வல்லினம் இதழில் படித்த சிறுகதை.
படிக்கப் படிக்க இந்தக் கதை எங்கே போகிறது என ஆர்வத்தை பெருக வைத்து கதை. கொஞ்சம் புதிரான கதைதான். தத்துவ விசாரத்தில் எல்லாம் எனக்கு பெரிதாக ஆர்வமில்லைதான், ஆனால் பிடித்து நிறுத்தி படிக்க வைத்த கதை.
மிருகங்களின் மனதில் என்ன ஓடுகிறது? எங்கள் வீட்டு செல்லப் பிராணியான தோருக்கு இறந்த காலம் பற்றி ஏதாவது பிரக்ஞை உண்டா? அவன் எங்களை எல்லாம் சற்று பெரிய நாய்கள் என்றுதான் நினைக்கிறானா? படிக்கப் போயிருக்கும் என் பெண்கள் ஆறு மாதம் கழித்து திரும்பி வந்தால் அவர்களை நினைவிருக்குமா? ஆறு மாதம் அவர்கள் இல்லை என்பது தெரியுமா?
இறப்புக்கு அருகே சென்ற அனுபவங்கள் (Near Death Experience) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உடலுக்கு வெளியே இருப்பது, இருட்டு, வெளிச்சம், மீண்டும் உடலுக்குள் நுழைதல் என்று பல வித உணர்வுகளை அப்படி அனுபவப்பட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு கருக்களையும் கலந்து ஒரு அருமையான கதையை உருவாக்கி இருக்கிறார். சில பல பிராணிகளுடன் ஏதோ உறவு கொண்ட மனிதன் (எஜமானன்) இறக்கும்போது எப்படியோ அவர்கள் மனதைத் தொட்டுவிடுகிறான், அவர்களின் உலகம் விரிவடைகிறது. திடீரென்று மனித மனம், அதன் விசாலம் பற்றி அவற்றுக்கு பிரக்ஞை ஏற்படுகிறது. அதற்குப் பின் நாயும் பன்றியும் குதிரையும் குரங்கும் பிராணியாகவும் இருக்க முடியவில்லை, மனிதனாகவும் இருக்க முடியவில்லை. இடைவிடாத தேடல். மோட்சம், பிரம்மம் எல்லாம் கோடி காட்டப்படுகின்றன.
அந்தத் தேடலை சித்தரிப்பதில்தான் இந்த சிறுகதை வெற்றி பெறுகிறது. எழுதிய விஜயகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்