தில்-ஏ-நாதான்

நான் ஹிந்தி கற்றது ஹிந்தி திரைப்படங்கள் – குறிப்பாக திரைப்பாடல்கள் மூலமாகத்தான். அதுவும் எனக்கு பழைய பாடல்கள் என்றால் உயிர். முகேஷ், ரஃபி, கிஷோர், கீதா தத், ஆஷா, லதா, மன்னா டே, ஹெமந்த் குமார், தலாத், ஷம்ஷத் பேகம், சிதல்கர் (ராமச்சந்திரா), எஸ்.டி. பர்மன், ஷங்கர்-ஜெய்கிஷன், ஓ.பி. நய்யார், ஆர்.டி. பர்மன், நௌஷாத், மதன்மோஹன், ஜெய்தேவ், கய்யாம் என்று உள்ளம் கவர்ந்தவர்களின் பெரிய பட்டியல் இருக்கிறது.

இப்படி கற்ற ஹிந்தி அரைகுறையாகத்தானே இருக்கும்? ஹிந்தியே அரைகுறை என்றால் உருது பற்றி கேட்கவா வேண்டும்? ஆனால் அரைகுறையாக இருந்தாலும் திரைப்பாடல்களின் மொழி என்ன என்று தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. கேட்கும் வார்த்தை உருதுவா ஹிந்தியா என்று எப்படியோ புரிந்துவிடுகிறது. அனேகமாக உருது கலப்பு அதிகம் உள்ள திரைப்பாடல்கள் மனதைக் கவர்கின்றன. ஏன் என்று இன்று வரை புரிந்ததில்லை. சமஸ்கிருத-பாரசீக மொழிக் கலப்பு எப்படியோ கவிதை மொழியாக, ஷாயரியின் மொழியாக மாறிவிட்டது.

நீண்ட பீடிகை! விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மிர்சா காலிப் எழுதிய தில்-ஏ-நாதான் பாடலை பத்து பதினைந்து நிமிஷமாக மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தில்-ஏ-நாதான் துஜே ஹுவா க்யா ஹை
ஆகிர் இஸ் தர்த் கி தவா க்யா ஹை

ஹம் ஹே முஷ்டாக் அவுர் வோ பேஜார்
லா இலாஹி ஏ மாஜ்ரா க்யா ஹை?

மே பி மூ(ன்) மே ஜபான் ரக்தா ஹூன்
காஷ் பூச்சோ கி “முத்தா க்யா ஹை”

ஹம் கோ உன் பே வஃபா கீ உமீத்
ஜோ நஹி ஜான்தி வஃபா க்யா ஹை

ஜான் தும் பர் நிஸார் கர்தா ஹூன்
மே நஹி ஜான்தா துவா க்யா ஹை

போன்ற வரிகளின் எளிமையை, அழகை விவரிக்க முடியாது. அனுபவிக்கத்தான் வேண்டும். அதுவும் தலாத் மெஹ்மூதின் குரலின் குழைவு, சுரையாவின் குரலில் வெளிப்படும் ஏக்கம் எல்லாம் சுஹானா! குலாம் மொஹம்மத் (பகீசா படத்தின் இசையமைப்பாளரும் இவரே) இசையை நான் அதிகம் கேட்டதில்லை, ஆனால் இந்த ஒரு படமே போதும் அவரது திறமையைக் காட்ட. முழுக் கவிதையிலிருந்து நான்கே ஈரடி செய்யுள்களை (couplets) மட்டும் பாடுகிறார்களே என்றுதான் வருத்தம்.

காலிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற உருது கவிஞர். கடைசி மொகலாய மன்னரான பஹதூர் ஷா சஃபரின் அன்புக்குரியவராக, கவிதை ஆசிரியராக இருந்தவர். பல புகழ் பெற்ற கஜல்களை எழுதி இருக்கிறார். உருது உரைநடைக்கும் இவரே முன்னோடியாம்.

முழுக் கவிதைக்கும் என் மொழிபெயர்ப்பு. கொஞ்சம் வரிகளின் வரிசையை மாற்றி இருக்கிறேன். (பாட்டின் வரிகள் முதலில்) என் உருது அரைகுறை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தில்-ஏ-நாதான் துஜே ஹுவா க்யா ஹை
ஆகிர் இஸ் தர்த் கி தவா க்யா ஹை

மட நெஞ்சே உனக்கு நடந்தது என்ன?
இந்தக் காயத்துக்கு மருந்துதான் என்ன?

Oh my naive heart, what happened to you?
Is there any medicine for this hurt?

ஹம் ஹே முஷ்டாக் அவர் ஓ பேஜார்
லா இலாஹி ஏ மாஜ்ரா க்யா ஹை?

பித்தனாக அலைகிறேன், நீயோ என்னை கண்டு கொள்வதே இல்லை
ஆண்டவா, இது என்ன பிரச்சினை!

I am going crazy, and you are so indifferent
Oh God, what kind of problem is this?

மே பி மூ(ன்) மே ஜபான் ரக்தா ஹூன்
காஷ் பூச்சோ கி “முத்தா க்யா ஹை”

என் வாய்க்குள்ளும் வார்த்தைகள் இருக்கின்றன.
நீ மட்டும் “என்ன பிரச்சினை” என்று என்னைக் கேட்டால்!

There are words within my mouth too.
If only you ask me “What is your problem?”!

ஹம் கோ உன் பே வஃபா கீ உமீத்
ஜோ நஹி ஜான்தி வஃபா க்யா ஹை

அவள் என்னிடம் விசுவாசமாக இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அவளுக்கோ விசுவாசம் என்றால் என்ன என்றே தெரியாது

I live in hope that she will be faithful
She doesn’t know what faith is

ஜான் தும் பர் நிஸார் கர்தா ஹூன்
மே நஹி ஜான்தா துவா க்யா ஹை

என் உயிரையே உனக்கு அர்ப்பணிக்கிறேன்.
உன்னிடம் எப்படி பிரார்த்திப்பது என்றுதான் தெரியவில்லை.

I offer my life as a sacrifice to you.
I don’t know how to pray to you!

ஜப் கி துஜ் பின் நஹி கொயி மௌஜூத்
ஃபிர் ஏ ஹங்கமா, ஏ குதா க்யா ஹை

உன்னைத் தவிர வேறு எதுவுமே இல்லாதபோது
இந்த வாழ்வின் பிரச்சினைகளில் என்ன பொருளிருக்கிறது? கடவுள் என்றால் கூட என்ன பொருளிருக்கிறது?

When nobody other than you exist
Then what is all this clamor? What is God? They all become meaningless.

ஏ பரி செஹரா லோக் கைசே ஹை?
கம்சா-ஓ-இஷ்வா-ஓ-அதா க்யா ஹை?

தேவதைகள் போல் ஒளி வீசும் முகம் கொண்ட இவர்கள் யாருக்காக?
இழுக்கும் விழிகள், உல்லாச நடத்தை எதற்காக? இவை எதிலும் பொருளில்லை.

Why are these angel-faced people?
What are these amorous glances, what is this flirting? All meaningless.

ஷிகான்-ஏ-ஜுல்ஃப்-ஏ-அம்பரீ க்யோன் ஹை
நிகா-ஏ-சஷ்ம்-ஏ-சூர்மா சா க்யா ஹை?

மலர்க்கூந்தல் இப்படி சுருண்டு கொண்டிருப்பதில் என்ன பயன்?
மைவிழிகள் இப்படி ஓரக்கண்ணால் பார்ப்பதில் என்ன பயன்?

Why do these fragrant tresses curl uselessly?
Why do these kohl-lined eyes glance uselessly?

சப்ஜா-ஓ-குல் கஹான் சே ஆயே ஹை?
அப்ர் க்யா சீஸ் ஹை, ஹவா க்யா ஹை?

இந்தப் பசுமையும் மலர்களும் எங்கிருந்து வந்தன?
இந்த மேகங்கள்தான் என்ன? இந்தத் தென்றல் என்ன? என்ன பயன்?

Where did this greenery and flowers come from?
What are these clouds? What is this breeze? All irrelevant.

ஹான் பலா கர் தேரா பலா ஹோகா
அவுர் தர்வேஷ் கீ சதா க்யா ஹை?

“பிறர்க்கு நல்லன செய்தால் உனக்கும் நல்லது நடக்கும்”
என்பதைத்தானே குருமார்களும் உபதேசிக்கிறார்கள்?

“Do good to others and good things will happen to you”
What else do the holy men preach?

மேனே மானா கி குச் நஹி காலிப்
முஃப்த் ஹாத் ஆயே தோ புர்ரா க்யா ஹை?

காலிப் வெட்டிப்பயல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்
ஆனால் எந்த முயற்சியுமில்லாமல் உன் காலடியில் விழுபவனை ஏற்பதில் நஷ்டம் என்ன?

I agree that Ghalib is worthless
But why not accept him, if you can get him without any effort?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்