கி.ரா. – அஞ்சலி

மூத்த எழுத்தாளரும் சாதனையாளருமான கி.ரா. மறைந்தார். பத்து நாளாவது இருக்கும்.

கி.ரா. என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். கோபல்ல கிராமம் நாவலை முதல் முறையாகப் படித்தபோது எனக்கு பதின்ம வயதுகள் என்றுதான் நினைவு. அவரது பாணி எத்தனை வித்தியாசப்படுகிறது என்று வியந்தது நன்றாக நினைவிருக்கிறது. என் பாட்டி கதை சொல்லும் பாணியில் இலக்கியம் படைக்க முடியும் என்று கனவு கூட கண்டதில்லை. அன்று எனக்குத் தெரிந்த ஒரே மேதை எழுத்தாளரான புதுமைப்பித்தன் பாணிக்கும் இவர் பாணிக்கும் எத்தனை தூரம், ஆனால் இருவரின் தரமும் எத்தனை அருகாமையில் இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். அரேபிய இரவுகள் கதைகளிலும் பஞ்சதந்திரக் கதைகளிலும் கதைக்கு கதை தாவுவது அலுப்பூட்டும். இவர் கையிலோ அது ஒரு அருமையான உத்தியாக மாறி இருந்தது. கிராமத்தில் பெரிசு ஆல மரத்தடியில் உட்கார்ந்து சொல்லும் கதையைக் கேட்பதைப் போன்ற உணர்வு. ஆனால் சொல்வது மகாபாரதத்தின் தரத்தில் உள்ள கதை!

ஜெயமோகன் கோபல்ல கிராமம் நாவலை தனது சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலின் முதல் வரிசையிலும் கோபல்லபுரத்து மக்கள் நாவலை இரண்டாம் வரிசையிலும் வைக்கிறார். எஸ்ராவும் கோபல்ல கிராமம் நாவலை தனது சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்கு சாஹித்ய அகடமி பரிசு கிடைத்திருக்கிறது.

அவருக்கு குறைந்தது பத்மஸ்ரீ விருதாவது கிடைத்திருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்து அவருக்கு சிலை வைக்கப் போவதாக சொன்னது துக்கத்துக்கு நடுவே ஒரு சின்ன மகிழ்ச்சி. அடுத்த வருஷமாவது அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

வளர்ந்து பெரியவன் ஆன பிறகு அவரது சிறுகதைகளைப் படித்தபோது அவரது இன்னொரு பரிமாணம் புரிந்தது. மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். கன்னிமை, கோமதி, கதவு, நாற்காலி, மாயமான் கதைகள் இந்தத் தருணத்தில் நினைவு வருகின்றன. ஜெயமோகன் கன்னிமை, பேதை, கோமதி, கறிவேப்பிலைகள், நாற்காலி, புவனம், அரும்பு, நிலைநிறுத்தல் ஆகிய சிறுகதைகளை தனது சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு கோமதி, கன்னிமை மற்றும் கதவு.

கி.ரா. தனியாகவும் கழனியூரனுடனும் சேர்ந்தும் நாட்டுப்புற கதைகளைத் தொகுத்தது பாராட்டப்பட வேண்டியது.

கி.ரா. மறைந்தவுடன் அவரது (பழைய) ஜூம் பேட்டி ஒன்றை பார்த்தேன். வயதான பெரிசு. ஒரு மணி நேரம் பேசி இருப்பார். மனம் நெகிழ்ந்துவிட்டது. பாதி நேரம் என்ன கேட்கிறார் என்பதே மறந்துவிடுகிறது. என்ன கேட்டீங்க என்று கேட்டுக் கொள்கிறார். கொஞ்சம் கடினமான தமிழில் ஒருவர் கேள்வி கேட்க (தென் தமிழ்நாடு நகர்ப்புறமாகிக் கொண்டே வருகிறது, அதன் பண்பாடு மறக்கப்படுகிறது, இதனால் எழுத்தாளர்களுக்கு என்ன பாதிப்பு) என்ன கேக்கறாங்க என்று கொஞ்சம் குழம்புகிறார். கேட்ட கேள்வியிலிருந்து எங்கெங்கோ போகிறார். என் சொந்தத் தாத்தாவையே பார்த்த மாதிரி இருந்தது. இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டேன். அவரைப் பற்றி எழுதவே மனமில்லை. பேட்டியையும் அவரது எழுத்துக்களையும் அசை போடுவதிலேயே மனம் திளைத்திருந்தேன்/க்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எழுதாமல் வேறு எதையும் எழுதவும் மனமில்லை. 🙂 கடைசியில் தம் பிடித்து எழுதுகிறேன். (பேட்டி எடுத்த ஜாஜாவுக்கு நன்றி!)

பேட்டியில் அவர் சொன்ன ஒரு தகவல்: வாசகர் வட்டம் அவரது புத்தகங்களைப் பதிப்பித்தபோது சிட்டி அவர் எழுத்தில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று முரண்டினாராம். லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தன் அப்பா சத்தியமூர்த்தி ஒரு நாளைக்கு நூறு முறை தாயோளி என்பார், கிராமத்தில் இப்படித்தான் பேசுவார்கள் என்று சொன்னாராம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கி.ரா. பக்கம், அஞ்சலிகள்

3 thoughts on “கி.ரா. – அஞ்சலி

  1. கோபல்ல கிராமம் அளவிற்கு கோபல்லபுரத்து மக்கள் இல்லை என்பது என் எண்ணம், இரண்டாவது விகடனில் வந்தது. இன்னமும் அவரது சிறுகதைகள் பக்கம் செல்லவில்லை. அவரது வயது வந்தவர்களுக்கான கதைகளும் வித்தியாசமானது.

    அந்த குறிப்பிட்ட கெட்டவார்த்தை, சங்கரங்கோயில், ராசபாளையம், கோவில்பட்டி பகுதிகளில் வெகு சாதாரணம். அம்மா ஊர் சங்கரன்கோவில், அப்பகுதியில் இருக்கும் அம்மா வழி உறவினர்கள் அனைவரிடமும் சர்வ சாதரணமாக புரளும். என் வாயிலும் சில சமயம் வந்துவிடும். வெகு கவனமாக வெளியில் கேட்காமல் கட்டுப்படுத்திக் கொள்வேன். அங்கு இரண்டு வருடமே படித்த என் அண்ணன் ஒரு முறை சாதரணமாக இதை சொன்ன போது, அருகிலுருந்த காரைக்குடிக்காரர் ஒருவர் அதிர்ந்துவிட்டார்.

    Like

    1. // கோபல்ல கிராமம் அளவிற்கு கோபல்லபுரத்து மக்கள் இல்லை என்பது என் எண்ணம் // எனக்கும் அப்படித்தான் இருந்தது ரெங்கா, ஆனால் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.