இந்த வருஷ சாஹித்ய அகடமி விருது – இமையம் எழுதிய “செல்லாத பணம்”

இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்காக 2020க்கான சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது . தேர்வுக்க்குழுவில் வண்ணதாசனும் இருந்திருக்கிறார்.

செல்லாத பணம் நாவலின் கரு பல முறை பார்த்ததுதான். குடும்பத்தின் ஆட்சேபணையை மீறி தன்னை விட குறைவான படிப்பு, பணம், “ஜாதி”த் தகுதி உள்ள “ரௌடி” ஆட்டோக்காரனை மணக்கும் ரேவதி. திருமணம் ஆன பிறகு பணப் பற்றாக்குறை, அவமானங்கள், மனைவியை அடித்து உதைக்கும் கணவன். அப்பாவும் அண்ணனும் ஒதுக்கிவிட, அம்மா மட்டும் பண உதவி செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நாள் ரேவதி தீக்குளித்துவிடுகிறாள்.

இந்தக் கருவை திறமையற்ற எழுத்தாளர் கையாண்டிருந்தால் வெறும் மிகை உணர்ச்சி எழுத்தாகப் போயிருக்கும். இமையம் சிறப்பாக எழுதி இருக்கிறார். ஓரளவு மரத்துப் போன உள்ளம் கொண்ட எனக்கே அய்யோ அய்யோ என்றுதான் இருந்தது. தீக்குளித்தபின் மருத்துவமனையில் இருக்கும் நாலைந்து நாட்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. அப்பாவும் அண்ணனும் அண்ணியும் புலம்புவதுதான் கதை. மருத்துவமனைதான் பின்புலம்.

என் அப்பா மருத்துவமனையில் ICU-இல் வாரக்கணக்கில் இருக்க, வெளியே காத்திருந்த அனுபவம் எனக்குண்டு. மருத்துவமனை சித்தரிப்பு மெய்நிகர் அனுபவம். வெளியில் காத்திருப்பவர்களின் தத்தளிப்பு, கொஞ்சம் அடுத்த நிலை உறவினர்/நண்பர்களின் நல்லெண்ணம் உள்ள நச்சரிப்பு உரையாடல்கள், புலம்பல்கள் எல்லாவற்றையும் உண்மையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அப்பா, அண்ணன், அண்ணி, அம்மா, சித்தி எல்லாருடைய பாத்திரங்களும் அருமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அப்பா, அண்ணனுக்கு ஏற்பட்ட தலைகுனிவு, ஒழுங்காக இல்லாத கணவனால் இன்னும் அதிகரிக்கும் அவமானம் எல்லாம் மருத்துவமனையில் அர்த்தம் இல்லாத உணர்வுகளாக மாறிவிடுவது உண்மையான சித்திரம்.

தங்கையை மனதார திட்ட வேண்டும் என்று நினைத்திருக்கும் அண்ணன் எரிந்து கிடக்கும் தங்கை மன்னிக்கும்படி கேட்டதும் எல்லாவற்றையும் மறந்து கதறுவதும், தங்கை என்னை ஒரு முறை ரேவதி என்று கூப்பிடு என்று சொல்வது மனதில் பதியாமல் வெளியே வந்த பிறகு நினைவு வந்து மீண்டும் உள்ளே சென்று அவளை பேர் சொல்லி கூப்பிடத் துடிப்பதும், அதற்கு அனுமதி கிடைக்காமல் தவிப்பதும் மிக நல்ல காட்சி. இதே போல போலீஸ்கார ஆனந்த்குமார் கண் கலங்கும் காட்சி, அப்பா நடேசன் காவல் நிலையத்தில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் திணறும் காட்சி, கணவன் ரவி தன் பக்கத்து நியாயங்களை எடுத்து வைக்கும் காட்சி ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

இமையம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். பாரதிதாசன் சாஹித்ய அகடமி விருது வென்ற முதல் திராவிட இயக்க எழுத்தாளர், தான் இரண்டாவது என்று சொன்னாராம். திராவிட இயக்கத்தில் யாரும் எழுத்தாளரில்லை. கொஞ்சம் தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையை அவரது நாடகங்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம். பாரதிதாசன் என் கண்ணில் நல்ல கவிஞர் அல்லர். இவர் சொல்வது சரியாக இருந்தால் திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்த இரண்டாவது எழுத்தாளரே இவர்தான். (அண்ணாவுக்குப் பிறகு)

இமையத்துக்கு ஒரு தளம் இருக்கிறது. அங்கே அவரது சில சிறுகதைகளும் கிடைக்கின்றன.

ஆனால் என் கண்ணில் இந்த நாவல் இரண்டாம் மூன்றாம் வரிசை நாவலே. வெறும் அனுபவச் சித்தரிப்பு மட்டுமே நல்ல நாவல் ஆகிவிடாது என்றெல்லாம் இப்போது தோன்றுகிறது. (நாளை என் மனம் மாறினாலும் மாறலாம்.)

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இமையம் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இமையம் பற்றிய விக்கி குறிப்பு