தெலுகு கவி பிங்கலி சூரண்ணா

பிங்கலி சூரண்ணா பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞராம். கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு சில பத்தாண்டுகள் பிற்பட்டவர்.

ப்ரபாவதி ப்ரத்யும்னமு என்ற கவிதை நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பின் பேர் Demon’s Daughter. மொழிபெயர்த்தவர்கள் வெல்செரு நாராயணராவ் மற்றும் டேவிட் ஷுல்மன். முன்னவர் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியர். பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்துடன் இணந்தும் அண்ணமாச்சார்யா பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறாராம். சாஹித்ய அகடமி Fellow. ஷுல்மன் இஸ்ரேலியர். தமிழ், தெலுகு இரண்டிலும் அறிஞர். இருவருக்கும் ஒரு ஜே! கவிதையை மொழிபெயர்ப்பது உலக மகா கஷ்டம். இருவரும் அதை சாதித்திருக்கிறார்கள்.

பிரத்யும்னன் கிருஷ்ணன்-ருக்மணியின் மகன். வஜ்ரநாபன் என்ற அசுரன் பிரம்மாவிடம் கிடைத்த வரத்தால் இந்திரலோகத்துக்கு உரிமை கோருகிறான். அவன் கோட்டைக்குள் காற்று கூட அவன் அனுமதி இல்லாமல் நுழையமுடியாது என்ற வரம் பெற்றிருக்கிறான். அவன் மகள் பிரபாவதி பார்வதியில் அருளால் பிறந்தவள். பார்வதியே அவளுக்கு பிரத்யும்னனின் ஓவியத்தைத் தருகிறாள். இந்திரன் வஜ்ரநாபனைக் கொல்ல கண்ணனின் உதவியை நாடுகிறான். கண்ணன் சுசிமுகி என்ற அன்னத்தை பிரத்யுமனனுக்கு பிரபாவதிக்கும் இடையே தூது போகச் சொல்கிறான். சுசிமுகி பத்ரன் என்ற கூத்துக் கலைஞனை வஜ்ரநாபனிடம் புகழ்ந்து பேசுகிறது. வஜ்ரநாபன் பத்ரனை அழைக்க பத்ரன் வேஷத்தில் போவது பிரத்யும்னன். தன் வீட்டுக்கும் அரண்மனைக்கும் நடுவே சுரங்கம் தோண்டி அதன் வழியாக பிரபாவதியை தினமும் சந்திக்கிறான். பிரபாவதிக்கு குழந்தை பிறக்க, வஜ்ரநாபனுக்கு தெரிய வர, போர். வஜ்ரநாபன் இறக்கிறான்.

இந்த அன்னம்விடுதூது என்றெல்லாம் தமிழில் படிக்கும்போது (நளவெண்பா…), மகா செயற்கையாக இருக்கும். இதில் சுசிமுகி வலுவான பாத்திரம். கேலியான தொனி (ironical tone) மிகச் சிறப்பாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரபாவதியை பிரத்யும்னனிடம் வர்ணிப்பது

Lotus blossoms, crescent moon, banyan fruits,
tortoise shell, a quiver of arrows, banana plants,
sandbanks, whirlpools, a lion’s waist, golden pots,
fresh lotus stalks, leaf buds, the conch of the Love God,
jeweled mirrors, red coral, a sesame flower,
darting fish, a bow of horn, a piece of the moon,
the curves of the letter Sri, black bees

– it’s a shame that we can’t do better

அதாவது வழக்கமான ஒப்பிடல்களை – தாமரைப்பூ பாதங்கள், மணல்மேடுகள் போன்ற பின்னழகு, தங்கக் குடங்கள், சங்குக் கழுத்து, எள்ளுப்பூ மூக்கு இத்யாதி – ஏறக்குறைய மனப்பாடமாக ஒப்பித்துவிட்டு இதை விட நன்றாக சொல்ல முடியவில்லையே என்பது பிரமாதம். இந்த உவமைகள் அன்றே தேய்வழக்காகிவிட்டிருக்க வேண்டும், அவற்றை பயன்படுத்திவிட்டு அதற்கு மேல் அனாயாசமாக சென்றுவிடுகிறார்.

அதே போல பிரத்யும்னன் பிரபாவதியை முதல் முறை சந்திக்கும்போது பிரபாவதி நாணிக் கோணிக் கொள்வது வழக்கமான பாணியில்தான் விவரிக்கப்படுகிறது. ஆனால் நீ இப்படி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் அவன் ஓடிவிடுவான் என்று தோழி சொல்லும்போது அந்த அச்சம் மடம் நாணம் எல்லாவற்றுக்கும் ஒரு farcial தொனியை, ஏறக்குறைய ஒரு தெருக்கூத்து தொனியை, மராத்தி தமாஷாக்களின் தொனியை கொண்டு வந்துவிடுகிறார். அன்று இலக்கியத்தின் எழுதப்படாத விதிகளை பின்பற்றுகிற மாதிரியே எழுதி அவற்றை அதே நேரத்தில் மீறவும் செய்கிறார்.

பிற்கால தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது – ஜீவகசிந்தாமணி போன்ற நூல்கள் – இதை விட தட்டையான பாத்திரப் படைப்பு இருக்க முடியுமா என்று தோன்றும். இந்த காவியத்தில் சில பாத்திரங்கள் தட்டையானவைதான். ஆனால் பல இடங்களில் இயற்கையாக இருக்கிறது. உதாரணமாக கண்ணனிடம் உதவி கேட்கும் இந்திரன்; கண்ணன், இந்திரன் இருவருமே சிறிய பாத்திரங்கள்தான். ஆனால் இந்திரன் வஜ்ரநாபன் தன்னைப் படுத்தும் பாட்டை விவரிப்பது மிக இயற்கையாக இருக்கிறது.

தமிழில் கம்பனையோ, இளங்கோவையோ படிக்கும்போது சும்மா அலங்காரமான விவரிப்பு எல்லாம் கவிதையா, இதெல்லாம் பக்கத்து மாகாணக்காரர்கள் கூட ரசிப்பார்களா என்று சில சமயம் தோன்றும். அதெல்லாம் ரசிக்கும்படிதான் இருக்கும் என்று இந்தக் காவியத்தைப் படித்தபோது புரிந்தது. கவிதையை உள்வாங்கி மொழிபெயர்ப்பவர்கள் வேண்டும், அவ்வளவுதான். கம்பனுக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மிக அழகான விவரிப்புகள். ஒரு எடுத்துக்காட்டு: பிரத்யும்னனுக்காக காத்திருக்கும் பிரபாவதி.

She kept staring at the sun,
waiting for it to set,
and her eyes grew red
with glowing desire,
so red that they colored
the sun itself.

The sun jumped into the ocean
like a Yogi taking his ritual bath
at day’s end, and the sky was
the ochre robe he hung up to dry
and the stars, the drops of water
that splashed as he dove.

Darkness spread through space.
The women of the sky
were celebrating Love’s festival
with showers of black musk.

There was white in the east
and the first stars appeared.
Indra’s white elephant
was sprinkling a fine spray
from its trunk.

The moon rose, with its dark spot
shining in the middle,
as if the dark woman who is Night
were reflected in a polished mirror
held by her servants in the east
as she makes up her face.

சிருங்கார ரசமும் சிறப்பாக வந்திருக்கிறது. கலவியின் அடங்காத ஆசையை, இன்னும் இன்னும் என்று பொங்கும் வேட்கையை மிக அருமையாக விவரிக்கிறார்.

He wants to stare at her breasts, but the wish to
embrace her takes over.
He wants to embrace her, but the idea of caressing
her buttocks takes over.
He wants to caress her buttocks, but he also wants
to straighten the hair on her forehead.
More than he wants to straighten her hair, he just has
to kiss her lips.
More than everything, he wants to make love to her.
Even more than making love, he really wants to kiss her.
That’s the thing about making love. One move
precludes another.

புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: நான் அன்னம் என்கிறேன், ஆனால் goose என்றுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் சரஸ்வதி கனெக்‌ஷனும் விவரிக்கப்படுகிறது. சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவைதானே! Swan என்று ஏன் எழுதவில்லை என்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியக் காவியங்கள்