வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச் சுடர்மணிகள்

பத்து பக்கம் படிப்பதற்குள் வையாபுரிப் பிள்ளை எத்தனை சிறந்த ஆராய்ச்சியாளர் என்பது புரிந்துவிட்டது. பிள்ளைக்கு முன்முடிவுகள் இல்லை. தமிழே ஆதிமொழி, தமிழ்க் குரங்கே முதல் குரங்கு என்று நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. தன் கண்ணில் என்ன பட்டது, அதை வைத்து தனக்குத் தோன்றுவது என்ன, என்ன முடிவுகளுக்கு வந்தேன் என்று விவரிக்கிறார். அந்த அணுகுமுறையே பெரிய நிம்மதியாக (relief) இருக்கிறது.

தமிழ்ச் சுடர்மணிகள் (1949) க.நா.சு. படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் போட்ட பட்டியலில் இடம் பெறும் புத்தகம். மின்பிரதி இங்கே. பல நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். க.நா.சு.வுக்கு ஒரு ஜே!

பிள்ளைவாளின் நடையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அது ராகவையங்கார் போன்றவர்களின் பண்டித நடை அல்ல; சேதுப்பிள்ளை, திரு.வி.க. போன்றவர்களின் எளிமைப்படுத்தப்பட்ட பண்டித நடையும் அல்ல.எந்த விதமான style-உம் இல்லை. அதனால் நடை காலாவதியாகவில்லை. சொல்ல வருவதை தெளிவாக நேரடியாக சொல்கிறார்.


தொல்காப்பியர் இன்றைய கேரளத்தில், அதுவும் திருவிதாங்கூரில் பிறந்தவர் என்கிறார். அதங்கோட்டாசான் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படுவது, இன்றும் மலையாளத்தில் (மட்டுமே) பழக்கத்தில் உள்ள சொல்வடைகளை தொல்காப்பியத்தில் பயன்படுத்தி இருப்பது, அதுவும் அந்த சொல்வடைகள் சங்கப் பாடல்களில் கூட இல்லாமல் இருப்பது வலிமையான வாதங்கள்தான்.

சொல்லாராய்ச்சியின் அடிப்படையிலும் சமண சமயத்தில் மட்டும் காணப்படும் கருத்துக்கள் சில தொல்காப்பியத்தின் இருப்பதையும் சுட்டிக் காட்டி தொல்காப்பியர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று வலுவாகச் சொல்கிறார்.

ஆனால் தொல்காப்பியத்தின் காலம் பற்றி அவர் முன் வைக்கும் வாதங்கள் எனக்கு பலவீனமாகத் தெரிகின்றன. இரண்டாம் நூற்றாண்டில் வந்த ஒரு புத்தகத்தில் – எடுத்துக்காட்டாக, மனுஸ்மிரிதியில் – காணப்படும் கருத்து தொல்காப்பியத்தில் இருக்கிறது என்றால் தொல்காப்பியம் இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டிருக்க முடியாது என்பது வலுவற்ற வாதம். இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் வந்த வேறு புத்தகத்திலும் அந்தக் கருத்துக்கள் இருந்திருக்கலாம். என்ன எல்லா பழைய புத்தகங்களும் நமக்கு கிடைத்துவிட்டனவா? அதற்கு முன் அந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? வாய்வழியாகக் கூட அவை பல நூறாண்டுகளாகத் தொடர்ந்திருக்கலாம் இல்லையா? மனுஸ்மிரிதி முற்றிலும் மனுவின் மூளையிலிருந்து மட்டுமே உதித்ததா என்ன? அதற்கு முன் இருக்கும் பல கருத்துக்களை அவர் தொகுத்திருக்கமாட்டாரா?

தொல்காப்பியம் பாணினி பற்றி குறிப்பிடவில்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு பாணினிக்கு தொல்காப்பியர் முந்தையவர் என்று உறுதியாக சொல்வதற்கில்லை என்று வாதிடும் பிள்ளைவாள் ஒரு புத்தகத்தின் கருத்து தொல்காப்பியத்தில் இருப்பதால் தொல்காப்பியம் பிந்தையது என்று மட்டும் எப்படி உறுதியாகச் சொல்கிறார்? அதுவும் தொல்காப்பியம்தான் தமிழில் கிடைத்த மிகத் தொன்மையான நூல் என்று கருதப்படுகிறது. தொல்காப்பியமே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் என்றால் குறள் தொல்காப்பியத்துக்கு 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டதா? (குறளின் காலம் கி.பி. 600 வாக்கில் என்று இன்னொரு கட்டுரையில் சொல்கிறார்.) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அத்தனை குறுகிய காலத்தில் – 150, 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டுவிட்டனவா? எனக்கு எங்கேயோ உதைக்கிறது.

ஆனால் ஒன்று. சங்கக் கவிதை சிறப்பாக இருக்கிறது என்றால் என் தாய்மொழியில் அருமையான கவிதை என்று பெருமைப்படலாம். சங்கக் கவிதை 2000 ஆண்டுக்கு முந்தையது என்றால் என்ன பெருமை, 200 ஆண்டுக்கு முந்தையது என்றால் என்ன இழிவு என்று எனக்கு விளங்கவில்லை. கறாராகப் பார்த்தால் இலக்கியத்தின் காலம் என்பது வெறும் தகவல்தான். ஷேக்ஸ்பியர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதி இருந்தால் அவரது நாடகங்கள் சோபை இழந்துவிடுமா என்ன? அது என்னவோ தமிழகத்தில் தமிழ் எத்தனை பழைய மொழி என்று சொல்வதில் ஒரு பெருமை. வையாபுரிப் பிள்ளை தொல்காப்பியம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று வாதிட்டால் அவர் தமிழ் துரோகி ஆகிவிடுகிறார். அவர் வாதங்கள் வலுவற்றவை என்றால் மறுக்கலாம், பிரதிவாதங்களை முன்வைக்கலாம். தமிழுக்கு என்ன துரோகம் என்பது புரியவில்லை.


வள்ளுவரின் காலம் கி.பி. 600 வாக்கில் இருக்க வேண்டும் என்று சொல்லாராய்ச்சியின் அடிப்படையில் ஊகிக்கிறார். சொல்லாராய்ச்சி மிக அருமை. சில சொற்கள் பழக்கத்தில் எப்போது வந்தன என்பதை வைத்து இப்படி ஊகிக்கிறார். வள்ளுவர் சமணர் என்கிறார்.


மாணிக்கவாசகர் கிறிஸ்துவர்களை மதம் மாற்றி சைவர்கள் ஆக்கினார் என்று பலரும் பிள்ளைவாள் காலத்தில் கருதி இருக்கிறார்களாம். அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது ஒரு கேரள (சேர?) அரசன் மணிக்கிராமம் என்று ஒரு செப்பேட்டில் குறிப்பிட்டிருப்பதும், சிரியன் கிறிஸ்துவர்களிடம் இப்படி மதமாற்றம் நடந்தது என்று இருக்கும் ஒரு கர்ணபரம்பரைக் கதையும். இதெல்லாம் ஜுஜூபி ஆதாரங்கள், பத்தாது என்று வெகு சுலபமாக நிறுவுகிறார்.


கம்பரின் கால ஆராய்ச்சி அருமை. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று நிறுவியேவிட்டார், மறுவாதமே இருக்க முடியாது. இந்தப் புத்தகத்தின் மிக அருமையான கட்டுரைகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் மற்றும் கம்பரைப் பற்றி எழுதியதைத்தான் சொல்வேன்.


கபிலர், புகழேந்திப் புலவர், நன்னூல் இயற்றிய பவணந்தியார், பரிமேலழகர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, கனகசபை பிள்ளை, உ.வே.சா., ரா. ராகவையங்கார், பாரதியார், தேசிகவிநாயகம் பிள்ளை பற்றியும் நல்ல கட்டுரைகள். ஆனால் என் மனதைக் கவர்ந்தவை தொல்காப்பியர், வள்ளுவர் மற்றும் கம்பரைப் பற்றி எழுதியதுதான். அதுவும் கால ஆராய்ச்சியில் பிய்த்து உதறுகிறார். இவர் மாதிரி யாரிடமாவது தமிழ் கற்கும் பாக்கியம் இருந்திருந்தால் இளமையிலேயே தமிழின் அருமை பெருமை புரிந்திருக்கும்.

பிள்ளைவாளின் தொல்காப்பிய கால ஆராய்ச்சி, அதற்கு சீனி. வேங்கடசாமி போன்றவர்களின் மறுப்பு ஆகியவற்றை இன்னொரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
தொடர்புடைய சுட்டி: மின்பிரதி