ம.பொ.சி.: விடுதலைப் போரில் தமிழகம்

ம.பொ.சி. விடுதலைப் போரில் நேரடியாகப் பங்கேற்றவர். வ.உ.சி., கட்டபொம்மன் இருவரையும் icon-களாக மாற்றியதில் அவருக்கும் முக்கியப் பங்குண்டு. தமிழகத்தின் பங்களிப்பு காங்கிரசின் அதிகாரபூர்வமான வரலாறுகளில் இருட்டடிக்கப்படுவதாகக் கருதி இருக்கிறார். (அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. விஷ்ணு பிரபாகர் எழுதி நேஷனல் புக் ட்ரஸ்ட் பதித்த ஸ்வராஜ்யா புத்தகம் ஒரு உதாரணம். அதைப் படித்தால் தென்னிந்தியா இந்தியாவில்தான் இருக்கிறதா இல்லை அண்டார்டிகாவில் இருக்கிறதா என்று சந்தேகம் எழலாம்.) அந்த ஆங்காரத்தில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 1929 லாகூர் காங்கிரஸ் வரை எழுதி இருக்கிறார்.

என் கண்ணில் பட்ட வரை முக்கியத் தகவல்கள்/வாதங்கள்.

 • இந்திய விடுதலைப் போராட்டம் 1857 கிளர்ச்சியோடு தொடங்குகிறது என்றுதான் பொதுவாக வடநாட்டில் சொல்லப்படுகிறது. தவறு, அது கட்டபொம்மனோடு தொடங்குகிறது.
 • கட்டபொம்மனுக்கு முன் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள் ஆங்கிலேயரோடு போரிட்டாலும் வரி கொடுக்க மாட்டேன், என் நிலத்தின் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நான் சுதந்திரமானவன் என்று போரிட்டது கட்டபொம்மனே. அதாவது ஹைதரும் திப்புவும் போரிட்டது அரசுகளுக்கு இடையேயான போர், ஒருவர் அதிகாரத்துக்கு கீழ் அடுத்தவரை கொண்டு வர நடந்த போர். கட்டபொம்மன் நான் உனக்கு அடங்கினவன் அல்லன் என்று போரிட்டார்.
 • கட்டபொம்மன், பிறகு ஊமைத்துரை, பிறகு மருது சகோதரர்கள், வேலூர்க் கலகம், பிறகு தளவாய் வேலுத்தம்பி, பிறகு கர்நாடகத்தின் கிட்டூர் ராணி சென்னம்மா என்று வரிசைப்படுத்துகிறார்.
 • தீரன் சின்னமலை என்று அவர் யாரையும் குறிப்பிடவில்லை. இப்படி ஒருவர் இருந்தாரா, என்ன ஆதாரம் என்று எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அடிக்கடி கேட்பார்.
 • முதல் காங்கிரஸில் – 1885-இல் – 21 பேர் சென்னை மாகாணத்திலிருந்து சென்றார்களாம். ஹிந்து பத்திரிகையை நிறுவிய ஜி. சுப்ரமணிய ஐயர் போயிருக்கிறார்.
 • மூன்றாவது காங்கிரஸ் – 1887 – சென்னையில் நடந்தது. அன்று அதற்கான செலவு 30000 ரூபாயாம். முதல் காங்கிரஸுக்கு 3000 ரூபாய்தான் ஆகி இருக்கிறது. விஜயராகவாச்சாரியார் (சேலம் விஜயராகவாச்சாரியர் அல்லர், இவர் வேறொருவர்)  எழுதிய ஒரு சிறு புத்தகத்தை – காங்கிரஸ்: கேள்வி பதில் –  அன்றைய வைஸ்ராய் டஃபரின் பிரபுவே விமர்சித்திருக்கிறார்.
 • கும்பகோணம் சங்கர மடம் – கவனிக்கவும் காஞ்சி மடம் அல்ல – இந்த மாநாட்டுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி இருக்கிறது. பின்னாளில் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடங்கிய பிட்டி தியாகராய செட்டியாரும் ஒரு பிரதிநிதி.
 • முதல் முறையாக ஆங்கிலத்தை தவிர்த்து இந்திய மொழிகளிலும் உரைகள் நடந்திருக்கின்றன.
 • வ.உ.சி. சகாப்தம். அவரது செல்வாக்கு சில வருஷங்களுக்காவது அரசு எந்திரத்தை அஞ்ச வைத்திருக்கிறது. பாரதி, சிவா அவரது ஆப்தர்கள். அவருக்கு கிடைத்த தண்டனை சுதேசி இயக்கத்தை மொத்தமாக அமுக்கிவிட்டது. அவருக்கு எதிராக சென்னை மிதவாதிகளுக்கு தலைவராக இருந்தவர் வி. கிருஷ்ணசாமி ஐயர். 1908-இல் சென்னையில் இவர் முன்னின்று காங்கிரஸ் மாநாட்டை நடத்தி இருக்கிறார்.
 • ஐரோப்பாவில் வ.வே.சு. ஐயர், டி.எஸ்.எஸ். ராஜன், செண்பகராமன் பிள்ளை ஆகியோர் செயல்பட்டிருக்கிறார்கள். செண்பகராமன் சிறைப்பட்ட இந்திய சிப்பாய்களை வைத்து ஒரு சிறு சைனியத்தை – அதன் பெயரும் Indian National Army-தான் – உருவாக்க முயற்சித்திருக்கிறார். ஆஃப்கானிஸ்தான் goverment-in-exile உருவானபோது அவர்தான் வெளிநாட்டுத் துறை அமைச்சர். ம.பொ.சி. அவர் எம்டன் கப்பலில் இருந்தாரா என்பதைத் தெளிவாக எழுதவில்லை, ஆனால் எம்டன் சென்னையைத் தாக்க வேண்டும் என்பது அவர் ஆலோசனைதான் என்கிறார்.
 • தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு பல தமிழர்கள் – நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை – துணை நின்றிருக்கிறார்கள். நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை மூவரும் 17-18 வயதில் இறந்து போனார்களாம். பின்னாளில் வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியை தென்னாப்பிரிக்க தமிழர் பிரச்சினைகளை தீர்க்க பிரிட்டிஷ் அரசே அனுப்பியது.
 • 1914-18 காலத்தில் அன்னி பெசண்ட் காங்கிரஸின் முடிசூடா தலைவியாக இருந்தாராம்.
 • ரௌலட் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த குழுவில் குப்புசாமி சாஸ்திரி என்று ஒரு தமிழர் இருந்திருக்கிறார். இவரை ரௌலட சாஸ்திரி என்றே ஹிந்து பத்திரிகை விமர்சித்திருக்கிறது.
 • காந்தி சகாப்தத்தின் ஆரம்பத்தில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, ஈ.வெ.ரா., வரதராஜுலு நாயுடு, திரு.வி.க., எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார், ஜார்ஜ் ஜோசஃப் என்று ஒரு புதிய தலைமுறையின் தலைவர்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள்.
 • சட்டமறுப்பு இயக்கம் என்ற எண்ணம் காந்திக்கு சென்னையில்தான் உதித்ததாம். வ.உ.சி.யும் அதை ஆதரித்தாராம்.
 • ஆரம்ப கால காங்கிரஸில் இருந்த சங்கரன் நாயர் பின்னாளில் அரசு ஆதரவாளராக மாறினார். வைஸ்ராயின் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார். Gandhiji and Anarchy என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். ஜாலியன்வாலாபாக் படுகொலையின் காலத்தில் பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ’ட்வயர் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்து நாயர் மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கும்படி தீர்ப்பாயிற்றாம்!
 • ராஜாஜி தமிழக காங்கிரஸின் “தலையாக” பரிணமித்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு