தமிழ் பெண் எழுத்தாளர்கள்

நாலைந்து முறை எழுதியதுதான், இன்னும் ஒரு iteration.

ராஜம் கிருஷ்ணனின் புத்தகம் பற்றி எழுதியது நான் பெரிதும் மதிக்கும் அம்பையை கோபப்படுத்தி இருக்கிறது. வெறும் “பெண் எழுத்தாளர்” என்று ஒருவரை அடையாளப்படுத்துவது பெண்களை அவமானப்படுத்துவது என்கிறார்.

“பெண்” என்ற அடைமொழி இந்த எழுத்துக்களின் முக்கிய இலக்கையும் (target audience) குறிக்கிறது. அழ. வள்ளியப்பா, பூவண்ணன், வாண்டு மாமா போன்றவர்கள் குழந்தை எழுத்தாளர்கள். “குழந்தை” என்ற அடைமொழி இல்லாமல் அவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டி இருக்கிறது.

இருந்தாலும் அப்படி “பெண் எழுத்தாளர்”  என்று வகைப்படுத்துவது பெண்களை இழிவுபடுத்துகிறதா? இருக்கலாம், அதைப் புரிந்து கொள்ளும் உணர்திறன் (sensitivity) எனக்கு கம்மிதான். என் உணர்திறன் குறையாகவே இருக்கலாம். நான் அந்த முத்திரையைப் பயன்படுத்துவது சுருக்கமான குறிப்பாக (shorthand), நான் வளர்ந்து வந்த காலங்களிலிருந்து பயன்படுத்தப்படும் முத்திரை, எனக்கு நன்றாகப் பழக்கப்பட்ட முத்திரை, குறைந்த பட்சம் என் தலைமுறைக்காரர்களுக்கு சுலபமாகப் புரியும் முத்திரை என்பதனால். வேறு முத்திரை யாருக்காவது தெரிந்தால், அது அனைவருக்கும் புரியக் கூடியதாக இருந்தால், சொல்லுங்கள், அதைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்த மனவிலக்கமும் இல்லை. ஹரிஜன் என்றுதான் என் இளமைக் காலத்தில் சொன்னோம், அதை தலித் என்று மாற்றிக் கொள்ளவில்லையா என்ன? படிப்பவர்களுக்கு விளக்கங்கள் இல்லாமல் புரிய வேண்டும், அவ்வளவுதான்.

நான் சின்ன வயதில் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்களின் கதைகள்  genre அவற்றில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. சிவசங்கரி, இந்துமதி, லக்ஷ்மி போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். குடும்பச் சச்சரவுகள், மாமியார்-மருமகள் சண்டை, நாத்தனார் கொடுமை, வரதட்சிணை கேட்கும் “கோழைகள்”, வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகள் என்று பெண்களின் உலகத்தைப் பற்றி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.  Wannabe பெண்ணிய எழுத்து (feminist writing). இந்த genre-இன் இலக்கு அனேகமாக பெண்கள்தான். எனக்கு “பெண் எழுத்தாளர்கள்”-இன் வரையறை அந்த மாதிரி எழுத்துக்கள்தான், சிவசங்கரி போன்றவர்கள்தான். “பெண்” என்ற அடைமொழி இல்லாமல் அவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டி இருக்கிறது.

என் இளமைக் காலத்தில் சிவசங்கரிதான் இந்த genre-இன் ராணி. இந்துமதி கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களைப் பற்றி எழுதி பிரபலமாக இருந்தார். லக்ஷ்மிக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் மெதுமெதுவாக அவரது பாணி கதைகள் கலைமகளுக்குப் போய்க் கொண்டிருந்தன. அப்போது சூடுபட்டதால் பொதுவாக தமிழ் பெண் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

சுழலில் மிதக்கும் தீபங்கள் பதிவில் நான் சொல்ல வந்தது இதைத்தான். ஒரு புத்தகத்தை வைத்து உறுதியாகச் சொல்லிவிட முடியாது, ஆனால் ராஜம் கிருஷ்ணன் சிவசங்கரி பாணி எழுத்தாளர் என்றுதான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் சு.மி. தீபங்கள் சிவசங்கரி பாணி எழுத்துதான். என் வார்த்தைகள் சரியாக வராமல் இருக்கலாம், ஆனால் சொல்ல விரும்புவது இதைத்தான்.

எழுதும் பெண்கள் எல்லாரும் பெண் எழுத்தாளர்கள் அல்ல.  கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், பாமா போன்றவர்கள் எழுத்தாளர்கள், அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு பூமணி தலித் எழுத்தாளர் அல்ல, தலித் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் எழுத்தாளர். மலர்வதி (தூப்புக்காரி) பெண்தான், ஆனால் அவர் எனக்கு “பெண் எழுத்தாளர்” அல்லர், (நல்ல எழுத்தாளரும் அல்லர், ஆனால் அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும், சிறப்பாக எழுத வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.) அவர் சோலை சுந்தரப்பெருமாள் பாணி எழுத்தாளர். அனுராதா ரமணனும் கமலா சடகோபனும் ரமணிசந்திரனும் (ரமணிசந்திரனின் நாவல் ஒன்றில் பாதி மட்டுமே படித்தேன், அதற்கு மேல் தாண்டமுடியவில்லை) பெண் எழுத்தாளர்கள்தான். வாஸந்தியை வாரப் பத்திரிகைகளை விடாமல் படித்த காலத்தில் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், பிற்காலத்தில் சில புத்தகங்களைப் படித்த பிறகு என் எண்ணம் மாறிவிட்டது, அவரும் எனக்கு அடைமொழி தேவைப்படாத “வெறும்” எழுத்தாளர் மட்டுமே.

நான் விரும்பிப் படிக்கும் ஒரே பெண்ணிய எழுத்தாளர் (பெண் எழுத்தாளர் அல்லர், பெண்ணிய எழுத்தாளர்) அம்பை. அவர் பெண்களைப் பின்புலத்தில் வைத்து இலக்கியம் படைக்கிறார். இருபத்து சொச்சம் வயதில் முதன்முறையாக “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது உண்மையிலேயே அது ஒரு revelation ஆக இருந்தது. ஒரு battered copy இன்னும் என் அலமாரியில் எங்கோ இருக்கிறது.

ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன், திலகவதி போன்றவர்களைப் படிப்பதை நான் தள்ளிப்போட்டுக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் “பெண் எழுத்தாளர்களோ” என்ற சந்தேகம்தான் காரணம். ஒரு வழியாக மனவிலக்கைத் தவிர்த்து சூடாமணியின் சில பல சிறுகதைகள் படித்த பிறகு அவருக்கு என் மனதில் “எழுத்தாளர்” என்ற அடையாளம்தான்; “பெண் எழுத்தாளர்” என்ற அடையாளம் இல்லை.

படித்த வெகு சில கதைகள் மூலம் என் ஆர்வத்தை அதிகரித்திருக்கும், நான் படிக்க விரும்பும் (பெண்) எழுத்தாளர்கள் வை.மு. கோதைநாயகி அம்மாளும், குமுதினியும்தான். வை.மு.கோ. ஒரு முக்கியமான முன்னோடி என்று தோன்றுகிறது. குமுதினியின் எழுத்தில் என்னவோ ஒரு special charm இருக்கிறது.

பிற மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் பிரச்சினையே இல்லை. நமக்குத் தெரிவதே, நம் காதில் விழுவதே பல முறை வடிகட்டிய பின்தான் நம்மை வந்தடைகிறது. ஜேன் ஆஸ்டெனும் எமிலி ப்ராண்டேயும் உர்சுலா லே க்வின்னும் ஷிர்லி ஜாக்சனும் மஹாஸ்வேதா தேவியும் அம்ரிதா ப்ரீதமும் இஸ்மத் சுக்டாயும் நமக்குத் தெரிவதே பத்து பேர் பரிந்துரைப்பதால்தான். அவற்றில் நான் குறைகள் கண்டுபிடிக்கலாம், ஆனால் ஏதாவது நிறைகள் இருப்பதால்தான் என் கவனத்துக்கே வருகிறது.

இந்த மாதிரி வகைப்படுத்தல் எல்லாம் வசதிக்காகத்தான். “பெண் எழுத்தாளர்”, “கரிசல் எழுத்தாளர்”, “வணிக எழுத்து”, “pulp writer” எல்லாம் வசதிக்காகப் பயன்படுத்தும் முத்திரைகள்தான். உண்மையில் ஜாதி இரண்டொழிய வேறில்லை. நன்றாக எழுதுபவர் எழுத்தாளர், மற்றவர் வெட்டி ஆஃபீசர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பெண் எழுத்தாளர்கள்

4 thoughts on “தமிழ் பெண் எழுத்தாளர்கள்

 1. நன்றாக சொன்னீர்கள் . ஆனால் ஒவ் வொருத்தருக்கும் ஒரு விதி விலக்கு உண்டு .சிவசங்கரி சுய முன்னேற்றம் பற்றி முயற்ச்சித்து இருக்கிறார் . அனுராதா ரமணன் அந்நிய விதைகள் என்று ஒரு கதை குமுதத்தில் எழுதி இருந்தார் . இந்துமதி , தரையில் இறங்கும் விமானங்கள் தவிர்த்து வேறு நல்ல கதை இல்லை . –

  Like

 2. பெண்களை மையப்படுத்தி ட்ராமா வகை எழுத்துக்களை நீங்கள் பெண் எழுத்து என்று குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இன்று கிண்டிலில் குவிந்து கிடப்பது இந்த வகைதான். உள்ளம் கொள்ளை போகுதே, எனக்கே எனக்கா என்று இருக்கும் அனைத்து பாடல் முதல் வரிகளிலும் நாவல்கள். அன்லிமிட்டட் இருக்கும் போது ஒன்றிரண்டை படித்து பார்த்தேன். இரண்டு பக்கம் தாண்ட முடியவில்லை. ட்ராமா கூட இல்லை, படு மொக்கையான உரையாடல்கள் திடுக்கிடும் திருப்பங்கள் என்ற பெயரில் அபத்தங்கள். அதற்கும் ஏகப்பட்ட வாசகர்கள் இருக்கின்றார்கள் போல. ஜெயமோகன் கூறுவது போன்ற வணிக எழுத்துக்களிலும் சேராது இது. இதோடு ஒப்பிட்டால் வாரமலரில் முன்பு சிறுகதைகள் வரும், அது கூட கொஞ்சம் நன்றாக இருக்கும். யாராவது பெயர் வைப்பார்கள், அதுவரை நாம் விரும்பிய படி அழைத்து கொள்ள வேண்டியதுதான்.

  Like

 3. கோ ரா, அன்னிய விதைகள் படித்ததில்லை. தரையில் இறங்கும் விமானங்கள் விதிவிலக்குதான் – விரிவாக இங்கே – https://siliconshelf.wordpress.com/2011/12/16/இந்துமதியின்-தரையில்-இற/

  சுந்தரராஜன், நீங்கள் பரிந்துரைக்கும் ராஜம் கிருஷ்ணன் புத்தகம் ஏதாவது உண்டா?

  ரெங்கா, நீங்கள் சொல்வது எனக்கு இன்னும் ஒரு படி கீழே இருக்கிறது. சிவசங்கரியின் மோசமான புத்தகம் கூட ரமணி சந்திரனின் மிகச் சிறந்த புத்தகத்தை விட நல்லபடியாக எழுதப்பட்டிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.