இந்தப் பதிவை ஃபிப்ரவரி 2021-இல் எழுத ஆரம்பித்தேன். எழுதி முடிக்கவே கைவரவில்லை. அதுவும் ஜெயமோகனே தன்னைப் பற்றி “நாமார்க்கும் குடியல்லோம்” என்று மார்ச்சிலோ என்னவோ சொல்லிக் கொண்டார். நான் அவரை சரியாகவே கணித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன், அப்படியும் எழுதி முடிக்கவே கை வரவில்லை.
ஜெயமோகன் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். மேதை. ஆனால் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். ஞானபீட விருது கிடைத்தால் ஏற்கமாட்டேன் என்கிறார். இத்தனைக்கும் சென்ற காலத்தில் சில பல விருதுகளை ஏற்றுக் கொண்டவர்தான். இன்று விருதுகளை மறுப்பது வெறும் ஆணவமா? பொருளியல் ரீதியாக அவர் அடைந்துள்ள வெற்றி அவரது அகங்காரத்தை உசுப்பி விட்டிருக்கிறதா? கொடுக்கும் நிலையில் நான் இருக்கிறேன், பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்ற பெருமிதமா? இல்லை பாஜக ஆட்சியில் இருக்கும்போது விருதை ஏற்கமாட்டேன் என்பது அவரது அரசியல் நிலையின் பிரதிபலிப்பா, ஹிந்துத்துவ எதிர்ப்பா? நாளை நோபல் பரிசு கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுப்பாரா?
இது வெட்டி ஆராய்ச்சி என்பதை ஒத்துக் கொள்கிறேன். கறாராகப் பார்த்தால் விருதுகளை ஏற்பதும் மறுப்பதும் அவர் இஷ்டம், அவர் சவுகரியம். ஏன் மறுக்கிறேன் என்று கூட அவர் யாருக்கும் எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியம் இல்லைதான்.
இது வெறும் ஆணவமோ, பொருளியல் வெற்றியால் உண்டான அகங்காரமோ இல்லை என்பது என் உறுதியான கருத்து. இது தன் மேதமையை தானே நன்றாக உணர்ந்து அடையும் பெருமிதத்தின் விளைவு. பொருளியல் தேவைகள் இருந்திருந்தால் ஒரு வேளை சில விருதுகளை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதுவும் இன்றில்லை. அரசியல் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பவர்தான், ஆனால் பத்மஸ்ரீ விருதை மறுக்க அது காரணமில்லை என்று கருதுகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் நிராகரித்திருப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் கணிசமான அளவில் இந்தப் விருதுகள் அரசியல் காரணங்களுக்காகத்தான் தரப்படுகின்றன. தரம் தெரியாமல் தரப்படும் பரிசிலை பாணன் நிராகரிப்பது போலத்தான். “மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?” என்று கேட்ட கம்பன் போலத்தான். நாமார்க்கும் குடியல்லோம்!
ஆனால் ஜெயமோகன் விருதுகளை ஏற்க மறுப்பது தவறு என்பதும் என் உறுதியான கருத்து. ஜெயமோகன் – அதுவும் சினிமா பிரபல ஜெயமோகன், சர்ச்சைக்குள்ளாகும் ஜெயமோகன் – இன்று தமிழ்நாடறிந்த ஒருவர். பத்துக்கு இரண்டு பேராவது அவர் பேரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே? பத்து லட்சத்தில் இரண்டு பேர் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தால் அதிகம். எப்படி தெரிந்து கொள்வார்கள்? விருதுகள் பெறாவிட்டால் தகழியும் பஷீரும், அனந்தமூர்த்தியும், கோபிநாத் மோஹந்தியும், மஹாஸ்வேதாதேவியும், அம்ரிதா ப்ரீதமும் நம் பிரக்ஞையில் இருப்பார்களா? ஜெயமோகனை மொழிபெயர்ப்பது சுலபமல்ல. ஆனால் வெளியே தெரிந்தால் இன்னும் நாலு பேர் முன்வருவார்கள் இல்லையா? அதனால்தான் அவர் கௌரவிக்கப்பட வேண்டும், அவரும் அந்த கௌரவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.
அவருக்கு மட்டுமல்ல, அசோகமித்திரனுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ ஏதாவது கிடைத்திருக்க வேண்டும். கி.ரா.வுக்கு சட்டுபுட்டென்று கொடுத்தே ஆக வேண்டும். நாஞ்சிலும் எஸ்ராவும் பூமணியும் எதிர்காலத்தில் இந்த விருதுகளைப் பெற வேண்டும்…
ஜெயமோகன் தான் காகிதத்தில் எழுதினால் போதும், அந்தக் காகிதப் பிரதியை நெருங்கிய நண்பர்கள் படித்தால் போதும் என்று கூட நினைக்கலாம். (அசோகவனம் என்னாச்சு சார்?) அது அவரது உரிமை. ஆனால் அதை புத்தகமாகப் போட்டால், இணையத்தில் பதிப்பித்தால், இன்னும் நாலு பேருக்கு இலக்கியத்தில் ஆர்வம் வரலாம். டாவின்சியும் மைக்கேலாஞ்சலோவும் தங்கள் வீட்டு சுவரில் மட்டும் ஓவியம் எழுதி திருப்திப்பட்டுக் கொள்வது அவர்கள் இஷ்டம்தான். ஆனால் மோனாலிசாவையும் சிஸ்டைன் ஆலயத்தையும் பார்த்து பரவசப்பட வேண்டும் என்றே நம்மில் அனேகர் விரும்புவோம். அந்த எண்ணத்தின் நீட்டிப்புதான் அவர் விருதுகளை ஏற்க வேண்டும் என்று நினைப்பதும்…
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்
ஜெயமோகனுக்கு சாகித்ய அகாடமி விருதும், ஞானபீட விருதும் நிச்சயம் கொடுப்பார்கள். ஜெமோவும் வாங்கிக்கொள்வார். தப்பித்தவறிக்கூட நோபல் கிடைக்க வாய்ப்பில்லை. புதுமைப்பித்தனுக்கும், கு.ப.ராவுக்கும், தி.ஜானகிராமனுக்கும் கிடைக்காத நோபல் ஜெயமோகனுக்குக் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? ஜெயமோகனின் அதிதீவிர வாசகர்களின் பகற்கனவில் வேண்டுமானால் ஜெமோவுக்கு நோபல் கிடைக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் ஜெமோவுக்கு நோபல் கிடைப்பதும், காஞ்சனா ஜெயதிலகருக்குக் கிடைப்பதும் ஒன்றுதான்.
LikeLike