நாகசாமி

தொல்லியல் நிபுண்ர் நாகசாமி பத்மபூஷன் விருது பெற்றவர். என் தங்கையின் மாமனார். அவரது Art of Tamil Nadu புத்தகத்தைப் பற்றி இங்கே.

அவரது சில புத்தகங்களைப் பற்றி:

மாமல்லை மிகச் சிறப்பான புத்தகம். மாமல்லபுரத்தின் அரசியல் வரலாறு, இலக்கியச் சான்றுகள், கோவில்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் அருமையாக, புரியும்படி விவரித்திருக்கிறார். இந்த மாதிரி யாராவது பள்ளிப் பருவத்தில் வரலாற்றை சொல்லிக் கொடுத்திருந்தால் மனதில் பதிந்திருக்கும். சிறந்த reference புத்தகம்.

பொதுவாக மாமல்லபுரத்து சிற்பங்கள், கோவில்கள் எல்லாம் நரசிம்மவர்ம பல்லவன் கட்டியது என்றுதான் கருதப்படுகிறது. நாகசாமி இவை ராஜசிம்ம பல்லவனால கட்டப்பட்டவை என்று வலுவாக வாதிடுகிறார். New Light on Mamallapuram என்ற புத்தகத்திலும் இதே வாதங்களை (ஆங்கிலத்தில்) முன்வைக்கிறார்.

சொல்மாலை இன்னொரு சிறந்த புத்தகம். பல கோவில் கல்வெட்டுகளை புரியும்படி விளக்குகிறார்.

தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் பெரிய கோவில் கல்வெட்டுக்களை புரியும் வகையில் சொற்களைப் பிரித்து பதிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

இந்தப் புத்தகத்தின் முகவுரையில் ஹூல்ஷ் என்பவரைப் பற்றி குறிப்பிடுகிறார். ஹூல்ஷ் 1891-இல் தென்னிந்திய கல்வெட்டுகளை 4 தொகுதிகளாகப் பதித்தாராம். அது 1969-இலேயே கிடைப்பது அரிதாகிவிட்டதாம். இவர் ஜெர்மானியர், பிரிட்டிஷ் அரசால் இந்தப் பணிக்கென அமர்த்தப்பட்டவர், தமிழ் கற்றுக்கொண்டு இந்தக் கல்வெட்டுக்களை பதித்திருக்கிறார். அசோகரின் கல்வெட்டுக்கள், சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மன் காலத்து கல்வெட்டுகளை பதிப்பிப்பதிலும் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.  இத்தனை முக்கியமானவர்களைப் பற்றி கூட தெரியவில்லை.

நாகசாமியின் எல்லா புத்தகங்களும் சாதாரணர்களுக்கு அல்ல, சில நிபுணர்களுக்கு மட்டும்தான். ஆனால் சாதாரணர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார். புகைப்படங்களை புத்தகத்தில் பதிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார், சாதாரணர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார். வரலாற்றை நம் போன்றவர்களுக்கு அருகில் கொண்டு வருகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு