பிடித்த சிறுகதை – Southern Thruway

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் போக்குவரத்து நெரிசலில் (traffic jam) மாட்டிக் கொண்டேன். கார்கள் இஞ்ச் இஞ்சாக நகர்ந்து கொண்டிருந்தன. மனைவிதான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்து சீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகம் மாதிரி கழிந்தது. அரை மணி நேரம்தான், ஆனால் முள்ளின் மேல் உட்கார்வது போல இருந்தது.

அன்றிரவு தற்செயலாகப் படித்த சிறுகதை Southern Thruway. பாரீஸுக்கு போகும் சாலையில் போக்குவரத்து நெரிசல். அதுவும் 12 வழிச் சாலை. நடுவில் சிக்கிக் கொண்டவர்களுக்கு எங்கேயும் போக முடியாது. நாட்கள் சில சென்றும் நெரிசல் அப்படியேதான் இருக்கிறது.

என்ன நடக்கும்? அக்கம்பக்கத்திலிருக்கும் பத்து இருபது கார்களின் பயணிகள் சேர்ந்து சிறு சிறு குழுக்கள் உருவாகின்றன. கதையில் யாருக்கும் பெயரில்லை. எல்லாரும் அவர்களுடைய் கார்களின் பேரால்தான் குறிப்பிடப்படுகிறார்கள் – ப்யூகாட், சிட்ரோயன் இந்த மாதிரி. குழந்தைகள், பெண்களுக்குதான விசேஷத் தேவைகள். அவற்றை எப்படி பூர்த்தி செய்வது என்று போராடும் குழுத்தலைவர்கள். தண்ணீர், உணவுப் பிரச்சினைகள். இருப்பதை இரண்டு நாள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்கப்புறம் சாலைக்கு வெளியே போய் தண்ணீர் கொண்டு வர முயற்சி. வயதான ஒருவர் இறக்கிறார். டாக்டரைக் கூப்பிட்டு வைத்து இன்னொருவருக்கு வைத்தியம் பார்க்க ஒரு காரை ஆஸ்பத்திரி ஆக்குகிறார்கள். காரை விட்டுவிட்டு ஓடிவிடும் ஒரு பயணியின் காரை ஓட்ட இன்னொருவன் நியமிக்கப்படுகிறான். அடுத்த lane-இருக்கும் ஒரு பெண்ணோடு உறவு.

ஏழெட்டு நாள் கழித்து நெரிசல் சரியாகிவிடுகிறது. கார்கள் நகர ஆரம்பிக்கின்றன. ஆனால் நாயகனின் lane, அவன் உறவு கொள்ளும் பெண்ணின் lane இரண்டும் வேறு வேறு வேகத்தில் போகின்றன. அவர்களின் பிரிவு நிரந்தரம்!

சாதாரணமாக சொல்வோம் – ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாக இருந்தது. அது உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு சொல்வடையை மிக சுவாரசியமான சிறுகதை ஆக்கி இருக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுத்தீயினால், வெள்ளத்தால், நிலநடுக்கத்தால், தைமூர், ஜெங்கிஸ் கான் போன்றோரின் படையெடுப்பால் தப்பி ஒரே இடத்தில் தங்க வேண்டி இருந்த அறிமுகமற்றவர்களின் சமூக உறவுகள் எப்படி பரிணமித்திருக்கும்? என்ன நடந்திருக்கும்? அவர்களுக்குள்ளே குழு உணர்வு எப்படி ஏற்பட்டிருக்கும்? அந்த மாதிரி உறவுகள் பலமானவையா? நிறைய கேள்வி கேட்க வைத்து சிறுகதை.

ஹூலியோ கோர்த்தசார் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். போர்ஹே, மார்க்வெஸ் போன்றவர்கள் வரிசையில் உள்ளவராம். இனி மேல் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்