பாலகுமாரன்: தாயுமானவன்

பாலகுமாரனின் ஆரம்ப் கால கதைகளில் ஒன்று. தொடர்கதையாக வந்தது என்று நினைவு.

என்ன கதை? பி.எஸ். மோட்டார் தொழிற்சாலையில் தொழிற்சங்கத் தலைவன். கம்பெனிக்கு நஷ்டமும் வரக்கூடாது, தொழிலாளர் பிரச்னைகளும் தீர வேண்டும், தொழிலாளிக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவன், நடத்திக் காட்டுபவன். ஒரு முறை கௌரவப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு வேலையை விடும்படி நேர்கிறது. மனைவி வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. இன்று கூட மனைவி வேலைக்குப் போய் கணவன் வீட்டு வேலை பார்த்தால் புருவத்தை தூக்குகிறார்கள். இது முப்பது முப்பத்தைந்து வருஷத்துக்கு முந்தைய நாவல். அதில் பல பிரச்சினைகள். கடைசியில் பி.எஸ்சுக்கு பம்பாயில் வேலை கிடைப்பதோடு முடிகிறது.

பால்குமாரனின் தொடர்கதைகளில் வழக்கமாக நடப்பது ஒன்று உண்டு. அருமையாக ஆரம்பிப்பார்; பாதி தொடர்கதை வந்த பிறகு கதையை எப்படி தொடர்வது என்று தெரியாது. கதைப்பின்னல் அங்குமிங்கும் அலைபாயும். பல முறை அவசர அவசரமாக முடித்துவிட்ட மாதிரி தெரியும். இது வாரப் பத்திரிகை தொடர்கதைகளின் பிரச்சினையாகக் கூட இருக்கலாம். சுஜாதா தொடர்கதைகளிலும் இது அவ்வப்போது தெரியும்.

தாயுமானவனிலும் அப்படித்தான். ஆரம்ப அத்தியாயங்கள் அருமை. அன்றைய தொழிற்சாலை, பொறுப்புள்ள தொழிலாளர் தலைவன், தொழிற்சங்கம்-நிர்வாகம் பேரங்கள், தொழிற்சாலையில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சினைகள், பாசமுள்ள குடும்பம் எல்லாம் மிக அருமையாக சித்தரித்திருப்பார். அன்றைக்கு அஷோக் லேலண்டோ கிர்லோஸ்கரோ இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறார். பி.எஸ்ஸுக்கு வேலை போவதும், மனைவி வேலைக்குப் போக தான் வீட்டில் இருப்பதும் நல்ல திருப்பம். அதற்கப்புறம் சொதப்ப ஆரம்பிக்கிறார். அங்கங்கே இழுக்கிறார். தேவை இல்லாமல் பி.எஸ்சை சைட் அடிக்கும் பெண் ஒருத்தி வேறு. எப்படா முடியும் என்று நினைக்க வைக்கிறார். நல்ல வேளையாக முடிவு நன்றாக அமைந்துவிட்டது. வீட்டுக்குப் போய் என்ன கிழிக்கப் போகிறோம், தெரிந்த வித்தையை செயல்படுத்த கிடைத்த வாய்ப்பை விடுவானேன் என்று பி.எஸ். காரை ரிப்பேர் செய்யும் காட்சி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

வணிக நாவலா இலக்கியமா என்று தீர்மானமாகச் சொல்வது கஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் முதல் பாதியின் மெய்நிகர் அனுபவம் இந்த நாவலை இலக்கியம் ஆக்குகிறது – வாரப் பத்திரிகை தொடர்கதையின் எல்லா பலவீனங்களும் இருந்தால் கூட. கதை சுவாரசியமாகப் போகிறது. அதனால் நொட்டை சொன்னாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்