வண்ணதாசன்: ஒரு சிறு இசை

ஒரு சிறு இசை 2016-க்கான சாஹித்ய அகடமி பரிசு வென்ற சிறுகதைத் தொகுப்பு.

வண்ணதாசனின் எழுத்தில் எப்போதும் தெரிவது கனிவு; குறைநிறைகளைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் அடுத்தவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அன்பு. இதிலும் தெரிவது அதுதான். எந்தக் கதையும் நான் தமிழின் நல்ல சிறுகதைகள் என்று தொகுத்தால் வராது. சில சமயம் மிக எளிமையாக, ஊகிக்கும்படி இருக்கிறது. ஆனால் அவ்வப்போது நல்ல உணர்வுகளை (feel-good) ஏற்படுத்திவிடுகிறார்.

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை பூரணம்தான். தனக்கும் தன் தங்கைக்கும் கருப்பட்டித் துண்டுதான் ஸ்வீட் என்று பூரணலிங்கம் மாமா சொல்லும் இடம், உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் ஒரு சில்லில் அத்தை பூ வைத்துக் கொண்டிருப்பாள், இன்னொன்றில் மாமாவை கிஸ் அடித்துக் கொண்டிருப்பாள் என்று சொல்லும் இடம் எல்லாம் கவிதை.

தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் காந்தி டீச்சர், ஒரு சிறு இசை மூக்கம்மா ஆச்சி நல்ல பாத்திரப் படைப்பு. இரண்டுமே நெகிழ்ச்சி அளித்த சிறுகதைகள்.

எண்கள் தேவையற்ற உரையாடல்கள் சிறுகதையில் என்னையே கண்டேன். இறந்த சிலருக்கு நானும் ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பி இருக்கிறேன். அந்த உணர்வைக் கொண்டு வந்துவிட்டார்.

பொழுது போகாமல் ஒரு சதுரங்கம் நல்ல சிறுகதை. சூரி மாமாவின் பொறாமை, திருமணம் பொருளிழந்து போவது இரண்டும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

கனியான பின்னும் நுனியில் பூ குறைகளோடு ஏற்பதை நன்றாகக் காட்டும் சிறுகதை.

மன்மத லீலையை நல்ல முடிவுள்ள சிறுகதை.

பாவண்ணன் இந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி இங்கே அலசுகிறார்.

தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் என்று நான் தேர்ந்தெடுத்தால் இதில் எதுவும் வராது. என் கண்ணில் வண்ணதாசன் இவற்றை விட நல்ல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அதனால் என்ன? நல்ல தொகுப்புதான். அவ்வப்போது மனம் நிறைகிறது, வேறென்ன வேண்டும்? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணதாசன் பக்கம்