சமீபத்தில் சில மெரினா நாடகங்களை முதல் முறையாகவோ அல்லது மீண்டும் ஒரு முறையோ படித்தேன். அதனால் இந்தப் பழைய பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.
ஒரு காலத்தில் மெரினாவின் நாடகங்கள் மிகவும் பிரபலம். தாம்பரத்தைத் தாண்டாத சபா நாடக உலகில் பிரகாசித்தார்.தனிக்குடித்தனம், கால்கட்டு, ஊர் வம்பு மாதிரி சில பல. அவை ஒரு காலகட்டத்தின் – குறிப்பாக எழுபதுகளின், நகர்ப்புற பிராமணர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டு வந்தன. அவர் விவரிக்கும் குடும்பத்துக்குள் நடக்கும் சண்டைகள் ஏறக்குறைய அதே மொழியில் நடந்துகொண்டிருந்தன.
பொதுவாக மெரீனா நகர்ப்புற – அதுவும் சென்னை நகர, மத்தியதர வாழ்க்கையை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களின் வாழ்க்கையை சித்தரித்தார். அன்றைய சபா நாடகங்களைப் பார்த்த பெருவாரியானவர்கள் பிராமணர்களே. இவர்களில் பெரும்பாலோர் விகடன் வாசகர்களும் கூட. அவரது எழுத்துக்கு இப்படி ஒரு மார்க்கெட் இருந்தது அவருக்கு பெரிய பலம். அதுவே அவரது பலவீனமும் கூட. குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. நாடகங்களில் பிற ஜாதிப் பாத்திரங்கள் வந்தாலும் (தனிக்குடித்தனம் குடை நாயுடு) ஒரு பிராமணரின் கண்ணோட்டத்திலேயே அவர்களும் சிந்திப்பது போலத்தான் தோன்றும்..
பாத்திரங்கள் உண்மையாக இருந்தாலும் பொதுவாக கதை, முடிச்சு என்றெல்லாம் எதுவும் இருக்காது. அப்படியே முடிச்சு இருந்தாலும் அது வலிந்து புகுந்தப்பட்டதாக இருக்கும். நாடகத்தின் வெற்றி, சுவாரசியம் எல்லாம் அந்தக் கால ரசிகர்கள் தங்களையே நாடகத்தில் பார்ப்பதுதான்.
அனேகமாக கூத்தபிரானுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். (கூத்தபிரான் ரேடியோ அண்ணா என்றும் புகழ் பெற்றிருந்தார்.) தனிக்குடித்தனத்தின் வெற்றி அதை சினிமா உலகுக்கும் கொண்டு போனது.
வளர்ந்த சூழ்நிலையை விட்டு வெளியேறிய பிறகுதான் அதைப் பிரதிபலிக்கும் படைப்புகளை take it for granted ஆக எடுத்துக் கொள்ளும் மனநிலை மாறுகிறது. அப்படி பிரதிபலிக்கும் படைப்புகளின் நம்பகத்தன்மை அப்போதுதான் கண்ணிலேயே படுகிறது!
நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 95 வயதில் இறந்திருக்கிறார். விகடன் ஆசிரியர் குழுவில் ஒருவர். விகடன் அறுபது-எழுபதுகளில் பிரபலமாக இருந்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். பரணீதரன் என்ற பேரில் ஆன்மீகப் பயணக் கட்டுரைகள் எழுதினார். ஸ்ரீதர் என்ற பேரில் கார்ட்டூன்கள் வரைந்தார். மெரினா என்ற பேரில் நாடகங்கள் எழுதினார். மூன்று அவதாரங்களுக்குமே நல்ல மார்க்கெட் இருந்தது. அவரது நாடகங்கள் அனேகமாக விகடனில் தொடராக வந்தன. அதுவும் அவற்றின் பிராபல்யத்துக்கு ஒரு காரணம்.
மெரினாவின் நாடகங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா? பரணீதரனின் பயணக் கட்டுரைகள்? ஸ்ரீதரின் கார்ட்டூன்கள்? உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
பொதுவாக தமிழ் நாடகங்களின் தரம் குறைவு. ஷேக்ஸ்பியரும் இப்சனும் ஷாவும் ப்ரெக்டும் மில்லரும் இங்கே இன்னும் அவதரிக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது மெரினாவின் உண்மையான சித்தரிப்புகளுக்கு தமிழ் நாடக வரலாற்றில் நிச்சயமாக இடம் உண்டு. ஒரே ஒரு படைப்பை படித்துப் பார்ப்பது என்றால் மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தைப் பரிந்துரைக்கிறேன். தனிக்குடித்தனம், ஊர் வம்பு, கால்கட்டு, எங்கம்மா, மாமியார் மெச்சிய மாப்பிள்ளை ஆகியவற்றை படிக்கலாம், பார்க்கலாம்.
அவர் எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதையே அவரது மாஸ்டர்பீஸாகக் கருதுகிறேன். எழுபதுகளின் பிராமண மத்திய தரக் குடும்பத்தை தத்ரூபமாகச் சித்தரித்தது. உண்மையில் நான் அவரைப் பற்றி சிலிகன்ஷெல்ஃபில் எழுத இந்த நாடகமே முக்கியக் காரணம்.
இந்த நாடகத்தில் வரும் பாத்திரங்கள் உண்மையானவர்கள். அவர்கள் நடத்தை, பேசும் விதம், பழகும் விதம் எல்லாம் என் அத்தைகளிடமும் மாமாக்களிடமும் அத்தான்களிடமும் அத்தங்காள்களிடமும் சித்தப்பாக்களிடமும் பெரியம்மாக்களிடமும் நான் கண்டவையே. நான் வளர்ந்த சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலித்திருக்கிறார். மாமியார்-மருமகள் தகராறுகள், ஷட்டகர்களின் (சகலபாடிகள்) ஈகோ பிரச்சினைகள், சென்னைக்கு வந்தாலும் மாமனார் வீட்டில் தாங்காமல் ஹோட்டலில் தங்கும் மாப்பிள்ளை, பக்கத்து வீட்டில் மைசூர்பாக் வாசனை பிடிக்கும் பாட்ராச்சாரி, டிவி இல்லாத நாட்களில் டிரான்சிஸ்டரில் கிரிக்கெட் கமெண்டரி கேட்டுக்கொண்டே இருக்கும் இளைஞன், பொருளாதார காரணங்களுக்காக வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் இருக்கும் பிரச்சினைகள், பாத்திரச் சீட்டு, நகைச் சீட்டு, புடவை வாங்கிவிட்டு பணம் தரப் படும் அவதி எல்லாம் என் குடும்பத்திலும் உறவினர் நண்பர் குடும்பங்களிலும் அனுபவித்தவையே, பார்த்தவையே. அந்தக் காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார். இதை நாகம்மாள், தலைமுறைகள், கோபல்ல கிராமம் genre படைப்பு. ஆனால் இரண்டாம் வரிசைப் படைப்பு.
என்ன கதை? ஒரு வழக்கமான அப்பா, அம்மா; ஒரு பெண் ரமா பணக்கார மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். இன்னொரு பெண் சாரு சொந்தத்தில் (மத்திய தரக் குடும்பம்) தியாகுவை மணந்து கொண்டிருக்கிறாள். சாருவுக்கும் மாமியாருக்கும் தகராறு. மாமியார் தியாகுவை smother செய்கிறாள். கிருஷ்ணமூர்த்தி மாமனார் வீட்டுக்கு வருவதே இல்லை. வழக்கமான பூசல்கள், சண்டைகள், நேற்று வரை கரித்துக் கொண்டிருந்தவர் நோய்வாய்ப்படும்போது ஆறுதலாக இருப்பது என்று போகிறது. கதாபாத்திரங்கள் உண்மையானவை. கதை? அதைத்தான் காணோம். மெரீனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
குறைகள் இல்லாத படைப்பு என்றெல்லாம் இல்லை. முக்கியமான குறை என்றால் இது நாடகமே இல்லை, நாவலை உரையாடல் வழியாக சொல்கிறார் அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டியம் அவசியம் இல்லை, படித்தாலே போதும். கதை என்று ஒன்று இல்லை. திடீரென்று ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் பின்னால் போய் ஒரு புகைப்படம் எடுத்த மாதிரி இருக்கிறது. புகைப்படம் உண்மையாக, தத்ரூபமாக இருக்கிறது, ஆனால் கலை அம்சம் குறைவு. அதுவும் இருந்திருந்தால்!
மாப்பிள்ளை முறுக்கு டிவி சீரியலாகவும் வந்ததாம். அதைக் கண்டு மெரீனா வெறுத்துப் போய் இனி மேல் டிவி சீரியலுக்கு நாடகங்களைக் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம்.
அவர் எழுதிய பிற நாடகங்களில் இவை குறைகள் உள்ள நாடகங்கள்தான் என்றாலும் படிக்க/பார்க்கக் கூடியவை. சுமார் என்ற தரத்திலாவது இருக்கின்றன.
தனிக்குடித்தனம்: (1969) இதுதான் மெரினாவின் மாஸ்டர்பீஸ் என சொல்லப்படுகிறது. இரண்டு நண்பர்கள். அவர்களுக்கு கல்யாணம் நடப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் இதுதான் நாடகம். நாராயணன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று துடிக்கிறான், கடைசியில் அவன் அப்பா அம்மா தனிக்குடித்தனம் போய்விடுகிறார்கள்! இன்று அத்திம்பேர்களும் சைக்கிள்களும் டிரான்சிஸ்டர்களும் நிறைந்திருந்த அந்த உலகத்தின் மெய்நிகர் சித்தரிப்புக்காகத்தான் படிக்க/பார்க்க வேண்டும். சோ ராமசாமி, கே.ஆர். விஜயா, ஒய்.ஜி. மகேந்திரன் நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.
கால்கட்டு: அவரது இன்னொரு புகழ் பெற்ற நாடகம். சும்மா சத்தமாக மிரட்டிக் கொண்டே இருக்கும் அப்பா, அவர் ஸ்டைல் அது என்பதை நன்றாக உணர்ந்த குடும்பத்தினர், குடும்ப உறுப்பினரான தூரத்து உறவுக்காரர் அம்மாஞ்சி. இப்படிப்பட்ட குடும்பங்கள் நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அருகிக் கொண்டு இருந்தன. பாத்திரப் படைப்பு உண்மையாக இருந்தாலும் கதையைத்தான் காணோம்.
ஊர் வம்பு அவருடைய புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று. வம்பு பேசும் அய்யாசாமி ஐயரின் பெண்ணுக்கும் இன்னொரு வம்புக்கார அத்தையின் மருமகனுக்கும் கல்யாணம். ஒரு காலத்து பிராமண milieu தத்ரூபமாக இருக்கிறது. ஆனால் இது என் காலத்துக்கும் முற்பட்ட milieu, அவ்வளவாக ஒட்ட முடியவில்லை.
எங்கம்மா: பிராமணக் குடும்பம், மூன்று பிள்ளைகள். முதல் பையன் மனைவிக்கு அடங்கினவன், தனிக்குடித்தனம் போய்விட்டான். இரண்டாமவன் ஜாதி விட்டு கல்யாணம் செய்துகொண்டவன், தனியாக இருக்கிறான். கடைசி பையனுக்கு ஜாதிக்குள்ளேயே பெண் பார்க்கிறார்கள். கல்யாணம், சச்சரவுகள், குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று போகிறது. அப்பா இறந்ததும் ஆசாரமான அம்மா தன் தலித் மருமகளுடன் போய் இருப்பதாக கதை முடிகிறது.
மாமியார் மெச்சிய மாப்பிள்ளை: பிள்ளையை வரப் போகும் பெண்டாட்டி பிரித்துவிடப் போகிறாள் என்று அம்மாவுக்கு பயம், அதனால் கல்யாணம் பண்ணிக் கொல்லாதே என்று பிள்ளைக்கு உபதேசிக்கிறாள். எப்படியோ கல்யாணம் நடக்கிறது. மருமகள் மாமியார் மேல் உயிராக இருக்கிறாள். பிறகு?
இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.
காதலென்ன கத்திரிக்காயா: இளைஞன் காதல் காதல் என்று அலைய எதுவும் வொர்க் அவுட் ஆகமாட்டேன் என்கிறது. வாரப்பத்திரிகை தொடர்கதை என்று தெளிவாகத் தெரிகிறது. அறுபதுகளில் ஸ்டவ் ஜோசியம் என்று (உய்ஜா மாதிரி இருக்கிறது, ஸ்டவ் நகருமாம்!) ஒன்று பரபரப்பாக இருந்ததாமே! இந்த நாவலில் வருகிறது
கல்யாண மார்க்கெட்: காதல், மறுக்கும் அப்பா, எப்படியோ சேரும் ஜோடி. தண்டம்.
மாமனார் சரணாகதி: குடும்பத்தை அடக்கி அட்டூழியம் செய்யும் குடும்பத் தலைவர்.
நாடகம் போட்டுப் பார் என்று நாடகம் போடுவதைப் பற்றியே ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார். நம்பகத்தன்மை இருந்தாலும் சுவாரசியமாக இல்லை.
வடபழனியில் வால்மீகி: தண்டம். வால்மீகி இன்றைய (அறுபதுகளின்) சென்னைக்குத் திரும்பி வருகிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்
தொடர்புடைய சுட்டி: மெரினா பற்றி ஒரு கட்டுரை
இவரை படிக்கும் காலத்தில் நான் பாலகன். பரணீதரன் நினைவுக்கு வருகிறது. இவரின் உண்மையான பெயர்? தெரிந்தால் சொல்லுங்கள்
LikeLike
தஞ்சாவூரில் இருந்தபோது தனிக்குடித்தனம், ஊர்வம்பு இரண்டு நாடகங்களும் பார்த்திருக்கிறேன். தனிக்குடித்தனத்தில் மாப்பிள்ளையாக பூர்ணம் விஸ்வநாதன். குடைநாயுடுவாக கூத்தபிரான். பரணீதரனின் பயணக்கட்டுரைகள் எங்கள் பைண்டிங் கலெக்ஷனில் இருக்கிறது. ஸ்ரீதரின் கார்ட்டூன்களை அவ்வப்போது எங்கள் பிளாக்கில் பகிர்கிறேன்.
LikeLike