நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து – ஜலகண்டபுரம் கண்ணன்

கண்ணனின் எழுத்து நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த கௌரவத்துக்கு அவர் தகுதியானவர் அல்லர். திராவிட இயக்கச் சார்புடையவர், அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்தவராக இருந்திருப்பார் என்பதுதான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

கண்ணன் அந்தக் கால திராவிட இயக்கத்தவர். முற்போக்கு எழுத்து என்று நினைத்துக் கொண்டு என்னத்தையோ எழுதி இருக்கிறார். பிராமண வெறுப்பு, பண்டைய தமிழ் நாகரீகம் மீது பெருமிதம் எல்லாம் அவரது படைப்புகளில் ஊடோடி இருக்கிறது. அண்ணன்மார்சாமி நாட்டார் தொன்மத்தை வைத்து அவர் எழுதிய குன்றுடையான் நாடகம் ஒன்றே கொஞ்சமாவது பொருட்படுத்தக் கூடிய படைப்பு.

அவரது சில நூல்கள் இங்கே கிடைக்கின்றன. எதுவும் படிக்க வேண்டியதல்ல. எனக்கு பழைய கால நாடகம் என்றால் இப்போதெல்லாம் படிக்கத் தோன்றுகிறது. மேலும் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகளை முடிந்த வரை படிக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் நான் படித்தேன், ஆனால் பரிந்துரைக்கமாட்டேன்.

நந்திவர்மன் நாடகம் அவரது எழுத்து முறையை பிரதிபலிக்கிறது. பல்லவ அரசன் நந்திவர்மனைக் கொல்ல அவனது தம்பி நந்திக் கலம்பகத்தை இயற்றினான் என்றும் அதில் அறம் பாடப்பட்டதால் – அதாவது நந்திவர்மன் உயிரோடு இருக்கும்போதே அய்யோ இறந்துவிட்டாயே என்று எழுதுவது – நந்திவர்மன் இறந்து போனான் என்று ஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு. அதை அப்படியே ஆரிய பிராமண சதி என்று மாற்றிவிட்டார். நாடகத்தில் நயமாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திராவிட இயக்க எழுத்தாளர்களில் அண்ணாதுரை ஒருவரே கொஞ்சமாவது பொருட்படுத்தக் கூடியவர் என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறார்.

அந்தப் பாடல் நயம் உள்ளது. (என் அகராதிப்படி கவிதை இல்லைதான், ஏனென்றால் மொழிபெயர்த்தால் சுவை போய்விடும்.)

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயாபரனே!

அவருடைய நாடகங்களில் சிறந்தது குன்றுடையான். அண்ணன்மார்சாமி கதையின் நாடக வடிவம். அதை சிதைக்காமல் கொடுத்ததே பெரிய விஷயம். கலைஞர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் நாவலுக்கு எவ்வளவோ பரவாயில்லை.

பதினாறும் பெறுக நாடகத்தில் சிறு குடும்பத்தின் தேவையை – இரண்டு மூன்று குழந்தைகள், பதினாறு அல்ல – வற்புறுத்துகிறார். மின்னொளி என்று இன்னொரு “முற்போக்கு” நாடகம்.

இங்கே அவரது சிறுகதை ஒன்றைப் படிக்கலாம். படித்தால் அவரது தரம் என்ன என்று புரிந்துவிடும். சிந்தனைச் சித்திரம், காதல் மனம் என்ற பேரில் சில சிறுகதைகளை எழுதி இருக்கிறார்.

திரைப்படங்களில் பணி புரிந்திருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் கண்ணதாசனுக்கு ஆரம்ப காலத்தில் கண்ணன் பரிந்துரையில்தான் வேலை கொடுத்தாராம். அவர் எழுத்தைப் பார்த்துத்தான் திரைக்கதை எழுதக் கற்றுக் கொண்டேன் என்று கண்ணதாசன் எங்கோ சொல்லி இருக்கிறார்.

கண்ணனின் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து