2021: நாட்டுடமை

தமிழக அரசு சிலம்பொலி சு. செல்லப்பன், தொ. பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ. ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

ஒருவரின் எழுத்து நாட்டுடமை ஆக்கப்படுவது அவரை கௌரவப்படுத்துவது என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. தமிழின் செல்வங்கள் என்றே அறியக் கூடியவர்கள் (பாரதி தரத்தில்), தமிழறிஞர்கள் (வையாபுரிப் பிள்ளை தரத்தில்), முக்கியமான, இன்று மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் (க.நா.சு. தரத்தில்), ஒரு காலகட்டத்தில் முக்கியமாக இருந்து காலாவதி ஆகிவிட்ட தமிழ் எழுத்தாளர்கள் (மு.வ. தரத்தில்) ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு அவர்களின் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றுவது சிறந்த செயல். இதை தமிழ் பல்கலைக்கழகமோ, அல்லது உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகமோ செய்தால் இன்னும் உத்தமம். ஆனால் அவையும் நடைமுறையில் அரசின் ஒரு பங்காகத்தான் இன்று இருக்கின்றன.

இந்த அறுவரில் தொ. பரமசிவன் ஒருவரை மட்டுமே முன்னரே படித்திருந்தேன். அவரது அழகர்கோவில் ஒரு tour de force. இன்னும் ஒரு முறை நிதானமாகப் படிக்க வேண்டும். அந்த ஒரு புத்தகத்துக்காகவே இந்த முடிவை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அறியப்படாத தமிழகம் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

சிலம்பொலி செல்லப்பனின் பேரைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததோ கேட்டதோ இல்லை. கல்வித்துறை, தமிழ்த்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். தமிழ் இலக்கியத்தைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். நல்ல தேர்வாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

இளங்குமரனார் திராவிட இயக்க சார்புடைய தமிழறிஞர் என்று தோன்றுகிறது. பல இலக்கிய விளக்கங்களை எழுதி இருக்கிறார். பள்ளி ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.

முருகேச பாகவதர் அடித்தள மக்களின் உணர்வுகளை கவிதையாக எழுதியவராம். Scheduled Caste Federation என்ற அமைப்பில் பணியாற்றியவராம். காந்தீயவாதியாம்.

செ. ராசு கல்வெட்டு ஆராய்ச்சியாளராம். கொங்கு நாட்டு வரலாறு பற்றி நிறைய எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. அவரது பஞ்சக் கும்மிகள் மற்றும் கொங்கு நாட்டு மகளிர் புத்தகங்கள் பற்றி ஜெயமோகன் விரிவாக எழுதி இருக்கிறார். ராசுவைப் பற்றி மு. இளங்கோவன் நிறைய தகவல்கள் தருகிறார். விவரங்கள் தந்த ஸ்ரீனிவாச கோபாலனுக்கு நன்றி!

சங்கர வள்ளிநாயகம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். அதிகம் தெரியவில்லை. இவரது புகைப்படம் கிடைக்கவில்லை. இவரது ஒரு புத்தகம் – வ.உ.சி.யும் தமிழும் – இணையத்தில் கிடைக்கிறது. நடை கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் விவரங்கள் உள்ள புத்தகம். (வலிந்து கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்பது பற்றி எனக்கு ஒவ்வாமை உண்டு.) இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்றும், அங்கு 50 ஆண்டுகளுக்கு மேல் திருக்குறள் மன்றம் நடத்தியவர் என்றும், பிறமொழிச் சொற்களைக் கேட்டாலே கோபம் வரும் அளவுக்கும் தீவிரமான தனித்தமிழ்வாதி என்றும் ஸ்ரீனிவாச கோபாலன் தகவல் தருகிறார்.

யாருக்காவது இன்னும் விவரம் தெரிந்தால் எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை பக்கம்