ஜனனி சிறுகதைத் தொகுப்பு. க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. மின்புத்தகமாகக் கிடைக்கிறது.
லா.ச.ரா.வின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாற்கடல். என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தினரைப் பற்றி எழுத வேண்டும்.
இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதை யோகம். விவரிப்பது கஷ்டம். ஒரு கல். அதன் மேல் புகையிலை துப்பப்படுகிறது. அதன் அருகே கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு விதவை தன் தோழியின் கணவனோடு உறவு கொள்கிறாள். என்னென்னவோ நடக்கிறது. அந்தக் கல் ஒரு சுயம்புலிங்கம்.
இதே பாணியில் அமைந்த சிறுகதை ரயில். ஒரு ரயில் பெட்டி பிரயாணிகளின் விவரிப்பு. கதை சுமாராகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதன் முத்தாய்ப்பில் (denouement) வயசாளி கணவர் மனைவியிடம் பேசுவது நன்றாக வந்து விழுந்திருந்தது.
அக்காவை விரட்டிக் கொண்டு ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்க்கும் சின்னப் பையனாக நான் இருந்திருக்கிறேன். இன்னமும் மாப்பிள்ளை கருக்கு கழியாமல் வண்டியே தனக்காகத்தான் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் வயசுப் பிள்ளையாகவும் இருந்திருக்கிறேன். ஏண்டாப்பா இத்தனை பெரிய குடும்பத்தைப் படைத்தோம் என்று ஏங்கும் அந்தச் சம்சாரியாகவும் இருந்திருக்கிறேன்….
உப்புமில்லை புளியுமில்லாதற்கு எல்லாம் உறுமிக் கொண்டும் கருவிக் கொண்டும் குலாவிக் கொண்டும் கொக்கரித்துக் கொண்டும் இருந்திருக்கிறோம் – இருக்கிறோம்.
அக்காவை சின்னத் தம்பி மிரட்டுவதும் புன்னகைக்க வைக்கிறது.
டேய் சொன்னத்தைக் கேளு. நீ ரொம்ப எட்டிப் பாக்கறே, காலை வாரி விட்டுடப் போறது…
நீ என் காலைப் பிடிச்சுக்கோ, அதை விட உனக்கு என்னடி வேலை?
ஜனனி, புற்று, அரவான், பூர்வா, கணுக்கள், கொட்டுமேளம் சிறுகதைகள் அவர் பாணி சிறுகதைகள். படிக்கலாம்.
ஜனனி சிறுகதையை கல்கியின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி சூடாமணியின் ஒரு சிறுகதையோடு ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரை இங்கே.
புற்று சிறுகதையில் அம்மா மகனை நீ அழிந்து போவாய் என்று சாபம் விடும் காட்சி வருகிறது. இந்தக் காட்சிதான் பிற்காலத்தில் புத்ர நாவல் ஆனதோ?
அரவானில் பணக்கார வீட்டுக் குழந்தைக்கு பாலூட்டும் வேலை பார்க்கும் மனைவியும் தங்கள் குழந்தைக்கு பாலில்லையே என்று உளைச்சல்படும் கணவனும் நல்ல சித்தரிப்பு. பூர்வாவில் ஒரு வரி புன்னகையை வரவழைத்தது. எந்த ஜன்மத்தில் பார்த்தாரோ!
வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதியாக ஓடுகிறது
கொட்டுமேளம் உணர்ச்சிப் பிரவாகம். அண்ணனும் விதவையாகிவிட்ட தங்கையும் பயங்கர அன்னியோன்யம். மனைவி சந்தேகப்பட்டு, கணவன் வீம்பாய் நின்று என்று கதை போகிறது. எனக்குப் பிடித்தது சில வரிகள்தாம்.
அவள் விழுங்கியது ஜலமா, அந்த நாதத்தின் விறுவிறுப்பா?
…
நாயனத்தின் வாசிப்பை விட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து கல்யாணக்கூடம் முழுதும் சிதறி ஓடி உருண்டு பந்துகள் போல எகிறி எழும்பியது.
அண்ணனுக்கு இள வயதிலேயே தலை நரைத்துவிட தங்கை பார்ப்பவர் முடியை எல்லாம் நோட்டம் விடுகிறாள். வழுக்கைத்தலையனனான நானும் அப்படித்தான்.
கதைகள் சோடை போகவில்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதையான யோகத்தை விட நல்ல சிறுகதைகளை லா.ச.ரா. எழுதி இருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்