நாஸ்டால்ஜியா – சடன் கௌபாய் நாவல்கள்

பதின்ம வயதுகளில் சடன் நாவல்களை விரும்பிப் படித்திருக்கிறேன். சடன் Wild West என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் அரிசோனா, டெக்சஸ், யூடா போன்ற மாநிலங்களில் ஒரு கௌபாய். அதிவேகமாக சுடக் கூடியவன். அரிசோனாவின் கவர்னரால் காவல் அதிகாரியாக (மார்ஷல்) நியமிக்கப்பட்டவன. ஆனால் அது ரகசியமாக இருக்கும். ஏதோ ஒரு சிறு ஊருக்கு சடன் வருவான். நிலத்தை, மாடுகளை வளைத்துப் போட நினைக்கும் “பெரிய” மனிதர்களின் சதிகளை, கொலை முயற்சிகளை மீண்டும் மீண்டும் முறியடிப்பான். அனேகமாக இன்னொரு பண்ணையில் (ranch) ஒரு கௌபாயாக சேருவான். அனேகமாக துப்பாக்கி இல்லாமல் வெறும் கைகளோடு ஒரு சண்டையாவது இருக்கும், அதில் தன்னை விட உருவத்தில் பெரிய, பலசாலியைத் தோற்கடிப்பான். பண்ணை முதலாளியின் மகளுக்கும் இன்னொரு கௌபாய்க்கும் நடுவே உள்ள காதலுக்கு உதவி புரிவான்.

பதின்ம வயதுகளில்தான் படிக்க முடியும் என்பதை மீண்டும் படித்துப் பார்த்தபோது நன்றாகப் புரிந்துகொண்டேன். ஏறக்குறைய தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்களைப் போன்ற கதைகள்தான். அதுவும் முகமூடி அணிந்த வில்லன் மீண்டும் மீண்டும் வருவார். ஆனால் இவற்றுக்கும் ஒரு cult following இருக்கிறது.

அந்த வயதிலும் சரி, இந்த வயதிலும் சரி கௌபாய்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வதுதான் ஓரளவு பிடித்திருந்தது. அந்த வயதில் தவிர்த்தது, இந்த வயதில் ஓரளவு விரும்பிப் படித்தது நிலப்பரப்பின் சித்தரிப்புகள். நானே இரண்டு மூன்று முறை அரிசோனா, நெவாடா இங்கெல்லாம் சுற்றி இருப்பதால் சித்தரிப்புகள் இப்போதுதான் மனதில் பதிகின்றன.

இவற்றை 1930-களில் ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் எழுதினார். அறுபதுகளில் ஃப்ரெடரிக் ஹெச். கிறிஸ்டியன் தொடர்ந்தார். விசித்திரம் என்னவென்றால் இவர்கள் இருவரும் ஆங்கிலேயர்கள். அமெரிக்காவைப் பார்த்ததே இல்லை!

அனேகமாக எல்லாம் ஒரே கதைதான் என்பதால் ஏதாவது ஒன்றைப் படித்தால் போதும். எதையாவது குறிப்பிட்டு சொல்லிதான் ஆக வேண்டுமென்றால் இந்த சீரிஸின் முதல் நாவலான Range Robbers-ஐ படிக்கலாம். கிறிஸ்டியன் எழுதியவற்றில் Sudden at Bay – கதை முழுவதுமே துப்பாக்கி சண்டைதான். கிறிஸ்டியன் கதைகளில் பின்புலத்தில் கொஞ்சம் வேறுபாடுகள் தெரியும்.

  1. Range Robbers: (1930) சடன் இந்த நாவலில்தான் தன் மனைவி நொரீனை சந்திக்கிறான். சடனும் அவன் நண்பர்களும் ஒருவர் காலை ஒருவர் வாரிக் கொள்வது நன்றாக வந்திருக்கும். கதை எல்லாம் முக்கியமில்லை.
  2. Law o’ the Lariat: (1931) எல்லா நாவல்களும் ஒரே ஃபார்முலா என்பதால் பெரிதாக விவரிக்கப் போவதில்லை. இந்த முறை சடன் முகமூடிக் கொள்ளையர்களை சமாளிக்கிறான்.
  3. Sudden: (1933) எல்லா நாவல்களும் ஒரே ஃபார்முலா என்பதால் பெரிதாக விவரிக்கப் போவதில்லை. இந்த முறை(யும்) சடன் முகமூடிக் கொள்ளையர்களை சமாளிக்கிறான்.
  4. Marshal of the Lawless: (1933) தான்தான் சடன் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு வில்லன் கொள்ளை கொலை செய்கிறான். உண்மை சடன் அவனை எப்படிப் பிடிக்கிறான் என்று கதை
  5. Sudden: Outlawed: (1934) சடனின் பின்புலம் – எப்படி சடன் தன் பழிவாங்குவதை ஆரம்பிக்கிறான், எப்படி அவனுக்கு குற்றவாளி என்ற பேர் வருகிறது என்ற கதை.
  6. Sudden: Goldseeker: (1937) இந்த முறை டகோடாவில் ஒரு தங்கச் சுரங்கத்தை திருட நினைக்கும் வில்லன். தங்கச் சுரங்கம் என்றால் சரியாக வரவில்லை, ஆற்றில் தங்கத் துகள்கள் அடித்துக் கொண்டு வருகின்றன, அவற்றை மணலை அரித்து எடுக்க வேண்டும்.
  7. Sudden Rides Again: (1938) இந்த முறை முகமூடி அணிந்து பண்ணை வாரிசு போல நடிக்கும் வில்லன். தேவர்-எம்ஜிஆர் படத்தில் அசோகன் வில்லனாக வருவதைப் போல.
  8. Sudden Takes the Trail: (1940) இந்த முறை பண்ணக்கு வாரிசாக நடித்து பண்ணையைத் திருட முயற்சிக்கும் வில்லன்.
  9. Sudden Makes War: (1942) அதே சண்டையிடும் இரு பண்ணைகள். அதே மாதிரி சின்னப் பண்ணையின் வாரிசுக்கும் பெரிய பண்ணை வீட்டுப் பெண்ணுக்கும் ஈர்ப்பு. அதே மாதிரி நியூ யார்க்கிலிருந்து ஒரு வில்லன். அதே மாதிரி சின்னப் பண்ணையில் வேலைக்கு சேரும் சடன். இந்த முறை சின்னப் பண்ணையின் பெரியப்பா சேர்த்து வைத்து புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
  10. Sudden Plays a Hand: (1950) இந்த முறை பெரிய பண்ணை ஒன்றின் வாரிசைத் தேடுகிறார்கள். அந்த வாரிசு பெண், அவளுக்கு விருப்பமில்லாத திருமண உறவு. அவள் கணவன் எப்படி அவள் மனதை வெல்கிறான், சடன் அவனுக்கு எப்படி உதவுகிறான் என்று கதை.
  11. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden Strikes Back: (1966) ஃப்ரெடெரிக் கிறிஸ்டியன் அதே பாத்திரங்களை வைத்து சடன் நாவல்களை மீண்டும் எழுதினார். சிறந்தது இதுதான். வில்லன் இளம் பெண்ணின் பண்ணையைத் திருட முயற்சிக்கிறான்.
  12. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden: Troubleshooter: (1967) அதே ஃபார்முலாதான். ஊரில் பிரச்சினை என்று கேள்விப்பட்டு வரும் சடன் அங்கே ஒரு இளைஞனை சந்திக்கிறான். இளைஞன் ஒரு இளைஞியை சந்திக்கிறான். ஒரு வேகமாக சுடும் வில்லன். சடன் மீது கொலைப்பழி விழுகிறது. விசாரிக்க கவர்னரே வருகிறார். தண்டம்.
  13. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden at Bay (1968): வித்தியாசமான கதை. இதில் கதை முழுவதும் இரு குழுக்களின் துப்பாக்கி சண்டைதான்.
  14. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden, Apache Fighter (1969): செவ்விந்தியர்களோடு சடனின் போராட்டம்தான் கதை முழுவதும். அவர்களால் கடத்தபபடும் ஒரு பெண்ணை விடுவிக்கிறான்.
  15. ஃபிரடெரிக் கிறிஸ்டியன்: Sudden, Dead or Alive! (1970): இந்த முறை மெக்சிகோவில் ஒரு குழுவினரோடு போராட்டம்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.