22-23 வயதுக்கு முன் எனக்கு நாடகம் என்றால் என்ன என்று சரியான புரிதல் இருந்ததில்லை. என் சிறு வயதில் பார்த்த மகா போர் தெருக்கூத்துக்களோ, கிரேசி மோகன், எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணங்களோ எனக்கு நாடக வடிவத்தை புரியவைக்கவில்லை. பெர்னார்ட் ஷா, இப்சன், ஆர்தர் மில்லர், டென்னசி வில்லியம்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட் போன்றவர்களின் எழுத்து பிடித்திருந்தது. ஆனால் நாடகத்தின் வடிவம் பிடிபடவில்லை. வடிவம் பிடிபடவில்லை என்று புரிந்து கொள்ளும் அறிவு கூட அப்போது இல்லை.
அப்போதுதான் காஷிராம் கொத்வால் நாடகத்தைப் பார்த்தேன். நாடகம் என்றால் என்ன அரை மணி நேரம் நாடகம் பார்த்தவுடன் சடாரென்று புரிந்துவிட்டது. ஷா, இப்சன், மில்லர், டென்னசி வில்லியம்ஸ் – குறிப்பாக ப்ரெக்டை – வேறு லெவலில் புரிந்து கொள்ள முடிந்தது. கிரேக்க நாடகங்களின் கோரசைக் காணும்போதெல்லாம் ஏண்டா உயிரை வாங்குகிறீர்கள் என்று அலுப்பு முதல் பத்து நிமிஷத்திலேயே மறைந்து கோரஸின் பங்களிப்பு என்ன என்று புரிந்தது. நாடகத்தின் லாஜிஸ்டிக் குறைகளை – பெரிய பெரிய செட் போட முடியாது, வெளிப்புறப் படப்பிடிப்பு கிடையாது இத்யாதி – எத்தனை அழகான கலையாக மாற்ற முடியும், எத்தனை சுலபமாக அதைக் கடக்க முடியும் என்று புரிந்தது. பாட்டையும், நடனத்தையும் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்தது. நாடகம் எத்தனை அற்புதமான மீடியம் என்று முதன்முதலாகப் புரிந்தது.
சிறந்த நாடகம் என்பதைப் பார்க்கத்தான் வேண்டும். ஷேக்ஸ்பியராகவே இருந்தாலும் சரி, நல்ல நடிகர்கள் கொண்ட ஒரு நாடகத்தைப் பார்க்கும் அனுபவமே தனி. எத்தனை சிறப்பான எழுத்தாக இருந்தாலும் சரி, நாடகமாகப் பார்ப்பது அதை இன்னும் உயர்த்தக் கூடியது. (மோசமான நடிப்பு கொடுமைப்படுத்திவிடும் என்பதும் உண்மைதான்.) பல முறை சுமாரான எழுத்தைக் கூட நாடகமாகப் பார்ப்பது இன்னும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
சமீபத்தில் காஷிராம் கொத்வால் நாடகத்தை மீண்டும் படித்தேன். விஜய் டெண்டுல்கர் அருமையாக எழுதி இருக்கிறார்தான். ஆனால் நாடகம் எழுத்தை விட மிகச் சிறப்பானது. யூட்யூபில் கிடைக்கிறது. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
கதையை வெகு சுருக்கமாக எழுதிவிடலாம். 18-ஆம் நூற்றாண்டின் புனே. ராஜா, பேஷ்வா எல்லாரும் இருந்தாலும் அதிகாரம் செலுத்துவது மந்திரி நானா ஃபட்னவிஸ்தான். பிராமணர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. பிராமணர்கள் தாசிகளின் பின்னால் அலைகிறார்கள், இரவில் வீடு தங்குவதில்லை. நானாவும் பெண் பித்தர். கன்னோசி பிராமணன் – வெளியூர்க்காரன் – அநியாயமாக திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறான். புனே மக்களைப் பழி வாங்குகிறேன் என்று சபதம் எடுத்து தன் மகளையே நானாவுக்குக் கூட்டிக் கொடுக்கிறான். அதற்குப் பரிசாக புனேவின் காவல்துறை அதிகாரி பதவி – கொத்வால் பதவி – கிடைக்கிறது. அடக்குமுறை ராஜ்யம் செய்கிறான். அவன் மகள் இறந்து போகிறாள். அது காஷிராமின் கொடுமைகளை இன்னும் அதிகரிக்கிறது. காஷிராமின் கோபத்தைக் கண்டு அஞ்சும் நானா அவன் என்ன செய்தாலும் கண்டுகொள்வதில்லை. மாங்காய் திருடிய குற்றத்துக்காக சின்ன சிறை அறையில் பலரையும் திணிக்க, 22 பேர் இறந்து போகிறார்கள். புனே நகரம் கொதித்து எழுகிறது. நானா தனக்கு காஷிராமால் இனி மேல் பெரிய பயன் இல்லை என்பதால் படு கூலாக காஷிராமை கொல்ல உத்தரவு தருகிறார்.
சிறப்பான எழுத்து. அன்றைய புனே நகரத்தை சில கோடுகளை வரைந்தே வெளிப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அன்றைய பிராமணர்களின் அதிகார நிலை, decadence (சரியான தமிழ் வார்த்தை என்ன?) பிரமாதமாக காட்டப்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த காட்சி – பிராமண ஆண்கள் தாசிகளின் நடனத்தைப் பார்த்துவிட்டு, அவர்களோடு சுகித்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். பிராமண மனைவிகளோடு தொடர்பு கொண்டுள்ள மராட்டிய சர்தார்கள் அவர்கள் வீட்டிலிருந்து திரும்புகிறார்கள். இரண்டு குழுவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹோஹோ என்று நகைத்துக் கொள்கிறார்கள். மிக அருமையான காட்சி!
நாடகமாகப் பார்ப்பதில் என்ன லாபம்? முதலாவதாக காட்சி அமைப்புகள். கோரஸ் – பத்து பனிரண்டு நடிகர்கள் – அவ்வப்போது தன்னை வீடாக, கதவாக, கோவிலாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறது. மிக அழகான, கலை அம்சம் நிறைந்த காட்சி அமைப்பு. இரண்டாவதாக, பாட்டும் நடனமும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம். மராத்திய மண்ணின் லாவணிகளும் அபங்கங்களும் நாடகத்தில் அருமையாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. மூன்றாவதாக நாட்டார் கூறுகள். மஹாராஷ்டிராவின் தமாஷா வடிவத்தை செவ்வியல்படுத்தியது போல இருக்கிறது. லாவணி என்றால் என்ன, தமாஷா என்றால் என்ன என்று தெரியாவிட்டால் கூட ரசிக்க முடியும். நான்காவதாக, நல்ல நடிகர்கள் பிய்த்து உதறக் கூடிய பாத்திரங்கள். மோகன் அகாஷேவைப் பற்றி மராத்திய நாடக உலகுக்கு வெளியே தெரியவில்லை, ஆனால் அவர் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். ஓம் பூரியை காஷிராமாகப் பார்த்த நினைவிருக்கிறது, ஆனால் திரைப்படத்தில் பார்த்ததை நாடகத்தோடு குழப்பிக் கொள்கிறேனோ என்று சந்தேகம்.
நானா ஃபட்னவிஸ் உண்மை மனிதர். மூன்றாம் பானிபட் போருக்குப் பின் அவர்தான் மராத்திய அரசை நடத்தி இருக்கிறார். நவீன சாணக்கியர் என்றே கருதப்படுகிறார். அவர் பெண்பித்தர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். காஷிராம் கொத்வாலும் உண்மை மனிதர். கிட்டத்தட்ட 15 வருஷம் கொத்வாலாக இருந்திருக்கிறார். புனே மீது அடக்குமுறை ராஜ்ஜியம் நடத்தினாராம். மொரோபா கனோபா 1863-இல் எழுதிய ஒரு கதையை அடிப்படையாக வைத்து விஜய் டெண்டுல்கர் இந்த நாடகத்தை எழுதி இருக்கிறார்.
நாடகம் வந்த காலத்தில் பிராமணர்களை இழிவுபடுத்துகிறது என்றும், நானாவை இழிவுபடுத்துகிறது என்றும் சிவசேனா போராட்டங்களை நடத்தி இருக்கிறது.
விஜய் டெண்டுல்கர் இந்தியாவின் தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய “ஷாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!” நாடகத்தையும் பரிந்துரைக்கிறேன். பாதல் சர்க்காரையும் இவரையும்தான் நான் முதல் இடத்தில் வைக்கிறேன். கிரீஷ் கார்னாட், மோகன் ராகேஷ் போன்றவர்களுக்கு அடுத்த இடம்.
நல்ல நாடகங்களைப் பார்க்கும் அதிருஷ்டம் எனக்கு அபூர்வமாகத்தான் கிடைக்கிறது. அதனால்தானோ என்னவோ காஷிராம் கொத்வால் இன்னும் என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. அதுவும் மோகன் அகாஷே போன்ற சிறந்த நடிகர்கள் நடித்துப் பார்த்தது பெரிய அதிருஷ்டம். ஓம் பூரி நாயகனாக நடித்து திரைப்படமாகவும் வந்திருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்