பெர்னார்ட் ஷா: செயின்ட் ஜோன்

செயின்ட் ஜோனின் மையக்கருத்து சிந்திக்க வைப்பதுதான்; ஆனால் முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன்னால் முதல் முறையாகப் படித்தபோது கிடைத்த தரிசனம் இன்று தேய்வழக்காக மாறிக் கொண்டிருக்கிறது.

ஜோன் ஆஃப் ஆர்க் தெரிந்த பெயர்தான். ஒரு காலத்தில் இங்கிலாந்தின் அரசர்களுக்கு ஃப்ரான்சின் அரச வம்சத்துடன் நெருங்கிய உறவு இருந்தது. அவர்கள் ஃப்ரான்சுக்கும் சொந்தம் கொண்டாடினார்கள். வேங்கி அரச வம்சத்தை சேர்ந்த அநபாயன குலோத்துங்க சோழனாக முடிசூட்டிக் கொண்டதைப் போல. நாடு என்ற கருத்தாக்கமே அப்போதெல்லாம் கொஞ்சம் மங்கலாகத்தான் இருந்திருக்கிறது. ஃப்ரெஞ்சு இளவரசன், படைகளால் ஆங்கிலேயப் படைகளை முறியடிக்க முடியவில்லை. பாரிஸ் உட்பட பல நகரங்கள் ஆங்கிலேயர் கையில்தான் இருந்தன. அப்போது ஒரு சாதாரணக் குடும்பத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஜோன் தன்னிடம் சில புனிதர்கள், மைக்கேல் என்ற தேவதை பேசியதாக உணர்கிறாள். கடவுளே நம் பக்கம் என்று சொல்லி ஃப்ரென்சுப் படைகளுக்கு ஊக்கம் தருகிறாள். இளவரசனின் ஆதரவு அவளுக்கு இருக்கிறது. படைகளின் முன்னால் நின்று போரிடுகிறாள். முதல் வெற்றி ஆர்லியன்ஸில், பிறகு பல வெற்றிகள். ஃப்ரெஞ்சு இளவரசனுக்கு தன் கையாலேயே முடிசூட்டுகிறாள். ஆனால் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறாள். அவள் சூனியக்காரி என்று கத்தோலிக்க மத அமைப்பு (Catholic Church) குற்றம் சாட்டுகிறது (ஆணுடை அணிகிறாள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு), வழக்கு தொடுக்கிறது, மத-கடவுள் நிந்தனை செய்தாள் (heresy) என்று தீர்ப்பளிக்கிறது. 19 வயதில் ஜோன் எரிக்கப்படுகிறாள். 20-25 வருஷம் கழித்து அந்தத் தீர்ப்பு தவறு என்று இன்னொரு தீர்ப்பு. 1920-இல் ஜோன் ஒரு புனிதர் என்று அதே கத்தோலிக்க மத அமைப்பு முடிவெடுக்கிறது.

ஷாவின் படைப்புகளின் பலமே நமக்கு தெரிந்தது என்று நாம் நினைக்கும் ஒன்றை வேறு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதுதான். இந்தப் படைப்பும் அப்படியேதான். இதே வரலாற்றை, தொன்மத்தைத்தான் ஷா நாடகம் ஆக்கி இருக்கிறார். ஜோனின் பேச்சைக் கோட்டைத் தலைவர் பட்ரிகோர்ட் கேட்ட பிறகுதான் கோழிகள் முட்டை இடுகின்றன என்பது கூட நாடகத்தில் வருகிறதுதான். ஆனால் ஜோனுக்கு மட்டும் கேட்கும் குரல்களைத் தவிர்த்துவிட்டால் நாடகம் முழுக்க முழுக்க எதார்த்தமானது, எந்த விதமான அமானுஷ்யமும் இல்லை. ஜோன் common sense உள்ள தலைவி, அவ்வளவுதான். அவளுக்கு அரசவையின் உட்பூசல்கள், அகங்கார மோதல்கள் எவற்றைப் பற்றியும் அக்கறை இல்லை. இளவரசன் சார்லஸ் அவளுக்குத் தரும் ஆதரவு எல்லாம் வேறு எல்லா வழிகளும் தோல்வி அடைந்துவிட்டதால்தான். கோட்டைத் தலைவர் பட்ரிகோர்ட் அவளுக்கு உதவி செய்வதில் அம்மா நீ சொல்கிறபடி கேட்டுவிடுகிறேன், ஆளை விடு என்ற உணர்வு இருக்கிறது. அவளைத் தண்டிக்கும் ஃப்ரெஞ்சு கத்தோலிக்க குருமார்கள் அவளை காப்பாற்றிவிட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரிந்த வரையில் அதுதான் சரி, அவர்கள் சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஆங்கிலேய தளபதிக்கு ஜோனை ஒழிக்காவிட்டால் வெற்றி பெற முடியாது, அவ்வளவுதான். நாடகத்தில் வில்லன்களே கிடையாது. வேறு வேறு நோக்கங்கள் கொண்ட மனிதர்கள்தான்.

நாடகத்தில் ரசிக்க வைத்த ஒரு வசனம்; ஜோன் முகம்மது நபியுடன் ஒப்பிடப்படுகிறாள். இப்படித்தான் கடவுள் குரல் கேட்டது என்று ஒருவர் கிளம்பினார், இன்று கிறிஸ்துவ மதத்துக்கு அவர் நிறுவிய மதம்தான் பெரிய சவால், ஜோனைப் போல் இன்னும் நாலு பேர் கிளம்பினால் மத அமைப்பு, பிரபுக்கள் எவருக்கு மதிப்பிருக்கிறாது என்று ஒரு வசனம் வருகிறது.

நாடகத்தைப் படிப்பதற்கு முன் எனக்குத் தெரிந்த வரலாற்றின்படி 19 வயது இளம்பெண்ணை சுயநலனுக்காக அநியாயமாக குற்றம் சாட்டி பாவிகளான குருமார்கள் கொன்றுவிட்டார்கள் என்பதுதான். 20-22 வயதில் முதல் முறையாகப் படித்தபோது குருமார்கள் நல்லவர்களாவே இருந்தாலும், ஜோன் மீது இரக்கம் கொண்டவர்களாகவே இருந்தாலும், வேறு என்ன செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. பான்டியஸ் பிலாட் வேறு என்ன தீர்ப்பளித்திருக்க முடியும்? காந்தி நல்லவர்தான், வல்லவர்தான், ஆனால் அன்றைய நீதிமன்றங்கள் அவருக்கு தண்டனை அளிக்காமல் இருந்திருக்க முடியுமா? வ.உ.சி.க்கே தண்டனை அளிப்பதை தவிர்த்திருக்க முடியாது, ஆனால் 40 வருஷ தண்டனை மிக அதிகம் என்பதுதானே பிர்ச்சினை?

அப்போதெல்லாம் இளம் வயதுக்கே உரிய “புரட்சி” மனப்பான்மை இருந்தது. உதாரணமாக குடும்பமே சங்கர மடத்திற்கு அடிக்கடி போய் வருபவர்கள்தான், காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி வர்ணாசிரம தர்மத்தில் நம்பிக்கை உடையவர், ஜாதி பார்ப்பவர் என்று தெளிவாகத் தெரிந்ததால் 17-18 வயதுக்கப்புறம் நான் மடம் பக்கம் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பேன். திடீரென்று அவர் கண்ணோட்டம் புரிந்தது. தனிப்பட்ட முறையில் அவருக்கு ஜாதியில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, காலம் காலமாக வந்த பழக்கத்தை மாற்ற தனக்கு உரிமை இல்லை என்று நினைக்கிறாரோ என்று தோன்றியது.

நம் காலத்து விழுமியங்கள் தவறாக இருந்தாலும், அவை தவறு என்று புரிந்திருந்தாலும், அவற்றை கைவிடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்று புரிந்தது. இன்று இந்த புரிதல் சாதாரணமாகத்தான் தெரிகிறது. ஆனால் அந்த வயதில் அது பெரிய கண்திறப்பு.

ஷாவின் நாடகங்களில் ஒரு பெரிய சௌகரியம் அவற்றைப் படித்தால் போதும், பார்க்கத் தேவையில்லை என்பதுதான். அவர் எப்போதுமே அப்படித்தான் உணர வைக்கிறார். இதிலும் அப்படித்தான்.

செயின்ட் ஜோனை ஷாவின் முதல் வரிசை நாடகங்களில் நான் வைக்கமாட்டேன். ஆனால் நல்ல நாடகம்தான், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் ஷா பக்கம்