நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து: கி.ஆ.பெ. விஸ்வநாதம்

இளமையில் தமிழறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் என்று பல பேர்களைக் கேட்டதுண்டு. அனேகமாக பேர் மட்டும்தான். வாரியார், கீரன் இருவரையும் சில சமயம் கோவில் காலட்சேபத்தில் கேட்டிருக்கிறேன், அவ்வளவுதான்.  ம.பொ.சி., மு.மு. இஸ்மாயில், சௌந்தரா கைலாசம், குன்றக்குடி அடிகளார்… எல்லாம் பெயரளவில்தான் தெரியும். இத்தனை வயதான பிறகும் இவர்களில் பலரது பங்களிப்பு, முக்கியத்துவம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இந்த வரிசையில் உள்ள ஒருவர் கி.ஆ.பெ. விஸ்வநாதம். அவர் புத்தகம் ஒன்று – அறிவுக்கு உணவு – எனக்குப் பள்ளியில் படித்தபோது பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி எதற்கோ பரிசாகக் கிடைத்தது. அப்போதிலிருந்தே இவர் யார் என்ற கேள்வி உண்டு. இந்தப் புத்தகம்தான் பரிசு என்று தெரிந்திருந்தால் போட்டியில் கலந்து கொண்டிருக்கவே மாட்டேன் என்று நினைத்ததும் உண்டு.

விஸ்வநாதத்தின் புத்தகங்கள் 2008-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. பல புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை படித்தபோது இதையெல்லாம் நாட்டுடமை ஆக்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தோன்றியது. சரி ஒரு வேளை இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர், அவரை கௌரவிக்க வேண்டும் என்று செய்துவிட்டார்களா என்று தேடிப்பார்த்தேன். 1938-இல் ஹிந்தியை எதிர்த்துப் போராடிய முக்கியத் தலைவர்களில் ஒருவர், அப்போது ஈ.வே.ரா.வுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். நீதிக்கட்சி பிரமுகர். தபால்தலை வெளியிட்டிருக்கிறார்கள், திருச்சியில் ஒரு கல்லூரிக்கு அவர் பெயர். அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம், எதற்கு புத்தகங்களை நாட்டுடமை ஆக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அவரது பங்களிப்பு என்று நான் இன்று உணர்வது தமிழின் உயர்வு என்று இடைவிடாமல் பேசி எழுதிக் கொண்டிருந்ததது மட்டுமே. அதிலும் இவரிடம் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றவர்களிடம் சில சமயம் தென்படும் கிறுக்குத்தனமான வெறி இல்லை. ஏன் ஈ.வெ.ரா/அண்ணாதுரை போன்றவர்களின் பேச்சிலும் எழுத்திலும் தெரியும் அப்பட்டமான பிராமண வெறுப்பு இல்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன் நின்றதை இரண்டாவது பங்களிப்பாக சொல்லலாம். இன்னும் தெரிந்தவர்கள் இருந்தால் விளக்குங்கள்!

விஸ்வநாதத்தின் புத்தகங்களைப் படித்தால் அந்தக் காலத்து சொற்பொழிவுகளிலிருந்து சில பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ புத்தகமாகப் போட்டுவிட்டது போலத்தான் இருக்கிறது. அறிவுரை மழை. சுவாரசியத்துக்காக அங்கங்கே குட்டிக் கதைகள், மேற்கோள்கள். இதையெல்லாம் அன்று கேட்டவர்கள் ரசித்திருக்கலாம், இன்று எந்தப் பயனும் இல்லை.

அவரது புத்தகங்களிலிருந்து எனது takeaways:

  1. சுருக்கமாக பேசுகிறார், எழுதுகிறார். அலங்காரத் தமிழ், பண்டித நடை எதுவுமில்லை. நேரடியாக, சொல்ல விரும்பியதை கச்சிதமாகச் சொல்கிறார்.
  2. எனது நண்பர்கள் புத்தகத்தை மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன். அவர் பழகிய பல பிரமுகர்களை நினைவு கூர்கிறார்
  3. தமிழ்ச்செல்வம் புத்தகத்தை இன்று அனேகர் ரசிக்கமாட்டார்கள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. எது செல்வம், தமிழின் பெருமை, கொடை என்று பல தலைப்புகளில் சிறு சிறு நாடகங்கள்
  4. நபிகள் நாயகம் என்று ஒரு புத்தகம். அது ஏதோ இஸ்லாமிய விழாவின்போது அவர் ஆற்றிய சொற்பொழிவின் வரி வடிவமாம். இவர் நாத்திகர் அல்லர் (என்றுதான் நினைக்கிறேன்). மாற்று மத விழாவில் போலித்தனமாக ஹிந்து மதத்தைத் தாக்காமல் பேசி இருக்கிறார். முகம்மது நபியைப் பற்றி ஓரளவாவது அறிந்திருக்கிறார். இப்படிப்பட்ட உரைகள் மத நல்லிணக்கத்தை வளர்க்கும். இவருக்கும் ஒரு ஜே, இவரை அழைத்தவர்களுக்கும் ஒரு ஜே!
  5. அறிவுக் கதைகள் புத்தகத்திலிருந்து: ஈ.வே.ரா. காங்கிரசிலிருந்து விலகிய பிறகு நடந்த சம்பவம் என்று யூகிக்கிறேன். ஏனென்றால் கி.ஆ.பெ. “அவர் மாடியில் உட்கார்ந்துகொண்டு குடியரசு பத்திரிகைக்கு என்னவோ எழுதி கொண்டிருந்தார்” என்று ஆரம்பிக்கிறார். கி.ஆ.பெ. உண்டியல் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தாராம். அப்போது ராஜாஜி வந்திருக்கிறார். சேதி தெரிந்ததும் ஈ.வே.ரா. சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு கீழே போய் ராஜாஜியை மேலே அழைத்து வந்திருக்கிறார். கி.ஆ.பெ.வின் முன்னிலையில் ராஜாஜி பேசத் தயங்குவது தெரிந்து ஈ.வே.ரா. “நம்ம ஆள்தான்” என்று அவருக்கு தைரியம் சொல்லி இருக்கிறார். ராஜாஜிக்கு ஏதோ சந்தேகம், ஈ.வெ.ரா.விடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார். ஈ.வே.ரா. “சந்தேகமா? தலைவருக்கா? என்னிடமா ஆலோசனை?” என்று அடுக்கினாராம். ராஜாஜி விளக்க (என்ன சந்தேகம் என்பதை கி.ஆ.பெ. எழுதவில்லை), ஆலோசனை கிடைத்திருக்கிறது. ராஜாஜி தனக்கும் அதுதான் தோன்றியது, ஆனால் பொதுஜனங்கள் என்ன நினைப்பார்களோ என்று தயக்கமாக இருக்கிறது என்று சொன்னாராம். அதற்கு ஈ.வெ.ரா. “பொதுஜனங்கள் என்ற சொல்லை மற்றவர்கள் சொல்லலாம்; நீங்களும் நானும் சொல்லலாமா?” என்று கேட்டாராம். சரிதான் என்று ராஜாஜி போய்விட்டாராம். இந்த இருவருக்கும் இருந்த ஆத்மார்த்தமான நட்பும் நெருக்கமும் என்ன அருமையாக வெளிப்பட்டிருக்கிறது?
  6. வானொலியிலே அவர் ஆற்றிய பல வானொலி உரைகளின் தொகுப்பு. 1947-இல் ஆற்றிய ஒரு உரையில் 20 வருஷங்களுக்கு முன் மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதத்தில் தேர்ச்சி தேவை என்று ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதாகவும் அன்று முதல்வராக இருந்த பனகல் அரசர் முயற்சியால் அந்த மசோதா தோல்வி அடைந்ததாகவும் குறிப்பிடுகிறார். சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்தவக்கல்வி என்று ஒரு சட்டம் இருந்தது, அதை நீதிக்கட்சி/திராவிட இயக்கம்தான்  அதை நீக்கியது என்று திராவிட இயக்கத்தினர் அவ்வப்போது பேசுவார்கள். இந்த  முறியடிக்கப்பட்ட மசோதாவைத்தான் சட்டம் என்று மிகைப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
  7. திருக்குறள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். திருக்குறளில் செயல் திறன் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது.
  8. நான்மணிக்கடிகைக்கு உரை எழுதி இருக்கிறார்.
  9. அவருடைய எந்தப் புத்தகமும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு முக்கியமானதல்ல. ஆனால் தமிழ் தமிழ் என்று சிந்தித்த சங்கிலியில் அவரும் ஒரு கண்ணி.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமையான எழுத்து