ஆரன் சோர்கின்: A Few Good Men

A Few Good Men நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று. அருமையான நடிப்பு, அதுவும் ஜாக் நிக்கல்ஸன் just sizzles. You can’t handle the truth! என்பது இன்று படிமமாகவே ஆகிவிட்ட வசனம்.

டாம் க்ருய்ஸ், டெமி மூர், கெவின் பேகன் நடித்து ராப் ரெய்னர் இயக்கத்தில் வந்த திரைப்படம் (1992)

அப்போதிலிருந்தே இதன் மூல நாடக வடிவத்தைப் பார்க்க/படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் கை வந்தது. திரைப்படம் நாடகத்தை ஏறக்குறைய அப்படியே பிரதிபலித்திருக்கிறது. நல்ல கதையோடு சிறந்த நடிப்பும் சேரும்போது நாடகங்களும் திரைப்படங்களும் மூலப் புத்தகத்தை விட ஒரு படி மேலே போய்விடுகின்றன, திரைப்படத்தை மட்டும் பார்த்தவர்கள் எதையும் தவற விட்டுவிடவில்லை.

நாடகம் 1989-இல் முதல் முறையாக நடிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் திரைப்பட உரிமையை விற்று வந்த பணத்தில்தான் நாடகம் அரங்கேறியதாம்.

திரைப்படம் வந்து முப்பது வருஷம் இருக்கும் என்று நினைக்கிறேன். கதை சுருக்கமாக: க்யூபாவில் அமெரிக்காவுக்கு ஒரு ராணுவ தளம் இன்னும் இருக்கிறது – குவாண்டனமோ. அங்கே எழுதப்படாத சில விதிகளை மீறும் ஒரு வீரனை “கவனிக்கும்படி” வேறு இரு வீரர்கள் பணிக்கப்படுகிறார்கள். நிலை விபரீதமாகி அவன் இறந்தே போகிறான். இது மேலதிகாரிகளின் சட்டவிரோதமான ஆணையின் விபரீத விளைவு என்று தெரிந்தால் அந்த அதிகாரிகளின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்பதால் திட்டமிட்டு கொன்றுவிட்டார்கள் என்று அந்த இரு வீரர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது, அந்த வீரர்களை பலிகடா ஆக்கிவிடுகிறார்கள். ராணுவ விசாரணை (court martial) நடைபெறுகிறது. என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

பாத்திரப் படைப்பு பிரமாதம். தான் தலைமை தாங்கும் படையை எப்படி நடத்த வேண்டும் என்பது முற்றிலும் தன் முடிவு, தன் உரிமை, தன்னை எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கும் கர்னல் ஜெஸ்ஸப், விடாமல் நோண்டும் பெண் வக்கீல் ஜோ, ஆத்ம கௌரவத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கார்ப்பொரல் டாஸன், மேலதிகாரி டாஸன் சொன்னதை அப்படியே செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத சிப்பாய் டௌனி என்று ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது.

உண்மை மெதுமெதுவாக வெளிப்படுவது, குறுக்கு விசாரணைகள், வக்கீல்கள் காஃபி, ஜோ, சாம், ராஸ் எல்லாரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டே இருப்பது (banter) சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளில் ஒன்றல்லவா இது? உரிமை உள்ளவர், மேலதிகாரி இட்ட தவறான ஆணையை நிறைவேற்ற வேண்டுமா? தசரதன் சொன்னால் ராமன் காட்டுக்குப் போக வேண்டுமா? திரௌபதி பணயம் வைக்கப்பட்டால் பீமன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அண்ணன் ஆணையை சிரமேற்கொள்வதையே தன் வாழ்வாகக் கொண்டிருக்கும் துச்சாதனன் குற்றவாளியா இல்லையா? புத்தகத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது “unit, corps, God, country”. My country, right or wrong. அவற்றுக்காக எந்தத் தியாகமும் செய்யலாம். அது சரிதான் என்றால் ஹிட்லர் காலத்து ஜெர்மானியர்கள் எல்லாருமே குற்றவாளிகள்தானா?

ஆரன் சோர்கின் நாடகங்கள், திரைக்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர். அவரேதான் திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். நாடகத்தின் வசனங்களில் முக்கால்வாசியாவது அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிகளிலோ 90 சதவிகிதம் அப்படியேதான் இருக்கிறது.

திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாகப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆர்வம் இருப்பவர்கள் நாடகத்தையும் படிக்கலாம்/பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்