மாறுதலுக்காக இன்று ஒரு திரைப்படத்தைப் பற்றி.
சார்பட்டா பரம்பரை சமீப காலத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் ஒன்று. விளையாட்டை பின்புலமாகக் கொண்ட நல்ல திரைப்படங்களில் ஒன்று.
படத்தின் பலம் திரைக்கதை; பின்புலம்; நடிப்பு; புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகள்; ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள்.
குத்துமதிப்பாக 1975-1977 காலத்தை பெரிய செட் எல்லாம் போடாமல் (ஒரே ஒரு மணிக்கூண்டு செட்), சிகை அமைப்பு, மீசை, ஆடைகள், சிறு திண்ணைகள் உள்ள கூரை வீடுகள் என்று திறமையாகக் கொண்டு வந்துவிட்டார்கள். குத்துச்சண்டை அரங்க செட்டும் நன்றாக இருக்கிறது.
விளையாட்டு திரைப்படங்களுக்கு அடிப்படைக் கதை ஒன்றேதான். நாயகன்/நாயகி பலவீனங்கள் உள்ள, அனேகமாக அனுபவம் இல்லாத ஒரு போட்டியாளன் – underdog. அவனு(ளு)க்கு எதிராக மிக வலுவான, உச்சியில் இருக்கும் போட்டியாளன். ஜெயிக்க வாய்ப்பே இல்லை. இதில் நாயகன்/நாயகிக்கு போட்டியிடுவதில் பல இன்னல்கள் வரும். எப்படியோ கடைசியில் நாயகன்/நாயகிக்கு வெற்றி. இதே கதையைத்தான் Rocky, Bend It Like Beckham, Tin Cup, ஜோ ஜீத்தா வொஹி சிக்கந்தர், லகான் மாதிரி எல்லா படங்களிலும் வேறு வேறு திரைக்கதைகளாகக் காட்டுகிறார்கள். பலமுள்ள கரு. தன்மீட்பு (redemption), போராட்டம் எல்லாவற்றையும் சுலபமாகக் கொண்டு வந்துவிடலாம்.
சார்பட்டா பரம்பரைக்கும் அதே மூலக்கதைதான். வடசென்னை பின்புலம். குத்துமதிப்பாக 1975-1977 காலம். நெருக்கடி நிலை இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் தி.மு.க. ஆட்சி. குத்துச்சண்டை வீரர்கள் பல குழுக்களாக – சார்பட்டா, இடியாப்பம் என்று பல பரம்பரைகள் – தீவிர போட்டியில் இருக்கிறார்கள். குத்துச்சண்டை தெரிந்தவர்கள் சுலப்மாக ரௌடிகளாக மாறமுடிகிறது. குத்துச்சண்டையில் ஆர்வம் உள்ள, ஆனால் குத்துச்சண்டையில் ஈடுபடக் கூடாது என்று அம்மாவால் தடுக்கப்பட்டிருக்கும் நாயகன் கபிலன். சார்பட்டா பரம்பரையோது தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்பவன். தி.மு.க. சார்புடைய ரங்கன் வாத்தியாருக்கு ஏகலைவன். இடியாப்ப பரம்பரையின் வேம்புலியை யாராலும் வெல்ல முடியவில்லை. வாத்தியார் கேவலப்படக் கூடாது என்று கபிலன் குத்துச்சண்டையில் இறங்குகிறான். இயற்கையாகவே நன்றாக ஆடமுடிகிறது. யாரும் எதிர்பார்க்காத முறையில் சார்பட்டா பரம்பரையின் அன்றைய முதல் வீரனான ராமனை அடித்து நொறுக்குகிறான். ரங்கன் வாத்தியார் அவனை போட்டியில் இறக்குகிறார். இடியாப்ப பரம்பரையின் முக்கிய வீரனான ரோஸை வென்றுவிடுகிறான். வேம்புலியோடு போட்டியில் வேம்புலியின் தோல்வி உறுதி என்ற நிலையில் ராமனின் சித்தப்பா ஒருவனே கலவரத்தை உண்டாக்கி போட்டியை நிறுத்துகிறான். ரங்கன் வாத்தியார் மிசாவில் சிறை செல்கிறார். ஒரு கைகலப்பில் கபிலன், ரங்கன் வாத்தியாரின் மகன் வெற்றி சிறையில். வெளியே வந்ததும் கள்ளச் சாராயம், ரௌடித்தனம், குடி என்று கபிலன் வாழ்க்கை மாறுகிறது. வேம்புலி மீண்டும் வெற்றிகளை அடைந்தாலும் கபிலனிடம் தோற்கும் நிலையில் இருந்த அவமானம் நீங்கவில்லை. மீண்டும் சவால் விடுகிறான். ஆனால் கபிலன் இன்று தொப்பையோடு குத்துச்சண்டை போடும் நிலையில் இல்லை. பழைய போட்டியாளன் ராமனே அவனை அடித்து நொறுக்குகிறான். ரங்கன் வாத்தியார் அவனுக்கு பயிற்சி தர மறுக்கிறார். எப்படியோ மீண்டும் உடல்நிலை தேறி, கடும் சண்டையில் வென்று, தன்மீட்பு (redemption)!
மூலக்கருவை கெடுப்பது சுலபம். அதுவும் இடைவேளை சமயத்திலேயே நாயகன் வெல்லும் காட்சி. அப்புறம் படத்தை எப்படித் தொடர்வது? தன்மீட்பு என்ற கருவை எப்படிக் கொண்டு வருவது? திறமையாக நெருக்கடி நிலை, கபிலனைக் கட்டுப்படுத்தக் கூடிய வாத்தியார் மிசாவில் சிறை செல்வது, கபிலன் திசை மாறுவது, நாயகனுக்கு தொப்பை விழுவது, அப்பாவின் பழைய நண்பர் பயிற்சி அளிப்பது, ஆக்ரோஷமான இறுதி சண்டை காட்சி என்று கதையை கொண்டு போயிருக்கிறார்கள். முதல் பாதியோ இரண்டாம் பாதியை விட விறுவிறுப்பானது. பாக்சிங் பக்கம் போகக் கூடாது என்று தடுக்கும் அம்மா, தற்செயலாக நடக்கும் சண்டை, மாமா மகளோடு திருமணம், டான்சிங் ரோஸ் பாத்திரம், ரோசின் உடல்மொழி, குத்துச்சண்டை பாணி, ரோசுடன் நடக்கும் சண்டை, வேம்புலியுடன் முதல் சண்டை,சார்பட்டா உள்ளிட்ட பரம்பரைகளில் வரலாறு எல்லாவற்றையும் பின்னி இருக்கிறார்கள்.
ஆர்யா தான் இனி எதற்கும் லாயக்கில்லையா என்று உடைந்து அழும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் சஞ்சனா கல்க்கிவிட்டார். அம்மாவாக வருபவரும். பசுபதி விறைப்பான உடல்மொழி, இஸ்திரி கலையாத ஜிப்பா, கரைவேட்டி, துண்டு வைத்தே சிறப்பாக நடிக்கிறார். டான்சிங் ரோசின் உடல்மொழி அபாரம். கலையரசனின் பாத்திரப் படைப்பு அருமை. அப்பாவே தனக்கு வாய்ப்பை மீண்டும் மீண்டும் மறுப்பதில் ஏற்படும் ஆங்காரம்; கள்ளச் சாராயம் என்று வாழ்க்கை திரும்பும்போது ஆர்யா தனக்கு கட்டுப்படுவதில் ஏற்படும் சிறு மகிழ்ச்சி; ஆனால் அப்பாவே மறுத்தாலும் ஆர்யாவுக்கு துணை நிற்பது என்று பல வித shades of grey உள்ள பாத்திரம். வேம்புலியின் குரு துரைக்கண்ணு வாத்தியார், போட்டிகளை நடத்தும் காளி வெங்கட், நேர்முக வர்ணனை தரும் தங்கதுரை என்று பலரும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக துரைக்கண்ணு வாத்தியாராக வருபவர்.
ஆனால் எல்லாரையும் தூக்கி சாப்பிடுபவர் ஜான் விஜய். அவரது ஆங்கிலமும் உச்சரிக்கும் விதமும் அபாரம். அடுத்தபடியாக சொல்ல வேண்டியவர் ஆர்யாவின் மனைவி சஞ்சனா; ஆர்யாவின் அம்மா; டான்சிங் ரோஸ்; பசுபதி.
பசுபதி இரண்டாம் பகுதியில் குறைந்த நேரமே வருகிறார். அதை அதிகபப்டுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்கள் என்னை பெரிதாகக் கவரவில்லை. சில சமயம் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். அந்த ரகமோ என்னவோ.
பா. ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களில் அட்டக்கத்தி திரைப்படம் அளவுக்கு வேறு எந்தப் படமும் வரவில்லை என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இதில் அதை மிஞ்சிவிட்டார்.
ரஞ்சித் தனது படங்களில் அம்பேத்கார் படம், மாட்டுக்கறி பற்றி ஒரு வரி ஆகியவற்றை குறியீடுகளாக அடிக்கடி பயன்படுத்துவார். அதை ஏன் இப்படி சின்ன குறியீட்டுக் காட்சியாக பயன்படுத்த வேண்டும், பெரிதுபடுத்தினால் படம் போரடிக்கும் என்று நினைக்கிறாரா என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. இதிலும் ஓரிரு நொடிகளே வரும் குறியீட்டுக் காட்சிகள்தான்.
ஹாலிவுட்டில் சில சமயம் திரைப்படம் வந்த பிறகு அதை நாவலாக வெளியிடுவார்கள். ரஞ்சித் இந்தத் திரைப்படத்துக்கும் அப்படி செய்யலாம். (ஆனால் ஒரிஜினல் புத்தகங்களே தமிழ் நாட்டில் விற்பது கஷ்டம்தான்…)
நல்ல திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
வலுவில் புகட்டப்பட்ட சாதி வசனங்கள் தவிர ஒரு நல்ல பொழுது போக்கு படம். எம்.ஜி.ஆர் ரசிகர்களை கொஞ்சம் தட்டுவது போலவும், தி.மு.க சார்பு படம் போலவும் ஆகி விட்டடது. பாடல் எல்லாம் நினைவில் நிற்க வில்லை. பல இடங்களில் வசனம் காதில் கேட்கா அளவில் பின்னணி இசை உள்ளது.
ரோஸ் பகுதிகளை மட்டும் மூன்று முறை பார்த்தேன். ரோசின் பாக்ஸிங் காட்சிக்கு இசை சரியாக பொருந்தி உள்ளது.
பிரச்சாரத்தை தனியாக தெரியும்படி செய்வதுதான் பலவீனம். ஒரு பொழுது போக்கு படம் என்ற வகையில் ஓகே. மிசா ஆதாரமாக காட்டலாம் என்பதால் இன்னும் பலருக்கு பிடிக்கும்.
LikeLike
சாதி வசனங்கள்? எனக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களை என்ன மட்டம் தட்டுகிறார்கள்? அதுவும் தெரியவில்லையே?
LikeLike
பீடி ராயப்பன் பிண்ணனியில் பேசுவது, ஆர்யா நண்பர்கள் பேசுவது எல்லாம் இயல்பாக இல்லை. துருத்திக் கொண்டு உள்ளன.
எம்.ஜி.ஆர் ரசிகர் தான் சாராயம் காய்ச்சும் ரவுடி. அப்பா திமுக நல்லவர். மகன் அதிமுக என்பது போல ஒரு இமேஜ் வருகின்றது. இரண்டும் ஒன்றுதான் என்றாலும்….
LikeLike
என்ன ரெங்கா, பசுபதி முக்கியப் பாத்திரம், நல்லவராக வருகிறார், தி.மு.க. தொண்டனாகவும் வருகிறார். அதனால் தி.மு.க.வினர் நல்லவர்கள் என்று ரஞ்சித் சொல்கிறார் என்றா முடிவுக்கு வருவீர்கள்? சாராயம் காய்ச்சுபவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது அவர் வேட்டி கட்டாமல் பாண்ட் போட்டிருக்கிறார் என்பது மாதிரி ஒரு தகவல், ர்ங்கன் வாத்தியாரின் மகனே “எதிரி” கட்சியில் சேர்கிறான் என்ற முரணை முன் வைக்கிறது, திமுககாரர்கள் நெருக்கடி நிலை காலத்தில் நிம்மதியாக சாராயம் காய்ச்சி இருக்க முடியாது என்ற உண்மை நிலையைக் காட்டுகிறது, அவ்வளவுதான். அதில் நீங்கள் நிறையவே பார்க்கிறீர்கள்!
LikeLike