறான். பத்து நிமிஷத்தில் திரும்பிவந்து பார்த்தால் என்ன நடக்கும்? கரெக்ட், அவளைக் காணோம். அவளைக் கண்டுபிடிக்க நாயகன் என்ன செய்வான்? பூந்தமல்லிக்குப் போய் பெத்தபெத்துவிடம் அடிமையாகச் சேர்கிறான்! பத்து நிமிஷத்தில் எப்படிப்பா பூந்தமல்லிக்கு போவாள்?

நாவலின் உண்மையான பலம் நுண்விவரங்கள் நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதுதான். நாவலின் காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி. அவுரங்கசீப் தென்னிந்தியாவில் தன் ஆதிக்கத்தை நிறுவ ஜூல்ஃபிகார் கானை அனுப்பி இருக்கிறார். சென்னையில் ஜார்ஜ் யேல் கவர்னர். செஞ்சியில் சிவாஜியின் இரண்டாவது மகன் ராஜாராம். மதுரையில் ராணி மங்கம்மா. இந்தக் காலகட்டத்தின் பல நுண்விவரங்களை நாவலில் போகிறபோக்கில் சொல்கிறார். அடிமை வியாபாரம், அது ஆங்கிலேயரால் சென்னையில் தடை செய்யப்படுவது. பெரிய வியாபாரி இறந்ததற்கு சென்னையில் ஐந்து குண்டுகள் போடப்படுவது; ஆங்கிலேயப் பெண்கள் சென்னையின் சூடு தாங்காமல் மொட்டை அடித்துக் கொள்வது; பொற்கொல்லர்கள் வெள்ளையர்களுக்கு நாணயம் செய்து தருவது என்று பல. ஆனால் இதை விட சிறப்பாக நான், கிருஷ்னதேவராயன் நாவலில் நுண்விவரங்களைப் புகுத்தி இருக்கிறார்.

இதைத் தவிர ரா.கி.ர.வின் வழக்கமான பலங்கள் – சரளமான நடை, gimmicks – உதாரணமாக 66-67-இல் திமுகவும் அண்ணாவும் பாப்புலராக இருந்த நேரம், நாயகனைக் காஞ்சிபுரத்துக்காரனாக சித்தரித்து, அவனை நாவல் முழுவதும் பேர் வைக்காமல் காஞ்சிபுரத்தான் என்று அழைப்பது, சுலபமாக படிக்கக் கூடிய, சாகசங்கள் நிறைந்திருப்பது இருக்கவே இருக்கின்றன. ஆனால் பல இடங்களில் எனக்கு கடுப்புதான் கிளம்பியது.

இந்த நாவல் எல்லாம் அப்படி என்னதான் இந்த நாவலில் இருக்கிறது என்று பார்க்க நினைப்பவர்களுக்குத்தான். தவிர்த்துவிடலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

2 thoughts on “கமல் பரிந்துரை: அடிமையின் காதல்

 1. அன்புள்ள RV,

  நடிகர் திரு கமல்ஹாசன் பரிந்துரைத்ததால், எப்படி இந்த ரா.கி.ர நாவலை அல்லது கதையை தவறவிட்டோம் என்று ( நீங்கள் நினைத்தது போலவே ) நானும் சகோதரனும் எண்ணி இணையத்திலிருந்து எடுத்து படித்து கடுப்பாகி போனோம்.

  எங்களது பதின் வயதில் படித்த மறுபடியும் தேவகி, கோஸ்ட், திறக்க கூடாத கதவு போன்ற ரா.கி.ரவின் கதைகள் நிகழ்த்திய ரசவாதமே கமல்ஹாசனுக்கும் அவரின் பதின் வயதில் “அடிமையின் காதல்” ஒரு good read feel ஐ தோற்றுவித்துள்ளது என்று நானும் எனது சகோதரனும் பேசிக்கொண்டோம்.

  அதே வண்ணம் நீங்களும் எண்ணி எழுதி பகிர்ந்ததை படித்ததன்னால், எனது ( எங்களது ) எண்ணத்தை தெரியப்படுத்தினோம்.

  சுமார் பத்து-பதினொரு வருடங்களாக உங்களது வலைப்பூவில் எழுதி வருகிறீர்கள் அல்லவா.

  நன்று.

  ஏறக்குறைய சமவயதினராக இருக்கக்கூடும் நாம் இருவரும் என்று எண்ணுகிறேன்.

  சோர்வடைய வேண்டாம். எழுதுங்கள்.

  அன்புடன்
  சிங்காரவேலன்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.