வால்டர் டெவிஸ் – Queen’s Gambit

வால்டர் டெவிஸ் எழுதிய Queen’s Gambit சமீபத்தில் நெட்ஃப்ளிக்சில் சீரிசாக வந்திருக்கிறது. சீரிஸ் புத்தகத்தை ஏறக்குறைய அப்படியே நகல் எடுத்திருக்கிறது.

புத்தகத்தை ஒரு வரியில் சுருக்கிவிடலாம். ஒரு பிறவி மேதை – செஸ் விளையாட்டைப் பற்றி அறிந்த சில நாட்களிலேயே அதை நன்றாகப் புரிந்து விளையாடக் கூடியவர் – செஸ் சாம்பியனாகும் கதை.

கொஞ்சம் விவரம் வேண்டும் என்பவர்களுக்காக: பெத் சிறு வயதில் அனாதை ஆகிவிடுகிறாள். அனாதை விடுதியில் வேலை செய்யும் ஷைபல் மூலம் செஸ் பற்றி அறிகிறாள். அவளால் நுணுக்கங்களை வெகு விரைவில் கிரகித்துக் கொள்ள முடிகிறது. அனாதை விடுதியில் tranquilizer மாத்திரை பழக்கம் ஏற்படுகிறது. அந்த tranquilizer மாத்திரைகள் அவளுக்கு நன்றாக விளையாட இன்னும் உதவுகின்றன. பயிற்சி பெற்ற பலரை தோற்கடிக்கிறாள். ஒரு குடும்பத்தில் ஸ்வீகாரம் போகிறாள். அங்கே அப்பா சீக்கிரம் வீட்டை விட்டு ஓடிவிட, கொஞ்சம் கஷ்ட ஜீவனம். அம்மாக்காரி பெத் செஸ் விளையாட்டில் பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவாக இருக்கிறாள். அனேகமாக எல்லா போட்டிகளிலும் வென்று கொண்டே போகிறாள். அன்றைய உலக சாம்பியனிடம் ஒரு முறை தோற்கிறாள். பிறகு அடுத்த முறை சில நண்பர்களின் உதவியோடு வெல்கிறாள்.

டெவிஸ் இதை மேதைகளின் உலகத்தைக் காட்ட என்று நினைத்து எழுதி இருக்கலாம். என் கண்ணில் அதெல்லாம் நன்றாகவே வரவில்லை. மேலும் எப்பேர்ப்பட்ட மேதாவியும் செஸ்ஸில் பெத் அளவுக்கு வென்றதில்லை. பாபி ஃபிஷரும் காஸ்பரவோவும் கார்ல்ஸனும் கூட. பெத் புத்தகம் முழுவதிலும் நாலு முறை தோற்றிருந்தால் அதிகம். அது நம்பகத்தனமையைக் குறைக்கிறது.

குறைகள் இருந்தாலும் எனக்கு படிக்கத்தான் பிடித்திருந்தது.

எனக்கு செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. நன்றாக விளையாட மாட்டேன் என்பது வேறு விஷயம். அதனால் படித்தேன். மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன்.

பின்குறிப்பு: Queen’s Gambit என்பது செஸ்ஸில் ஒரு விளையாட்டு முறை. கிரிக்கெட்டில் yorker, square cut என்பதைப் போல. மிகவும் பிரபலமான விளையாட்டு முறை. நன்றாக விளையாடக் கூடிய எவரும் இந்த முறையின் நுணுக்கங்களை கரைத்துக் குடித்திருப்பார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்