மொழி பற்றி காந்தி

கி.ஆ.பெ. விஸ்வநாதத்தின் ஹிந்தி எதிர்ப்பு பங்களிப்பைப் பற்றி எழுதியபோது காந்தி இதைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று தேடிப் பார்த்தேன். 1938-39களில் முதல்வர் ராஜாஜி ஹிந்தியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்ததும் அதை எதிர்த்து பெரிய போராட்டம் வெடித்ததும் வரலாறு. ராஜாஜி எதிர்ப்பாளர்களை கடுமையாக அணுகி இருக்கிறார், சிறைக்கு அனுப்பி இருக்கிறார். காந்தி இதைப் பற்றி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!)  சத்தியமூர்த்தி ஹிந்தி எதிர்ப்பாளர்களை மிருதுவாக அணுக வேண்டும், சிறைக்கெல்லாம் அனுப்பக் கூடாது, பெற்றோர் நாங்கள் இதை விரும்பவில்லை என்று சொன்னால் பிள்ளைகளுக்கு ஹிந்தி கற்பதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும், முதல்வர் ராஜாஜியிடம் சொல்லுங்கள் என்று காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார். காந்தி என்ன பதிலளித்தார் என்று தெரியவில்லை.

ஆனால் காந்தி மொழி பற்றி வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று கிடைத்தது.

உண்மையில் காந்திக்கு மொழிப் பிரச்சினை என்பது ஹிந்தி-உருது பிரச்சினைதான். ஹிந்தியா உருதுவா என்ற கேள்வி ஹிந்து-முஸ்லிம்களைப் பிரிக்கிறது என்று எண்ணி இருக்கிறார், அதை எப்படி தீர்ப்பது என்றுதான் சிந்தித்திருக்கிறார். தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகள் அவருடைய ராடாரிலேயே இருந்ததாகத் தெரியவில்லை. பொது மொழி மூலம் தொடர்பு கொள்வது வேறு, பொது மொழி ஆட்சி மொழியாகிவிட்டால், அதிகாரபூர்வமான தொடர்பு மொழி ஆகிவிட்டால் பின்னர் அதில் இருக்கும் தேர்ச்சி வேலை வாய்ப்புகளை, அதுவும் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளை நிர்ணயிக்கும் என்ற நடைமுறை வேறு என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பொது மொழிக்கும் ஆட்சி மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அவர் சிந்தித்துப் பார்த்ததாகவும் தெரியவில்லை.

இந்தியப் பொதுமொழியாக ஹிந்தி/ஹிந்துஸ்தானி/உருது மட்டுமே இருக்க முடியும் என்று உறுதியாகக் கருதி இருக்கிறார். அவர் கண்ணில் இந்த மூன்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வட இந்தியாவில் அன்று பேசப்பட்டதைத்தான் அவர் பொதுவாக ஹிந்தி/ஹிந்துஸ்தானி என்று குறிப்பிடுகிறார். அதற்கு முக்கிய காரணம் அதுவே அதிகமான இந்தியர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழி என்பதுதான். அவர் காலத்தில் இன்றைய பாகிஸ்தானும் இந்தியாவாகத்தான் இருந்தது. முப்பது கோடி மக்களில் இருபது கோடி பேரால் ஹிந்தி/உருதுவை புரிந்து கொள்ளவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கும்.

ஆங்கிலம் தேவையே, ஆனால் ஆங்கிலம் இந்தியாவின் பொது மொழியாக இருக்க முடியாது, ஏதேனும் இந்திய மொழிதான் அதற்கு தகுதி உள்ளது என்று எண்ணி இருக்கிறார். மேலும் பிற நாட்டு மொழி இந்தியாவின் பொது மொழி என்ற எண்ணமே அவருக்கு ஒவ்வாமையைக் கொடுத்திருக்கும். ஆங்கில மோகத்தை பல இடங்களில் சாடி இருக்கிறார். தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தபோது குஜராத்தி அமைப்பு ஒன்று அவருக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறது, பேசிய அனைவரும் ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார்கள். மனிதர் குஜராத்திகள் கூட்டத்தில் எதற்கு ஆங்கிலத்தில் பேச்சு என்று நொந்து போயிருக்கிறார்.

ஆங்கிலத்தின் முக்கியத் தேவை சர்வதேசத் தொடர்பு, மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் அறிவுச் செல்வங்களை தெரிந்து கொள்ள, அதற்கு கல்லூரி காலத்திலிருந்து ஆங்கிலம் படித்தால் போதும் என்கிறார். தேவை ஏற்படும்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார். எல்லாருக்கும் ஆங்கிலம் தேவையில்லை என்று கருதி இருக்கிறார். தேவை ஏற்படும்போது ஹிந்தி கற்றுக் கொண்டால் போதாதா, எல்லாருக்கும் ஹிந்தி தேவைதானா என்று அவருக்கு தோன்றிய மாதிரியும் தெரியவில்லை, அவரை யாரும் கேட்டதாகவும் தெரியவில்லை.

ஆனால் தாய்மொழிக்கே முதல் இடம், பொதுமொழிக்கு இரண்டாமிடம்தான் என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார். மூன்றாவது இடம்தான் சர்வதேசப் பொது மொழிக்கு. (அதாவது ஆங்கிலத்துக்கு)

எல்லா இந்திய மொழிகளுக்கும் ஒரே எழுத்து வடிவம் இருந்தால் மொழிகளைக் கற்றுக் கொள்வது வசதியாக இருக்கும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அது தேவநாகரி லிபியாக இருப்பதுதான் சரி வரும், அதற்கு ஆங்கில லிபி சரிப்படாது என்று வாதிடுகிறார்.

ஆனால் பல முஸ்லிம்கள் உருது லிபிதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார்கள். இரண்டு லிபிகள் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சமரசம். இரண்டு லிபி இருக்கலாம் என்றால் ஏன் மூன்று இருக்கக் கூடாது, எதற்காக தமிழின் வரி வடிவத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யாரோ கேட்டதற்கு நீங்கள் சொல்வது சரியே, தர்க்கரீதியாக இரண்டு லிபி என்று சொல்வது தவறுதான், உண்மையில் ஒரே லிபிதான் இருக்க வேண்டும், இது தாற்காலிக சமரசம், முஸ்லிம்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்காக, காலப்போக்கில் ஒரே லிபி ஆகிவிடும் என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்.

பொதுவாக இந்தியர்களுக்கு பிற இந்திய மொழிகளைக் கற்பது சுலபம் என்று எண்ணி இருக்கிறார். எப்போதும் நான் நாலு வாரத்தில் தமிழ் கற்றுக் கொண்டேன், ஆறு வாரத்தில் இந்த மொழியைக் கற்றுக் கொண்டேன், ஒரே லிபி இருந்தால் எல்லா மொழிகளையும் விரைவாகக் கற்றுக் கொள்வேன் என்று பல முறை திரும்பத் திரும்ப சொல்கிறார். தான் பிற மொழிகளை விரைவாகக் கற்றுக் கொண்டதால் எல்லாரும் அப்படி கற்றுக் கொண்டுவிடுவார்கள் என்று நம்பி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி சுலபமாக ஓரிரு மாதங்களில் ஒரு இந்தியனால் இன்னொரு இந்திய மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்றால் தேவை ஏற்படும்போது ஹிந்தி கற்றுக் கொண்டால் போதுமே, பள்ளிகளில் ஹிந்தி எதற்கு என்ற எண்ணம் அவருக்குத் தோன்றவில்லை. யாரும் அவரை கேட்டதாகவும் தெரியவில்லை.

சொந்தக்கதை சோகக்கதை. எனக்கு இன்னும் ஹிந்தி நன்றாகப் பேச வராது.  ஓரளவு பேசவே இரண்டு மூன்று வருஷம் ஆயிற்று. எழுதப் படிக்கும் முயற்சியையே கைவிட்டுவிட்டேன். ஒரு பக்கத்தை எழுத்துக் கூட்டி படிக்க நாலைந்து நிமிஷம் ஆகும். ஆங்கிலமும் தமிழும் வேகவேகமாகப் படித்து பழக்கம் ஆகிவிட்டது. அதனால் இப்படி எழுத்துக் கூட்டி படிக்க பொறுமை இல்லை. இப்போது ஹிந்தி லிபியே மறந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் காந்தியைப் பின்பற்றியவர்கள் பலரும் ஹிந்தியைக் கற்றுக் கொண்டனர். ஆனால் தமிழ் தமிழ் என்றும் உருகியவர்களுக்கு காந்தியின் நிலை கொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. ம.பொ.சி. போன்றவர்களால் காந்தியை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லிவிடவும் முடியாது. ஆனால் ஹிந்தி ஆட்சி மொழி என்பதை ஏற்கவும் முடியாது. என்ன செய்ய? காந்தி தாய்மொழிக்குத்தான் முதலிடம்  என்று சொன்னதை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டினார்கள்… (காந்தியடிகளும் ஆங்கிலமும் புத்தகம்)

ஒரு வேளை ஐம்பது அறுபதுகளில் உயிரோடு இருந்திருந்தால் அவரது எண்ணங்கள் மேலும் பரிணமித்திருக்குமோ என்னவோ. இன்று உயிரோடு இருந்தால் தமிழர்களின் ஹிந்தி எதிர்ப்பு உணர்வு எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்.  அவர் என்றும் சிறுபான்மையரின் அச்சங்களைக் குறைக்க பெரும்பான்மையர் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்று நினைத்தவர், உணர்வுபூர்வமான எண்ணங்களை தர்க்கரீதியாக அணுகுபவர் அல்லர். ஆங்கில லிபி, ஆங்கிலம்-ஹிந்தி-தாய்மொழி மூன்றும் வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்