தகழி: செம்மீன்

செம்மீன் என் மனம் கவர்ந்த படைப்புகளில் ஒன்று.

ஏன்? அது காட்டும் விழுமியம் எனக்கு இசைவானதல்ல. கற்பு புடலங்காயில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. நேரடியான கதை, உண்மையைச் சொல்லப் போனால் யூகிக்கக் கூடிய கதை, தகழி திடீரென்று திரையை விலக்கி நமக்கு வேறு கண்ணோட்டத்தை காண்பித்துவிடவில்லை. Star crossed lovers அரதப்பழசு கரு. பின் ஏன் மனதைக் கவர்கிறது?

ஒன்று அதில் காணப்படும் தொன்மத்தனம். தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்திடும் என்பது வயதான காலத்தில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம், ஆனால் காலம் காலமாக, எல்லா ஊரிலும் சொல்லப்படுவது. காதலனை மறக்க முடியாதது இன்று தப்பாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அது தப்பாய் இருந்தால், தப்பு செஞ்சால் சாமி கண்ணைக் குத்திடும் என்பது அனேகமாக எல்லாராலும் அடையாளம் காணக் கூடிய கருத்து. அதிலும் இந்தியப் பாரம்பரியத்தில் வெகு சுலபமாக. கடலம்மாவுக்கு தீட்டு என்று வருவது அருமையான கற்பனை. கதைக்கு அப்படி ஒரு தொன்மத்தனம் இருப்பது கதையை வேறு தளத்திற்கு கொண்டு போய்விடுகிறது.

இரண்டு கதையில் தெரியும் தவிர்க்க முடியாத தனம் (inevitability) – மகாபாரதத்தைப் போல, ராமாயணத்தைப் போல, கிரேக்க துன்பியல் நாடகங்களைப் போல. பரீக்குட்டியும் கருத்தம்மாவும் என்றும் சேரமுடியாது என்பது முதல் பக்கத்திலேயே தெரிகிறது. சாதாரணமாக போகிற போக்கில் கருத்தம்மா பணம் தா என்று கேட்டால் பரீக்குட்டி தானே மொத்தமாக அழிந்தாலும் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும். செம்பன்குஞ்சு அதை திருப்பிக் கொடுக்கப் போவதே இல்லை. பழனி வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க ஒரு நாளும் சம்மதிக்கமாட்டான். சக்கி இறந்த சேதி சொல்ல பரீக்குட்டிதான் போயாக வேண்டும். அது கதையை எங்கோ கொண்டு போய்விடுகிறது.

மூன்றாவதாக பாத்திரப் படைப்பு. கருத்தம்மா, பரீக்குட்டி, பழனி, செம்பன்குஞ்சு, சக்கி போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். அச்சாகுஞ்சு, நல்லபெண்ணு, பஞ்சமி போன்ற சிறு பாத்திரங்கள் கூட செதுக்கப்பட்டிருக்கின்றன. கடலம்மாவும் ஒரு பாத்திரம்தான்.

நான்காவதாக மெய்நிகர் அனுபவம். செம்பன்குஞ்சு மீது ஊராருக்கு ஏற்படும் அசூயை, நாட்டாமையின் அலப்பறைகள், ஆப்த நண்பன் அச்சாகுஞ்சுவை செம்பன்குஞ்சு வேலைக்கு அமர்த்தாதது, ஊர் வம்புகள், பழனி-கருத்தம்மாவின் ஆரம்ப கால உறவு, சட்டி பானை வாங்குவது, அத்தனையும் தத்ரூபமாக வந்திருக்கின்றன. ஒரு மாஸ்டரால்தான் இப்படி எழுத முடியும்.

சுருக்கமாக கதை: ஆலப்புழா அருகே மீனவ கிராமம். மனைவி கற்பு தவறினால் கடலுக்கு செல்லும் மீனவனை கடலம்மா காவு கொண்டுவிடுவாள் என்று நம்பிக்கை. மீனவப் பெண் கருத்தம்மா-மீன் வியாபாரி பரீக்குட்டிக்கு இடையில் காதல். கருத்தம்மாவின் அப்பா செம்பன்குஞ்சுவுக்கு சொந்தமாக படகு வேண்டும் என்று கனவு. பரிக்குட்டி உதவியால் நடக்கிறது. ஆனால் பணம் வந்ததும் செம்பன்குஞ்சு பரீக்குட்டியிடம் வியாபாரமும் செய்வதில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. பரீக்குட்டி நொடித்துப் போகிறான். பரீக்குட்டி முஸ்லிம், அதனால் கல்யாணத்திற்கு வாய்ப்பே இல்லை. பழனி என்ற அனாதை மீனவனுக்கு கருத்தம்மா திருமணம் செய்து கொடுக்கப்படுகிறாள். பரீக்குட்டி பற்றி பழனிக்கு தெரிகிறது. அவனுக்கு மனைவி பேரில் நம்பிக்கை இருந்தாலும் பிற மீனவர்கள் அவனோடு படகில் செல்ல பயப்படுகிறார்கள், கடலம்மா பழனியின் மனைவி கற்பு தவறி நடந்து தங்களை காவு கொண்டுவிடுவாளோ என்ற அச்சம். ஒரு நாள் பழனி தனியாகப் படகில் போகிறான். அன்று இரவு பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சந்திக்கிறார்கள். பழனி கடல் சுழலில் இறக்கிறான். இவர்கள் இருவரும் கைகோர்த்த நிலையில் பிணமாகிறார்கள்.

1957-இல் சாஹித்ய அகடமி விருதை வென்ற படைப்பு. தமிழில் சுந்தர ராமசாமி மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அப்போதும் இப்போதும் படித்தது ஆங்கில மொழிபெயர்ப்புதான். நாராயண மேனன் மொழிபெயர்த்திருக்கிறார்.

1965-இல் ராமு கரியத் இயக்கத்தில் ஷீலா, மது, சத்யன் நடித்து திரைப்படமாகவும் வந்தது. சலீல் சௌத்ரி இசையில் வயலார் ரவிவர்மா எழுதிய மன்னா டே பாடிய மானச மைன வரூ புகழ் பெற்றது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மலையாள இலக்கியம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.