தமிழ் பத்திரிகைகள் (எழுபதுகள் வரை)

சோமலே 1974 வாக்கில் தமிழ் பத்திரிகைகளைப் பற்றி ஆற்றிய ஒரு சொற்பொழிவு புத்தகமாகக் கிடைத்தது. மிகவும் சுவாரசியமான தகவல்கள்.

 1. முதல் அச்சகம் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக்காயல் என்ற ஊரில் 1578-இல் அமைக்கப்பட்டிருக்கிறது. போர்த்துக்கீசிய பாதிரி ஹென்ரிகஸ் என்பவர் தம்பிரான் விளக்கம் என்ற புத்தகத்தை முதல் முறையாக அச்சிட்டிருக்கிறார். (இது கொல்லத்தில் அச்சிடப்பட்டது என்றும் படித்திருக்கிறேன், எது சரி என்று தெரியவில்லை.)
 2. 1831-இல் முதல் தமிழ் பத்திரிகை வெளிவந்திருக்கிறது. பேரே “தமிழ் பத்திரிகை“.  கிறிஸ்துவ சமயப் பிரச்சார பத்திரிகை.
 3. 1856-இல் பெர்சிவல் பாதிரியார் தினவர்த்தமானி என்ற வார இதழை தொடங்கி இருக்கிறார். கிறிஸ்துவ சமயப் பிரச்சார பத்திரிகை.
 4. 1883-இல் சுதேசமித்திரன் வாரம் மும்முறை. 1898-இல் நாளிதழ் ஆகி இருக்கிறது. ஜி. சுப்ரமணிய ஐயர் தொடங்கி நடத்தினார். 1898-இல் ஆயிரம் பிரதிகள் விற்றதாம்.
 5. 1892-இல் விவேகசிந்தாமணி என்ற முதல் மதச்சார்பற்ற தமிழ் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. (1840-இல் பாலதீபிகை என்ற சிறுவர் பத்திரிகை வெளிவந்ததாக சீனி. வேங்கடசாமி சொல்கிறார்.)
 6. பாரதியார் சுதேசமித்திரனில் ஜி. சுப்ரமணிய ஐயரிடம் துணை ஆசிரியராக பணி ஆற்றி இருக்கிறார். பின்னா இந்தியா வார இதழ், விஜயா என்ற நாளிதழ், சக்ரவர்த்தினி மற்றும் கர்மயோகி என்ற மாத இதழ்களை நடத்தி இருக்கிறார்.
 7. திரு.வி.க. 1917-20-இல் தேசபக்தன் நாளிதழையும், 1920-1933 காலத்தில் நவசக்தி நாளிதழையும் நடத்தி இருக்கிறார். தேசபக்தன் 3000 ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்டதாம்.
 8. வ.வே.சு. ஐயர் திரு.வி.க.வுக்கு பிறகு தேசபக்தனுக்கு ஆசிரியராக இருந்தார். பத்திரிகை கட்டுரை ஒன்றுக்காக சிறை சென்றார்.
 9. சுப்ரமணிய சிவா நடத்திய பத்திரிகை ஞானபானு. இதில்தான் பாரதியார் எழுதிய சின்னசங்கரன் கதை வெளிவந்தது.
 10. ராஜாஜி மதுவிலக்கு பிரச்சாரத்துக்காகவே விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தினார்.
 11. டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் இருவரும் குறிப்பிட வேண்டிய நாளிதழ் ஆசிரியர்கள். (தினமணி)
 12. சி.பா. ஆதித்தனார் தொடங்கிய தினத்தந்தி பத்திரிகை “பாமரர்களிடமும்” பத்திரிகை படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியது. ரிக் ஷாக்காரனை படிக்க வைத்தவர் ஆதித்தனார் என்கிறார் சோமலே.
 13. முதல் முக்கிய வார இதழ் விகடன்.
  1. எஸ்.எஸ். வாசன் 200 ரூபாய் கொடுத்து வாங்கி இதழை முற்றிலும் மாற்றினார்.
  2. கல்கி கிருஷ்ணமூர்த்திதான் மாற்றத்தின் முக்கிய காரணி.
  3. கல்கியின் ஆரம்பகால நகைச்சுவை கட்டுரைகளுக்கு வாசன் தலா 25 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
  4. கர்நாடகம் என்ற புனைபெயரில் கல்கி நாடக, சங்கீத விமர்சனங்களை முதல் முறையாக ஒரு பத்திரிகையில் எழுதினார்.
  5. தியாகபூமிதான் தொடர்கதை வடிவத்தை வார இதழ்களில் ஸ்தாபித்திருக்கிறது.
  6. தேவன், ஓவியர் மாலி, நாடோடி, துமிலன், சாவி என்று ஒரு குழு; எஸ்.வி.வி., பி.ஸ்ரீ. போன்றவர்களின் எழுத்துக்கள். விகடன் பிய்த்துக் கொண்டு போயிற்று. ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் கல்கி காலத்திலேயே விற்றிருக்கிறது.
  7. உ.வே.சா., வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, முன்னாள் முதல்வர் குமாரசாமி ராஜா போன்ற பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை விகடனில்தான் எழுதி இருக்கிறார்கள்.
 14. இரண்டாவது முக்கிய வார இதழ் கல்கி
  1. கல்கி வாசனிடமிருந்து பிரிந்து வந்து சதாசிவத்துடன் இணைந்து தொடங்கிய பத்திரிகை.
  2. பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் எல்லாம் இதில்தான் தொடர்கதையாக வந்தன.
  3. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, டிகேசி எழுதிய கம்பராமாயணத் தொடர் எல்லாம் இதில்தான் தொடராக வெளிவந்தன.
 15. மூன்றாவது முக்கிய வார இதழ் குமுதம்
  1. ஆரம்ப காலத்தில் 2000 பிரதிகள்தான் விற்றதாம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நஷ்டத்தில்தான் ஓடியதாம்.
  2. 1974-இல் குமுதம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பிரதிகள் வாராவாரம் விற்றிருக்கிறது. அன்று ஆசியாவிலேயே அதிகம் விற்ற பத்திரிகை இதுதானாம். ஒரு பத்திரிகையை ஐந்து பேர் படித்தார்கள் என்றாலும் கூட 25 லட்சம் பேர் படித்திருக்கிறார்கள். அன்று 3 கோடி தமிழர் இருந்திருப்பார்களா? கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் தமிழர்கள் படித்திருக்கிறார்கள். ஒரு பிரதிக்கு ஐந்து பைசா லாபம் வந்திருந்தால் கூட மாதம் ஒரு லட்சம் ரூபாய் லாபம். 74-இல் மாதம் ஒரு லட்சம்!
 16. சாவி இந்தக் காலகட்டத்தில் தினமணி கதிர் பத்திரிகையின் ஆசிரியர். கதிரை வீட்டில் படிக்கத் தயங்குவார்கள் என்கிறார் சோமலே!
 17. மணிக்கொடி பத்திரிகையை பல அன்பர்கள் கடன்பட்டும் பட்டினி கிடந்தும் நடத்தினார்கள் என்கிறார். தியாகம் நிறைந்த பரிசோதனை என்று சுருக்கமாகச் சொல்கிறார். பிற மொழி வார்த்தைகளை -“அபேஸ் பண்ணினான்”, “கப்சா விட்டான்” – என்றெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று குறைப்பட்டுக் கொள்கிறார்.
 18. கலைமகளில்தான் இலக்கியக் கதைகள் முதலில் வெளியாகின என்கிறார். நான் மணிக்கொடி என்றுதான் நினைத்திருந்தேன்.
 19. தீபம், குமரி மலர், தாமரை, கல்கண்டு, மஞ்சரி, கலைக்கதிர், துக்ளக் போன்ற பல இதழ்களை குறிப்பிடுகிறார்.
 20. 1974-இல் தமிழகத்தில் தினத்தந்தி, தினமணி உட்பட 22 நாளிதழ்கள் வெளிவந்திருக்கின்றன.
 21. 1974-இல் பள்ளி இறுதிதேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு தினத்தந்தி அளித்த பரிசு ஆயிரம் ரூபாய்!

இன்னும் நிறைய விவரங்கள் உள்ள புத்தகம். இணையத்தில் கிடைக்கிறது. புரட்டியாவது பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பத்திரிகைகள்