என் அப்பா இறந்தபோது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே எனக்கு சரியாகத் தெரியவில்லை. புரோகிதர்களும் உறவினர்களும் பேசுவது சரியாகக் காதிலேயே விழாது. என்னவோ பண்ணிக் கொள்ளுங்கள், என்னை விட்டுவிடுங்கடா என்பது போலத்தான் மனநிலை இருந்தது. என்னவோ நடந்தது, மனம் எங்கேயோ இருந்தது. என்னென்னவோ குருட்டு யோசனைகள். ஆற்றிலே அடித்துக் கொண்டுபோகும் சுள்ளி போல நானும் அங்கே இருந்தேன், அவ்வளவுதான். உதட்டை இறுக்கிக் கொண்டே இருப்பேன், ஆனால் அழுகையே வரவில்லை. தனியாக இரண்டு நிமிஷம் இருந்தால் போதும் என்று தோன்றும். அரை மணி நேரம் தனியாக இருந்தாலும், தனிமை கிடைக்கவே இல்லை.
இறப்பதற்கு ஒரு வருஷம் முன்னால் என் அப்பா பெரிய விபத்தில் சிக்கிக் கொண்டார். பிழைப்பாரா மாட்டாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அம்மாவுக்குத்தான் பெரிய அடி என்று நினைத்தோம், அம்மா இரண்டு மூன்று நாளில் வீடு திரும்பிவிட அப்பாவுக்கு ஆறேழு வாரம் ஆயிற்று. விடுமுறை எடுத்துக் கொள்வதில் சிரமம், பணத்துக்கு கொஞ்சம் இழுபறி, ஆஸ்பத்திரி அலைச்சல், நிலைமை என்ன என்று தெளிவாகச் சொல்லாமல் இழுத்தடிக்கும் மருத்துவர்கள், பகல் வேளையில் ஆஸ்பத்திரி, இரவில் அமெரிக்க நேரத்தில் வேலை, அதனால் தூக்கமின்மை என்று நிறைய கஷ்டம். ஆனால் ஆஸ்பத்திரிக்குப் போய் குழாய்கள் மூலமே உயிரோடு இருக்கும் அப்பாவைப் பார்க்கும்போது நான் படுவதெல்லாம் ஒரு கஷ்டமா என்று தோன்றும். அப்போதும் இப்படித்தான், ஏதோ வெளியில் காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் உளைச்சல், நிம்மதியின்மை, இழப்பு, பயம், துக்கம், துக்கத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது என்ற பிரக்ஞை என்று ஆயிரம் அழுத்தங்கள். தாங்கமுடியாத அழுத்தம் என்றில்லை; ஆனால் relentless, non-stop அழுத்தம்.
சுசித்ரா பட்டாசார்யா எழுதிய ஆத்மஜன் சிறுகதையின் நாயகனில் என்னையேதான் கண்டேன். சடங்குகள்; உறவினர்கள்; சின்னச் சின்ன லௌகீகப் பிரச்சினைகள்; அடுத்தடுத்து நடத்த வேண்டிய செயல்கள் – எல்லாவற்றிலும் அரைகுறை involvement.
இந்த மாதிரி கதைகளைப் படிக்கும்போது நான் தனியன் அல்லன் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலம் அனுபவித்த துயரம்தானே என்று தெளிவாகத் தெரிகிறது.
எனக்கு கிரிக்கெட் பைத்தியம் உண்டு. என் அப்பாவிடமிருந்து வந்ததுதான். டிவியில் கிரிக்கெட்டை இப்போதெல்லாம் விடாமல் பார்க்கிறேன். அப்பாவின் நினவு மனதில் அடிநாதமாக ஓடிக் கொண்டே இருக்கும். அதற்காகவே சீக்கிரம் எழுந்து, இரவில் விழித்து கிரிக்கெட பார்க்கிறேன். (கிரிக்கெட்டும் – அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் – இப்போதெல்லாம் சுவாரசியமாக இருக்கிறது.) பார்க்கும்போது அவரை நினைத்து நினைத்து புன்னகைத்துக் கொள்கிறேன். அந்தப் புன்னகைதான் அப்பாவுடன் என்றும் தொடரும் பந்தம் என்று நினைக்கிறேன்…
தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்