தேவதாஸ்

தேவதாஸ் இந்தியர்களின் பிரக்ஞையில் இன்னும் ஒரு படிமம்தான். அனேகமாக எல்லா இந்திய மொழிகளிலும் திரைப்படமாக வந்திருக்கிறது. கே.எல். சைகல் நடித்து 1935-இல் வெளிவந்த ஹிந்தி திரைப்படம், ஏ.என்.ஆர்-சாவித்ரி நடித்து 1953-இல் வெளிவந்த தெலுகு திரைப்படம், திலீப்குமார் நடித்து 1955-இல் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ஆகியவை மைல்கல்களாக கருதப்படுகின்றன. ஆனால் அது மங்கலாகிக் கொண்டிருக்கிறது, அதன் தாக்கம் குறைந்து கொண்டேதான் போகிற்து.

தேவதாஸ் என்றால் என் மனதில் முதலில் வரும் நினைவு ஓஓஓஓ தேவதாஸ் பாடல்தான்.

அதுவும் பி. லீலா “பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த அய்யா மஹா வேதாந்தி” என்று பாடும்போது அந்தக் குரலின் துள்ளல் மனதைக் கவர்ந்துவிடுகிறது.

படிக்க வேண்டிய புத்தகம் என்று நினைத்திருந்தாலும், வெறும் மெலோட்ராமாவாக இருக்கும், மிஞ்சி மிஞ்சிப் போனால் முன்னோடி வணிக நாவலாக இருக்கும் என்று ஒரு எண்ணம் இருந்தது. காரணம் திலீப்குமார் நடித்த ஹிந்தித் திரைப்படமும், ஏ.என். நாகேஸ்வரராவ், சாவித்ரி நடித்த தெலுகு திரைப்படமும்தான். ஏறக்குறைய caricature என்றே சொல்லக்கூடிய அளவு தட்டையான பாத்திரங்கள் என்றுதான் தோன்றியது. அதுவும் சந்திரமுகி, சூனிலால், தேவதாஸின் அப்பா என்று பல துணைப்பாத்திரங்கள் cliche-க்கள் என்றே தோன்றியது. அதனால் சரத்சந்திரரையே தவிர்த்துக் கொண்டே இருந்தேன். திலீப்குமார், சாவித்ரி இவர்கள் இருவரின் நடிப்பும் பிடித்திருந்தாலும் கூட.

கடைசியாக ஒரு வழியாகப் படித்துவிட்டேன். இத்தனை நாள் தள்ளிப்போட்டோமே என்று தோன்றியது.

நாவலின் பலம் என்பது தேவதாஸ்-பாரோவின் இளமைப் பருவ சித்தரிப்புதான். சிறு வயதிலிருந்து ஒருவர் மேல் இன்னொருவருக்கு இருக்கும் ஈர்ப்பு, அது என்ன என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இளமை நிலை, திடீரென்று மனக்குழப்பங்கள் தீர்ந்து தனக்கான துணை அவன்(ள்)தான் என்று இருவரும் (வேறு வேறு தருணங்களில்) புரிந்து கொள்வது எல்லாம மிக அருமையாக வந்திருக்கின்றன.

மெய்நிகர் உலகையும் உருவாக்கி இருக்கிறார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம், ஜமீந்தார்கள், படிப்பதற்காக நகரத்திற்காக செல்லும் இளைஞர்கள், மேல்வர்க்கப் பெண்களுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்ற எண்ணம், எல்லாம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இன்று இந்த உலகம் இல்லைதான், ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது.

கதையின் பலவீனம் என்று நான் கருதுவது பல துணை கதாபாத்திரங்கள், கதைப்போக்குகள் இன்று தேய்வழக்குகளாக மாறிவிட்டிருப்பதுதான். காதல் தோல்வியால் குடித்தே இறக்கும் நாயகன், நாயகனை உண்மையாக நேசிக்கும் வேசி, நாயகனை “கெடுக்கும்” நண்பன், அந்தஸ்து பார்க்கும் அப்பா என்று பல. அன்று சகஜமாக இருந்திருக்கக் கூடியவை இன்று வியப்புற வைக்கின்றன. 13-14 வயதுப் பெண்ணை அவளது கணவனின் 20 வயது மகன் அம்மா என்று அழைப்பதெல்லாம் என் தலைமுறையையே புருவத்தை உயர்த்த வைக்கும்.

சரத்சந்திரர் வணிக எழுத்தாளர் அல்லர் என்று தெளிவாகத் தெரிகிறது. பரிநீதா கிடைக்குமா என்று தேட வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்