ரா. ராகவையங்கார்: தமிழ் வரலாறு

ஐயங்கார் சிறந்த தமிழறிஞர். தொல்காப்பியத்தையும் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் கசடறக் கற்றவர். இலக்கியச் சான்றுகளை வைத்து தமிழ் மன்னர் வரலாற்றை கட்டி எழுப்புவது அவருடைய தனிச்சிறப்பு. அவருக்கு வடமொழியிலும் ராமாயணம் மகாபாரதத்திலும் நல்ல பயிற்சி இருக்கிறது, அதனால்தானோ என்னவோ இந்த இதிகாசங்களையும் அவர் உண்மை வரலாறாகவே கருதுகிறார் என்று சில சமயம் தோன்றும். உதாரணமாக தமிழகத்தின் குறுநில மன்னர்களாக இருந்த வேளிர்கள் மகாபாரதக் கிருஷ்ணன் இறந்த பிறகு தென்னாட்டுக்கு குடிபெயர்ந்த யாதவர்கள் என்று எங்கோ எழுதி இருக்கிறார். அது அவரது மனச்சாய்வைக் காட்டுவதாகத்தான் தெரிகிறது.

ஐயங்கார், வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் பெருமை அவர்கள் வாழ்ந்த காலத்தில் உணரப்பட்டதா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். அதுவும் ஐயங்காரின் நடை பண்டித நடை. இன்று படிக்கக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வெகு சிலரே அவரை இன்று நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

தமிழ் வரலாறு எல்லாருக்குமான புத்தகம் அல்ல. படிக்க கஷ்டமான நடைதான். ஆனால் நல்ல புத்தகம், தமிழைப் பற்றிய ஒரு கழுகுப்பார்வை (bird’s eye-view) கிடைக்கிறது. ஏதோ தம் கட்டி படித்தேன், ஆனால் புத்தகத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆர்வம் உள்ளவர்க்ளுக்கு அருமையான புத்தகம். மின்பிரதி இங்கே.


ராகவையங்கார் இந்தப் புத்தகத்தில் சொல்வது சுருக்கமாக:

 • தமிழ் என்ற பெயர் இனிமை என்ற பொருளுடையது. இது வடமொழிக்காரர்கள் வைத்த பெயரல்ல. த்ரமிளம், திராவிடம் என்பது மருவி தமிழ் என்றாகியது என்று ஒரு தியரி உண்டு. இது தவறு என்பதற்கு வலுவான இலக்கிய ஆதாரங்களைக் காட்டுகிறார்.
 • தமிழ் நெடுநாட்களாக இருந்து வந்த மொழி. வடமொழியிலிருந்து கிளைத்ததில்லை. சமஸ்கிருதம் உட்பட்ட பல நாட்டு மொழிகளிலிருந்து சொற்களை வாங்கிக் கொண்டிருக்கிறது, கொடுத்திருக்கிறது.
 • தமிழகம் என்ற நிலப்பரப்பு வேங்கடத்திலிருந்து குமரி வரை என்று காலம் காலமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. (எனக்கு ஒரு சந்தேகம் – வேங்கடம் என்பது ஒரு ஊர் அல்லது ஒரு மலைத்தொடரின் சின்ன பகுதி. கிழக்கு மேற்காக பரந்து இல்லை. ஒரே ஒரு ஊர் எப்படி எல்லையாகும்? திருப்பதிக்கு ஐம்பது மைல் கிழக்கே அல்லது மேற்கே போனால் எது வட எல்லை?)
 • கடற்கோள் நடந்து பாண்டிய நாட்டின் கணிசமான பகுதி கடலுக்குள் மூழ்கியது. இப்படி ஒன்று நடந்ததற்கு தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, பல நாடுகளில் reference இருக்கிறது.
 • தமிழ்ச்சங்கம் அரசர்களிடமும் சமூகத்திலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வடமொழி சங்கங்களும் இருந்ததாகத் தெரிகிறது. யாரோ ஒரு வடமொழிப் புலவன் “ஆரியம் நன்று தமிழ் தீது” என்று சொல்லிவிட நக்கீரர் அவனை சபித்தார் என்று ஒரு பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
 • அசுரர் என்று வடமொழியில் குறிப்பிடப்படுபவர் தமிழர் அல்லர். அசுரருக்கு மூக்கு அமுங்கி இருக்கும் என்று வடமொழியில் சொல்லப்படுகிறது. இவர்களைத் தமிழர்கள் அவுணர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள் தமிழருக்கும் முந்தைய குடிகளாக இருக்கலாம். ஆரியர்-தமிழர் வேறுபாடு நில-மொழி வேறுபாடுதான், இன வேறுபாடு அல்ல. அன்றைய திராவிடக் கழகத்தினருக்காக இதைச் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.
 • தமிழர்கள் கந்தர்வர்கள்! கந்தர்வ மணம்தான் தமிழர் முறை, இசை வடிவங்கள் இவற்றை வைத்து இப்படி வாதிடுகிறார். ஆதாரமில்லாத ஊகம் என்றுதான் எனக்குத் தோன்றியது.
 • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலப் பகுப்புகள்தான் வர்ணாசிரமத்தின் ஊற்றுக்கண் என்கிறார். அதாவது ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஒரு குறிப்பிட்ட தொழில் நடந்தது, அது வர்ணாசிரமமாக, ஜாதியாக பரிணமித்ததாம். அது எப்படி பிராமணர்-க்ஷத்ரியர்-வைசியர்-சூத்திரர் என்று மாறும் என்று எனக்குப் புரியவில்லை. வேடுவரும் ஆயரும் உழவரும் மீனவரும் எல்லாருமே வர்ணாசிரமப்படி சூத்திரர்கள்தானே? வடமொழி வேதங்களும் தமிழும் வேத காலத்திலிருந்தே கருத்துப் பரிமாற்றம் கொண்டவை என்கிறார்.
 • கேரளத்தில் வழக்கில் இருந்த மருமக்கள் தாயமுறை சங்ககாலத்தில் இல்லை என்று தெளிவாக நிறுவுகிறார். தந்தை வழியாகத்தான் மூவேந்தர் அரசுரிமை மாறி இருக்கிறது.
 • தொல்காப்பியம் குறிப்பிடும் அகத்தியத்திலிருந்து பிற்காலத்தவர் காட்டும் மேற்கோள்கள்தான் இன்று கிடைக்கின்றன. 70-80 வரிகள் இன்று தெரிந்திருக்கலாம், அவ்வளவுதான்.
 • சொல்லாராய்ச்சிக்காக எத்தியோப்பியாவில் பேசப்படும் அம்ஹாரிக் மொழி, எகிப்திய மொழி, சீன மொழி, ஜப்பானிய மொழி, அரபி என்று பல மொழிகளிலிருந்து வார்த்தைகளைக் காட்டுகிறார். பார்த்தால் தமிழ் வார்த்தையோடு தொடர்பு இருப்பது போலத்தான் தோன்றுகிறது. உதாரணமாக சோமாலிய மொழியில் அப்பன் (abban) என்றால் காப்பவன் என்று பொருளாம். இது “அப்பா” என்ற தமிழ்ச் சொல்லோடு தொடர்புடையது மாதிரிதான் தெரிகிறது. ஐயங்கார் நிச்சயமாக இத்தனை மொழிகள் அறிந்தவர் அல்லர். இந்த ஆராய்ச்சிகளை யார் செய்திருப்பார்கள்?t

 • எனக்கு கவிதையே அலர்ஜி என்றால் இலக்கணம் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டாம். ஆனால் தொல்காப்பியத்தை பற்றி அவர் விளக்குவதைப் படித்தால் எனக்கே தொல்காப்பியத்தைப் படித்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
 • தொல்காப்பியர் பாரம்பரிய ஹிந்து மதத்தவர் என்கிறார்.
  1. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஐம்பெரும்பூதங்கள் என்று வகைப்படுத்துகிறார். பௌத்தம் ஆகாயத்தை ஏற்பதில்லை, அதனால் தொல்காப்பியர் பௌத்தர் அல்லர்.
  2. “பல்லாற்றானும் நில்லா உலகம்” என்று வருகிறது, அதாவது உலகம் நிலையற்றது என்கிறார், ஜைன மதம் உலகம் நித்தியமானது என்கிறது, அதனால் அவர் ஜைனரும் அல்லர்.
  3. “பரத்தை வாயில் நால்வருக்குமுரித்தே” என்று வருகிறது, அதனால் நான்கு வர்ணம் என்பதை ஏற்கிறார்.
 • தொல்காப்பியத்தின் பாயிரத்தில் ஐந்திரம் குறிப்பிடப்படுகிறது. ஐந்திரம் பாணினியின் இலக்கணம் வந்த பிறகு பழக்கத்தில் அருகிவிட்டதாம். அதனால் தொல்காப்பியம் ஐந்திரத்துக்கு பிற்பட்டது, ஆனால் ஐந்திரம் முக்கியத்துவம் இழப்பதற்கு முற்பட்டது என்கிறார். வையாபுரிப் பிள்ளை இது வலுவற்ற வாதம் என்று கருதுகிறார். எனக்கென்னவோ ஐயங்கார் சொல்வது சரியாகத்தான் படுகிறது.
 • தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தது என்று பிற்காலத்தில் குறிப்பிடப்படுகிறது, அதனால் அதன் காலம் கி.மு. 145-க்கு கொஞ்சம் முற்பட்டது என்கிறார். தொன்மங்களின்படி தொல்காப்பியர் ஜமதக்னியின் புதல்வராம், அவரது இயற்பெயர் திரண தூமாக்னியாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் இலக்கியம்

தொடர்புடைய சுட்டி: மின்புத்தகம்