ஹுசேன் ஜெய்தி எழுதிய “Class of 83”

மும்பையின் குற்ற உலகம் “புகழ்” பெற்றது. கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம், அருண் காலி என்ற நீண்ட வரலாறு உள்ளது. சமீப காலமாக “பாய்” ஆக இருப்பது சமூகம் ஏற்கும் ஒரு வேலையாகவே மாறிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா?

ஹுசேன் ஜெய்தி எழுதிய Class of 83 (2019) அப்படி கட்டுப்படுத்த போராடிய ஒரு அதிகாரியைப் பற்றிய புத்தகம். ப்ரதீப் ஷர்மாவின் வாழ்க்கை வரலாறு என்றே சொல்லலாம். Class of 83-இல் இன்னும் பலர் இருந்தாலும் இந்தப் புத்தகம் ஷர்மாவைதான் பெரும்பான்மையாக விவரிக்கிறது.

ஷர்மா 83-இல் இன்ஸ்பெக்டர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். அவருடைய சகாக்கள் விஜய் சாலஸ்கர். ஷர்மா, சாலஸ்கர், ரவி ஆங்கரே, ப்ரஃபுல் போசலே, அஸ்லம் மோமின் போன்றவர்கள் சட்டத்தை வளைத்து – “குற்றவாளிகளை” சுட்டுத் தள்ளி – மும்பையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 83-இல் இன்ஸ்பெக்டர் பயிற்சி எடுத்தவர்கள். பிற்காலத்தில் தயா நாயக் இவர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

இப்படி சுட்டுத் தள்ளினால் சட்டம் எதற்கு என்ற கேள்வி எல்லாம் எனக்கு இல்லை. அல் கபோனுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். டைகர் மெமன், தாவூத் இப்ரஹிம் போன்றவர்களுக்கெல்லாம் வழக்கு, விசாரணை எல்லாம் ஒரு கேடா என்றுதான் தோன்றுகிறது. இது தவறுதான், ஆனால் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

ஷர்மாவின் முதல் என்கௌண்டர் ஏறக்குறைய சினிமாத்தனமானது. இரண்டு ரௌடிகள் வயதான கிழவன் கிழவியை வீட்டிலிருந்து இழுத்து வந்து வெளியே போடுகிறார்கள். தடுக்க வந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் வாளால் கையில் வெட்டு விழுந்து காயம் அடைகிறார்கள். மூன்றாமவரை வெட்டப் போகும்போது ஷர்மா அந்த ரௌடியை சுடுகிறார். அவனது நண்பன் இவரை வெட்ட வர அவனையும் சுடுகிறார். புலி ரத்தத்தின் ருசி கண்டுவிட்டது!

“குற்றவாளிகளை” சுட்டுத் தள்ள முதலில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். யாராவது துப்பு கொடுக்க வேண்டும். அப்படி துப்பு கொடுப்பவர்களும் சிறுசிறு குற்றங்களை – பிக்பாக்கெட், திருட்டு இப்படி ஏதாவது – செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தருவதன் மூலம் – சில பல சமயங்களில் பணமே தருவதன் மூலம்தான் – துப்பு கிடைக்கும் என்பதை ஷர்மா தன் வேலைக்காலத்தின் ஆரம்பத்திலேயே உணர்ந்தார். அதற்காக அப்படிப்பட்ட ஒரு நெட்வொர்க்கை கட்டி அமைத்திருக்கிறார்.

அப்புறம் என்ன? வரிசையாக துப்பு, சுட்டுக் கொலை என்றுதான் வாழ்க்கை போயிருக்கிறது. 312 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறாராம்.

சகா சாலஸ்கர் நெருங்கிய நண்பர் அப்போது. இருவரும் ஒன்றாகப் பணி ஆற்றி இருக்கிறார்கள். ஆனால் பின்னால் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவருக்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. சாலஸ்கர் 2008 மும்பை தாக்குதலில் கசப்-இஸ்மாயிலை எதிர்த்து மரணம் அடைந்திருக்கிறார்.

தாவூத் இப்ரஹிமின் சகோதரன் இக்பால் கஸ்கரை மிரட்டி பணம் பறித்ததற்காக கைது செய்திருக்கிறார். பொதுவாக தாவூத் இப்ரஹிமின் கும்பலை ஒழித்துக் கட்ட பாடுபட்டிருக்கிறார்.

மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் சும்மா இருக்குமா? நீதிமன்றங்கள் சில சமயம் அவரை கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால் மும்பையை அமைதியாக வைத்திருப்பதில் இவருக்கு பெரிய பங்கிருக்கிறது என்று உணர்ந்த மேலிடம் இவரை பொதுவாக ஆதரித்திருக்கிறது, அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இத்தனைக்கும் ஒரு முறையாவது ஒரு அப்பாவியை தவறுதலாக அடையாளம் கண்டு போட்டுத் தள்ளி இருக்கிறார் என்று தெரிகிறது.

மேலிடம் ஒரு காலத்தில் இவருக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்று இவரை ஒரு என்கௌண்டர் கேஸில் சேர்த்துவிட்டது. 3 வருஷம் சிறையில் இருந்திருக்கிறார். கடைசியில் ஜோடித்த கேஸ் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒருவர் அப்பழுக்கற்ற உத்தமராக இருக்க முடியுமா? நிச்சயமாக அடி உதை மூலம்தான் பல முறை துப்பு துலங்கி இருக்கும். அதில் நிரபராதிகள் மாட்டிக் கொள்ள மாட்டார்களா என்ன? ஜெய்தி அவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது என்று வேறு கோடி காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை மூலமாக வைத்து திரைப்படமும் வந்திருக்கிறது.

அங்கங்கே சுவாரசியத்துக்காக கொஞ்சம் சரக்கை சேர்த்துக் கொண்டிருக்கிறார். காற்றடித்து ஷர்மாவின் முடியைக் கலைத்தது என்றெல்லாம் படிக்கும்போது கொஞ்சம் சிரிப்பு வருகிறது. புத்தகம் பொதுவாக ஷர்மாவை நல்லவராகவும் வல்லவராகவும் காட்ட முயற்சி செய்கிறதுதான். ஆனாலும் அதில் உண்மை தெரிகிறது. விறுவிறுப்பாக செல்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்