கலைஞர் கருணாநிதி: நெஞ்சுக்கு நீதி

இதை விட மோசமான தன்வரலாறை அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன்.

தான் தான் தான் – இந்தத் தன்வரலாற்றில் தெரிவது அது ஒன்றுதான். போனால் போகிறது என்று அண்ணாதுரையைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார். சொன்னால் நம்பமாட்டீர்கள், கிட்டத்தட்ட 800 பக்கம் புத்தகத்தில் எம்ஜிஆரைப் பற்றி ஓரிரண்டு வரி இருந்தால் அதிகம். இந்தப் புத்தகம் அண்ணாதுரையின் மறைவு வரைக்கும்தான், ஆனால் எம்ஜிஆரால் தி.மு.க.வுக்கு கிடைத்த ஆதரவைப் பற்றி கூடவா மனிதர் எழுதமாட்டார்?

கலைஞர் வாழ்ந்த காலம், செய்த அரசியல், திரைப்படங்களில் பணியாற்றிய காலம், அவர் அரசியலிலும் திரைப்படங்களிலும் அடைந்த வெற்றி எல்லாம் சுவாரசியமானவை. மனிதர் அதையே போரடிக்கும் வகையில் எழுதி இருக்கிறார். ஒன்றிரண்டு இடங்களைத் தவிர வேறு எங்கும் சுவாரசியமான சம்பவங்கள் கூட இல்லை. ஆரம்ப காலத்தில் அடி உதை வாங்கி இருக்கிறார், அது உண்மையாக இருக்கிறது. கண்ணதாசன் இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் வாங்கிவிட சாப்பாட்டுக்கு காசில்லாமல் ஒரு நாள் முழுக்க பயணம் செய்தது கொஞ்சம் சுவாரசியமான சம்பவம். அவ்வளவுதான்.

புத்தகத்தின் takeaways இரண்டுதான். கலைஞர் நல்ல நிர்வாகி; தேர்தல்களில், அதுவும் சென்னை மாநகராட்சி தேர்தலில் அவ்ர் பெற்றுத் தந்த வெற்றி, பத்து லட்சம் பணம் சேர்த்துத் தருகிறேன் என்று முனைந்து நின்று சேர்த்தது அவர் ஒரு நல்ல மேலாளர் என்பதைக் காட்டுகிறது. அண்ணா மீது உண்மையான விசுவாசம் இருந்திருக்கிறது. திரைப்படங்கள் மூலம் தன் பொருளாதார நிலையை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

கல்லக்குடிக்கு பெயர் மாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஆறு மாத சிறை. அதுதான் அவர் பட்ட அதிகபட்ச தண்டனையே. சிறையில் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாத காலம்தான், கஷ்டம்தான், அதுவும் சாப்பாடு மட்டமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் வ.உ.சி. கூட படாத கஷ்டங்களைத் தான் பட்டுவிட்ட மாதிரி ஆறு மாத சிறையை விவரிக்கிறார் பாருங்கள்! கடுப்புதான் கிளம்புகிறது.

ஈ.வெ.கி. சம்பத் சதிகாரர்; நேரு மேட்டிமைத்தனத்தோடு நடந்து கொண்டார். காமராஜும் பக்தவத்சலமும் தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார்கள். நான் மட்டுமே உத்தமன் என்றுதான் எழுதுகிறார். பாவம், வாழ்க்கையில் ஒரு தவறு கூட செய்யவில்லை போலிருக்கிறது.

தவிர்த்துவிடுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்