ராபர்ட் செவல் எழுதிய “Vijayanagar: A Forgotten Empire”

ராபர்ட் செவல் எழுதி 1900-இல் வெளிவந்த இந்தப் புத்தகம் ஒரு tour de force.

செவல் தனது ஆதாரங்களாகக் கொள்பவை கல்வெட்டுக்கள்; பாமனி சுல்தான்களில் அவையில் இருந்த ஃபெரிஷ்டா எழுதியவை. விஜயநகரத்துக்கு அன்று வந்த வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள். பயஸ், நூனஸ் இருவரின் குறிப்புகளும் புத்தகத்தின் ஒரு பகுதி. இவற்றை வைத்துக் கொண்டு விஜயநகர அரசர்களின் வரிசையை மிகத் தெளிவாக நிறுவுகிறார். எங்கெல்லாம் ஊகிக்கிறார், எப்படி முடிவுகளுக்கு வருகிறார் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். அவரது ஆதாரங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை விவரிக்கிறார்.

நான் மீண்டும் மீண்டும் வியந்தது இவரது அர்ப்பணிப்பைக் கண்டுதான். படித்த புத்தகங்கள் எத்தனை, பார்த்த கல்வெட்டுக்கள் எத்தனை? அபார உழைப்பு. இப்படி எங்கோ இந்தியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த அரசைப் பற்றி விவரமாக எழுத வேண்டும் என்று அவரைத் தூண்டிய சக்தி எது?

நமக்கெல்லாம் – சரி எனக்கெல்லாம் – விஜயநகரப் பேரரசு என்றால் கிருஷ்ணதேவராயர் என்ற மாமன்னர்; பாமனி அரசுகளோடு விடாது போர்; மதுரையில் சுல்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த குமார கம்பணர்; மதுரையில் நாயக்கர் அரசை நிறுவிய விஸ்வநாத நாயக்கர், அரியநாத முதலியார்; தலைக்கோட்டைப் போர். செவல் கம்பணர், மதுரை நாயக்கர் அரசு பற்றி பெரிதாக எழுதவில்லை. ஆனால் என் எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துகிறார்.

புத்தகத்தைப் படித்தபோது இரண்டு கேள்விகள் எழுந்தன.

விஜயநகர அரசு பெரும் செல்வம் படைத்தது. பாமனி அரசுகள் படையெடுப்பில் மீண்டும் மீண்டும் கொள்ளை அடிக்கப்பட்ட போதும், சில சமயம் பாமனி அரசுக்கு கப்பம் கட்டியபோதும் செல்வம் குறையவே இல்லை. அதுவும் விவசாயத்தை நம்பிய அரசாகத்தான் இருந்திருக்க வேண்டும். விவசாயத்தில் அன்று இத்தனை செல்வம் விளைந்ததா?

மீண்டும் மீண்டும் அப்பாவுக்கு அடுத்தபடி மகன் என்று இல்லாமல் தம்பிகள் ராஜா ஆகிறார்கள். சோழ பாண்டிய சாளுக்கிய அரசு வரலாற்றுகளில் இப்படி இல்லை. இங்கு மட்டும் எப்படி?

புத்தகம் கூடன்பர்க் தளத்தில் கிடைக்கிறது.

இந்தப் புத்தகம் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். ஆனால் புத்தகத்தை விட என்னை வியக்க வைத்தது செவலின் அர்ப்பணிப்புதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு