வ.ரா.: தமிழ் பெரியார்கள்

வ.ரா. என்று பொதுவாக அறியப்படும் வ. ராமஸ்வாமி ஐயங்கார் 1943-இல் எழுதிய புத்தகம். அன்றைய பிரமுகர்களைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது.

வ.ரா. தமிழ் பெரியார்கள் என்று போட்டிருக்கும் பட்டியலே மிக சுவாரசியமானது. ராஜாஜி, ஈ.வெ.ரா., திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், ஜார்ஜ் ஜோசஃப், சத்யமூர்த்தி, வ.உ.சி. எஸ்.எஸ். வாசன், கே.பி. சுந்தராம்பாள், என்எஸ்கே, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை.

யார் யார் இல்லை என்பது அதை விட சுவாரசியமானது. பாரதியோடு நெருக்கமாகப் பழகியவர், ஆனால் பாரதியைக் காணோம். உ.வே.சா. இல்லை. வ.ரா. மணிக்கொடிக்கு ஆசிரியராக இருந்தவர், ஆனால் புதுமைப்பித்தனைக் காணோம். வ.வே.சு. ஐயர் இல்லை. தியாகராஜ பாகவதர் இல்லை. கல்கி இல்லை. அரியக்குடி, எம்.எஸ்., ஜி.என்.பி., ராஜரத்தினம் பிள்ளை மாதிரி பெரிய பாடகர், இசை வல்லுனர் யாருமில்லை. பாலசரஸ்வதி மாதிரி நடனக் கலைஞர் இல்லை. ஒரு வேளை கலைக்கு கே.பி.எஸ்., என்எஸ்கே இரண்டு பேர் போதும் என்றூ நினைத்தாரோ? முத்துலக்ஷ்மி ரெட்டி மாதிரி சமூக சீர்திருத்தவாதி இல்லை. ராமானுஜன், சர் சி.வி. ராமன், ஜி.டி. நாயுடு, அண்ணாமலை செட்டியார், டி.வி. சுந்தரம் ஐயங்கார் இல்லை.

ஒரு வேளை அன்று உயிரோடு இருந்தவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொண்டாரோ? ஆனால் பட்டியலில் இருக்கும் வ.உ.சி. 36-இலேயே போய்விட்டார். (மிச்ச அனைவரும் 43-இல் இருந்தார்கள்.) புதுமைப்பித்தன், பாகவதர், கல்கி, எம்.எஸ்., அரியக்குடி, ஜி.என்.பி., ராஜரத்தினம் பிள்ளை, சி.வி. ராமன், ஜி.டி. நாயுடு எல்லாரும் இருந்தார்களே?

அவருடைய வார்த்தைகளிலேயே: ஜன சமூகத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள் தாங்கள் அறிந்தும் செய்யலாம்; அறியாமலும் செய்யலாம். அவர் கண்ணில் என்எஸ்கேயும் கேபிஎஸ்ஸும் ஜன சமூகத்தின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்கள், ஆனால் கல்கியும் ஜி.டி. நாயுடுவும் புதுமைப்பித்தனும் பாரதியும் உ.வே.சா.வும் மாற்றவில்லை. அது சரி, அவர் பட்டியல், அவர் கணிப்பு, அவர் இஷ்டம்.

வ.ரா.வின் பலம் கோட்டோவியம் போல சுருக்கமாக எழுதி குணாதிசயத்தை புரிய வைத்துவிடுவது. நடைச்சித்திரம் என்ற புனைவில் நான் முதன்முதலாக இதைப் பார்த்தேன். நம் கண்ணில் தினமும் படும் வேலைக்காரி, சித்த மருத்துவர், பியூன், வண்ணார வீரம்மாள் ஆகியோரை கண் முன்னால் கொண்டு வந்தார். இத்தனைக்கும் நான் படித்தபோதே அவர் காட்டியவர்கள் மறைந்து கொண்டிருந்தனர், ஆனால் எனக்கும் அவர் காட்டும் சித்திரம் புரிந்தது. அதே திறமையை வைத்து இந்தப் பிரமுகர்களையும் கோட்டோவியமாக வரைந்திருக்கிறார்.

அவரது கட்டுரைகள் புகழ்மாலைகள் அல்ல. தனக்குத் தோன்றியதை உண்மையாக எழுதி இருக்கிறார். ராஜாஜியிடம் தன்னம்பிக்கை குறைவு, எல்லாரையும் சந்தேகப்படுவார் என்கிறார். ஈ.வெ.ரா. வைதீகத்தை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு சலாம் போடுகிறாரே என்று வருந்துகிறார்.

புத்தகத்தின் மின்பிரதி இணையத்தில் கிடைக்கிறது..


ராஜாஜியைப் பற்றி அவரது கணிப்பு:

காலத்தை காந்தி எதிர்த்துப் போராடி முறியடித்ததைப் போல ஆச்சாரியாரால் அவ்வளவாக முடியாது. அவ்வளவு தன்னம்பிக்கை ஆச்சாரியாருக்கு இயற்கையாகக் கிடையாது. அதற்கு ஒரு தூண்டுகோல் வேண்டும்…

காந்தி மகா மேதாவி; ஆச்சாரியார் மகா புத்திசாலி. காந்தியின் மூளை வேறு ரகம்; ஆச்சாரியாரின் மூளை வேறு வகை. மேதை வேறு; புத்தி வேறு. காந்திக்கு தனது சொந்த சக்தியில் மலையை நகரச் செய்யும் நம்பிக்கை உண்டு; பிறர் சக்தியிலும் காந்திக்கு அளவற்ற நம்பிக்கை. ஆச்சாரியருக்கு தம்மிடத்தில் சிறிது சந்தேகம்; பிறரிடத்தில் எல்லையற்ற சந்தேகம்… காந்தி சாஸ்திரம்; ஆச்சாரியர் சாஸ்திரி. சாஸ்திரம் காலத்துக்கு கட்டுப்பட்டதல்ல, சாஸ்திரம் வளரும். சாஸ்திரியோ சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். சாஸ்திரிக்கு சாஸ்திரம்தான் பிரதானம்.

ராஜாஜி தொட்டாற்சுருங்கி, உணர்ச்சிகள் இல்லாதவர் என்று பேர் வாங்கியவராம். ஆனால் கனிந்த உள்ளமாம், அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாராம். வரதராஜுலு நாயுடுவுக்காக ஒரு முறை இவரும் ஜார்ஜ் ஜோசஃபும் வாதாடியபோது கேஸ் தோற்றுவிட்டது. ராஜாஜி நாயுடுவுக்கு சிறையா என்று அழுதிருக்கிறார். ஆனால் ஒரு நிமிஷம்தான். ஜார்ஜ் ஜோசஃப் இதை நினைவு கூர்ந்திருக்கிறாராம். திடசித்தர். சத்யாகிரகத்தில் ஈடுபட்டு வக்கீல் தொழிலை கைவிட்ட முதல் சில நாட்களில் ஒரு கட்சிக்காரர் மூன்று நாள் வாதாடுங்கள் 3000 ரூபாய் தருகிறேன் என்று கெஞ்சி இருக்கிறாராம். மறுத்துவிட்டார். இதை வ.ரா.வே நேரில் பார்த்திருக்கிறார். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் காட்டிய தலைமைப் பண்பை பெரிதும் சிலாகிக்கிறார்.

ஈ.வெ.ரா.வின் உள்ளத்தில் தைரியத்தையும் தியாகத்தையும் தூண்டியவர் ராஜாஜி என்றாலும் ஈ.வெ.ரா.வின் முதல் குரு வரதராஜுலு நாயுடுதானாம். ஈ.வெ.ரா.வின் பேச்சில் உண்மை இருக்கும், அது காட்டாற்று வெள்ளம் போல கொஞ்சம் கரடுமுரடாகப் பொழியும் என்கிறார். வ.ரா.வின் கணிப்பு

செய்ய வேண்டும் என்று தோன்றுவதை தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் தன்மைக்கும் தேசத்தொண்டுக்கும் சம்பந்தமே இல்லை என்பது அவர் கொள்கை.

உள்நாட்டு வைதீகத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அயல் நாட்டு ஏகாதிபத்தியத்தோடு நாயக்கர் உறவாடுவதைக் கண்டு நான் மிகுதியும் வருந்துகிறேன்.

திரு.வி.க.வின் தமிழைப் புகழ்கிறார். ஈ.வெ.ரா. காட்டாறு என்றால் இவர் தென்றல் போலப் பேசுவாராம். திரு.வி.க. சாது. யாரையும் சுலபத்தில் கடிந்து பேசிவிடமாட்டார். அதனால் எப்போது தர்மசங்கடத்தில்தான் இருப்பாராம். ராஜாஜிக்கும் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும் அதிகாரப் போட்டி இருந்தபோது “ஐயங்கார் நல்லவர், ஆச்சாரியார் பெரியவர். யாரை தள்ளுகிறது, யாரைக் கொள்கிறது” என்று குழம்பினாராம். இப்படி குழம்பிக் கொண்டே இருப்பதால், ஓயாத சிந்தனைதானாம், காரியத்தில் இறங்கமாட்டாராம்.

வ.உ.சி. சிறை சென்ற பிறகு அன்றைய கவர்னர் பெண்ட்லண்ட் பிரபு ஏதோ அவமரியாதையாக பேசி இருக்கிறார். அரசு எதிர்ப்பு என்பது அப்போது வெற்றிடம்தான். வரதராஜுலு நாயுடுதான் ஏதோ துணிந்து எதிர்த்திருக்கிறாராம். அதுதான் அவர் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்ததாம். மிகச் செறிவாகப் பேசுவாராம். அவர் மீது பிற தலைவர்களுக்கு கொஞ்சம் பொறாமை உண்டாம். திராவிட இயக்கம் வகுப்புவாதத்தை வளர்க்கிறது என்று அதை எதிர்த்தாராம். பிற்காலத்தில் ஹிந்து மஹாசபாவில் சேர்ந்திருக்கிறார்.

டி.எஸ்.எஸ். ராஜன் டாக்டர். பர்மாவில் பணி புரியும்போது வெள்ளைக்கார மேலதிகாரி பிரச்சினை செய்ய ரோஷப்பட்டு இங்கிலாந்துக்கு சென்று மேல்படிப்பு படித்திருக்கிறார். அங்கே சவர்க்கார், வ.வே.சு. ஐயர், மதன்லால் திங்ராவோடு பழக்கம். இந்தியா திரும்பிய பிறகு வெற்றிகரமாக தொழில் நடத்தி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் சிறை, உடல்நிலை பதிப்பு. ராஜன் முரடராம், ஆனால் ராஜாஜிக்கு கட்டுப்பட்டு நடப்பாராம். ஆனால் அவரிடமிருந்து விலகியும் இருந்திருக்கிறார். ஆனால் ராஜாஜி முதல்வரானபோது ராஜனை அமைச்சராக்கி இருக்கிறார்.

ஜார்ஜ் ஜோசஃப் வக்கீல். மலையாளி, ஆனால் வாழ்ந்தது மதுரையில். மதுரை மக்கள் இவரை ரோஜாப்பூ துரை என்று அழைப்பார்களாம். ராஜாஜியும் இவரும்தான் காங்கிரசின் வேலைத்திட்டத்தை உருவாக்கினார்களாம். அவரது மனைவி (பெயர் தெரியவில்லை) இவரையே மிஞ்சினவராம். காந்தி 1919-இல் ரௌலட் சட்ட மறுப்பு இயக்க வேலையாக மதுரையில் இவர் வீட்டில் தங்கி இருக்கிறார். சிறை செல்ல யாரெல்லாம் தயார் என்று பட்டியல் போட்டிருக்கிறார்கள். ஜார்ஜ் ஜோசஃப் சேரவில்லை. முதலில் சேர்ந்தது அவர் மனைவி! மனைவி சிறை செல்கிறேன் என்று கையெழுத்து போட்டதால்தான் ஜோசஃப்பும் போட்டாராம். வைக்கம் போராட்டத்தில் இவரும் கலந்துகொண்டிருக்கிறார். பின்னாளில் காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். காந்தி ஜாதிக் கொடுமைகளை எதிர்த்தாலும் வைதீக மனப்பான்மை காங்கிரசில் தலை தூக்கி இருக்கிறது என்று கருதி விலகினாராம். நீதிக் கட்சியில் சேர்ந்து அதற்கு நல்ல ஒரு செயல் திட்டத்தை வகுக்க முயற்சித்தார், ஆனால் தோல்வி என்கிறார் வ.ரா.

சத்தியமூர்த்தி தர்க்கம் புரிவதில் ராஜாஜிக்கு இணையானவர்; அரசியல் அறிவில் நேருவுக்கு சமமானவர்; ஈ.வெ.ரா. போல பிரசங்க மழை பொழியக்கூடியவர்; வரதராஜுலு நாயுடு போல அனுபவம் மிக்கவர்; இலக்கிய ரசனை மிகுந்தவர். சிறந்த தேசபக்தர். சட்டசபை நிபுணர். ஆனால் அவரிடம் ஏதோ குறை இருக்கிறது, அவரை மக்கள் முழுமையாக நம்பவில்லை என்கிறார் வ.ரா. அவர் தீர்க்கதரிசனத்துடன் பேசினாலும் அவர் சொல்வது எடுபடவில்லையாம். எல்லாரிடமும் திட்டு வாங்குவாராம், ஆனால் மனம் சோர்ந்ததே இல்லையாம். காந்தியின் முக்கிய பங்களிப்பு சாதாரண மக்களிடம் பெரும் எழுச்சியை கிளப்பியதுதான், காந்தி அரசியல் நிபுணர் அல்லர் என்று கருதினாராம். வ.ரா. சத்தியமூர்த்தியையே ஏன் நீங்கள் சொல்வது எடுபடவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு சத்தியமூர்த்தி நான் பணக்காரன் இல்லை, என்னைப் போல தரித்திரன் நேர்மையானவனாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று சொன்னாராம். சத்தியமூர்த்தி காந்தி, ராஜாஜி போன்றவர்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் படாடோபமாகத்தான் இருப்பாராம். படாடோபம் என்றால் லட்சாதிபதி வாழ்க்கை அல்ல, தொழில் என்று ஒன்று இல்லாமல் நன்றாக உடுத்தி உண்பதே அந்த்க் காலத்தில் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சத்தியமூர்த்தியே ஒரு முறை எப்போதாவது பணம் வாங்கிக் கொண்டு சட்டசபையில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறேன், எங்கே கூட்டம், தேர்தல் என்றால் சத்தியமூர்த்தி வர வேண்டி இருக்கிறது, எந்தத் தொழிலையும் செய்ய நேரம் இல்லை, என் குடும்பமும் சாப்பிட வேண்டாமா என்று சொல்லி இருக்கிறார்.

வ.உ.சி. ஒரு காலத்தில் தூத்துக்குடியின் முடிசூடா மன்னராக விளங்கினாராம். தமிழ்நாட்டில் அக்காலத்தில் அதிகார வர்க்கம் கண்டு நடுங்கியது அவர் ஒருவரைத்தான் என்கிறார் வ.ரா. வ.உ.சி. உணர்ச்சிக் களஞ்சியமாம். சிறைவாசம் முடிந்த பிறகு பாரதியையும் அரவிந்தரையும் சந்திக்க பாண்டிச்சேரி வந்தாராம். அப்போது வ.ரா.வும் அங்கே இருந்திருக்கிறார். அரவிந்தர் ஏறக்குறைய அகதி. பாரதி வெறும் அகதி அல்லர், ஏழை அகதி. வ.உ.சி. சிறையில் படாதபாடு பட்டு திரும்பிய ஏழை. வ.ரா.வின் சொற்களில்:

அந்த சந்திப்பில் விசேஷம் என்னவென்றால் வானைப் பிளக்கும் நகைப்பு. இவ்வளவு சிரிப்பு இவர்களுக்கு என்னாமாய் இருக்க முடியும் என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன்… தன்னம்பிக்கையும் நகைச்சுவையும் ஒரு நாளும் பெரியார்களிடமிருந்து அகலவே அகலாது…

எஸ்.எஸ். வாசன் 1930-இல் சாதாரண நிலையில்தான் இருந்தாராம். 1943-இல் கோடீஸ்வரர் ஆகிவிட்டாராம். அவரை கோடீஸ்வரனாக்கியது விகடனாகத்தான் இருக்க வேண்டும். இருபது லட்சம் முதல் போட்டு திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தாராம். 1943 வரைக்கும் ஓரிரு திரைப்படங்கள்தான் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். குதிரைப் பந்தயத்திலும் நிறைய ஜெயித்தார் போலிருக்கிறது. அவரை கோடீஸ்வரனாக்கியது பரிசுப் போட்டிகளும் குதிரைப்பந்தயமும்தான் என்று மக்கள் சொல்வார்களாம். வாசன் மகா பிடிவாதக்காரராம். இதை வ.ரா. சொல்லவில்லை, ஆனால் வாசன் கோடீஸ்வரர், கல்கி லட்சாதிபதியாகக் கூட இருந்திருக்க மாட்டார். அது அவர்கள் பிரிவுக்கு அடிகோலி இருக்கும் என யூகிக்கிறேன்.

கே.பி. சுந்தராம்பாளை கிட்டப்பா மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் கிட்டப்பா இறந்ததும் கேபிஎஸ் விதவைக்கோலம் பூண்டார். எப்போதும் கிட்டப்பாவை “எங்க ஆத்துக்காரர்” என்றுதான் குறிப்பிடுவாராம். வ.ரா. பகிரங்கமாக கிட்டப்பாவை தன் கணவர் என்று சொல்கிறாரே என்று வியந்து அவரிடமே உங்களுக்கு திருமணம் ஆயிற்றா என்று விசாரித்திருக்கிறார். கேபிஎஸ் நிதானமாக இல்லை என்று பதிலளித்திருக்கிறார். அன்றைய சமூகம் அவர்கள் உறவை எப்படி பார்த்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அப்படி இருந்தும் கேபிஎஸ்ஸை தன் பட்டியலில் இணைத்தற்கு வ.ரா.வுக்கு ஒரு சபாஷ்!

கிட்டப்பாவை சந்திப்பதற்கு முன்பே கேபிஎஸ் பிரபல ஸ்திரீபார்ட் நடிகையாம். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்ற ராஜபார்ட் கிடைக்கவில்லையாம். கிட்டப்பாவைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் பலரும் கிட்டப்பாவுக்கு முன் உன் பாட்டு எடுபடாது என்று கேபிஎஸ்ஸை எச்சரித்திருக்கிறார்கள். கேபிஎஸ் “கிட்டப்பா கந்தர்வனாயிருக்கலாம்; ஆனால் சுந்தராம்பாள் அவருக்கு சளைத்தவளல்ல” என்று பதில் சொன்னாராம். முதல் சந்திப்பிலேயே காதலாம். கிட்டப்பா இறந்ததும் விதவைக்கோலம் என்றால் எப்படிப்பட்ட காதல் என்று விவரிக்கத் தேவையில்லை.

என்.எஸ். கிருஷ்ணன் நகைச்சுவையை முழுதாக உணர்ந்தவர் என்கிறார். அவர் இருந்தால் திரைப்படம் ஓடும் என்ற நிலை இருந்திருக்கிறது. அவர் செய்யும் கொனஷ்டைகள், மற்றவரைப் புண்படுத்தாத நகைச்சுவைக்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. இன்று என்எஸ்கேயின் திரைப்படங்களைப் பார்த்தபோது அவர் அடைந்த வெற்றியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வெகு அபூர்வமாகவே சிரிப்பு வருகிறது.

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பாரதிக்குப் பிந்தைய காலத்தின் மூன்று சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று வ.ரா. கணிக்கிறார். (மற்ற இருவர் பாரதிதாசன், தேசிகவிநாயகம் பிள்ளை) அவரது கவிதைகளை வெகுவாக சிலாகிக்கிறார். (எனக்கு இவர் கவிதைகள் எதுவும் தேறவில்லை என்பதை பதிவு செய்கிறேன், ஆனால் கவிதைகளின் கற்பூர வாசனை எனக்குத் தெரியுமா என்பது எனக்கே சந்தேகம்.). மிகச் சிறந்த பேச்சாளராம். சாது, ஆனால் சண்டைக்குப் போனால் விடமாட்டார் என்கிறார்.

இன்னும் நிறைய பேரைப் பற்றி எழுதி இருக்கலாமே என்று தோன்ற வைத்த புத்தகம். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

3 thoughts on “வ.ரா.: தமிழ் பெரியார்கள்

  1. இவர் பாரதியைப் பற்றி தனியாக ஒரு நூல் எழுதியுள்ளார் என்று நினைக்கின்றேன். கிண்டிலில் படித்த நினைவு. அந்த நூல் அந்தளவிற்கு நினைவில் நிற்காததற்கு காரணம் கோர்வையாக இல்லாமல், துண்டு துண்டு சம்பவங்களாக இருந்த. கல்கி ஒரு காலகட்ட மக்களின் வாசிப்பில் பெரும் மாற்றம் செய்திருக்கின்றார் அல்லவா, விகடனின் மாபெரும் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம். ராஜாஜி யை பற்றி நமக்கு ஒரு முழு சித்திரம் கிடைக்க அவரைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் படிக்க வேண்டும் போல, அந்தளவிற்கு இறுக்கமாக இருந்திருக்கின்றார். கேபிஎஸ் – கிட்டப்பா, சாருநிவேதிதாவின் தீராக்காதலி மேலும் பல சுவாரஸ்யங்களை தரும். தி.செள.செளரிராஜன் தான் டி.எஸ்.எஸ்.ராஜன் என்று நினைக்கின்றேன். வ.வே.சு ஐயர், சவர்க்கர், போன்றவர்களுடன் லண்டனில் இருந்த அனுபவங்களை எழுதியுள்ளார். கிண்டிலில் கிடைக்கின்றது. என்.எஸ்.கிருஷ்ணனை பற்றி கூறியது சரி. காலம் கடந்து போனதால் சிரிப்பு வரவில்லை என்றும் கூற முடியவில்லை. இன்றும் சபாபதி சிரிக்கத்தான் வைக்கின்றது

    Like

    1. ரெங்கா, வ.ரா. வின் பாரதி பற்றிய புத்தகம் எனக்குப் பிடித்திருந்தது என்று நினைவு. ஆனால் புத்தகம் மங்கலாகத்தான் இப்போது நினைவிருக்கிறது. ஆம், சௌரிராஜன்தான் டி.எஸ்.எஸ். ராஜன்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.