என்னை fascinate செய்யும் தலைவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான். சி. சுப்பிரமணியம் அவர்களில் ஒருவர். இன்று மறக்கப்பட்ட தலைவர்தான், ஆனால் ஒரு 20 வருஷத்துக்காவது அவர் தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்.
அவர் எழுதிய “நான் சென்ற சில நாடுகள்” என்ற புத்தகம் கிடைத்தது. அதனால்தான் இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன். 1960-இல் காமராஜ் மந்திரிசபையில் அவர் மந்திரியாக இருந்தபோது ஐரோப்பிய நாடுகளுக்கு – இங்கிலாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து – போய்வந்திருக்கிறார். எஸ்.எஸ். வாசன் அவரை வற்புறுத்தி தன் பயண அனுபவங்கள் விகடனில் எழுத வைத்திருக்கிறார்.
சி.எஸ். அப்போது நிதி, கல்வி இரண்டு துறைகளுக்கும் அமைச்சர். ஆனால் தொழிற்சாலை, விவசாயப் பண்ணை என்று சுற்றிப் பார்த்திருக்கிறார், நம்மூரில் என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார். அவற்றை விவரமாக எழுதி இருக்கிறார். அங்கும் உல்லாசமாய் நாலு ஊர் சுற்றினோம் என்று இல்லாமல் வேலையைப் பற்றி யோசித்திருக்கிறார். அதுவே இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த அம்சம். இப்போது வெளிநாடு போகும் மந்திரிகள் இது மாதிரி எல்லாம் சிந்தித்து நேரத்தை வீணடிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். 🙂
வழக்கமான சில அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள். சுத்தத்தைப் பேணும் ஐரோப்பியர்கள், ஆரம்பப்பள்ளி ஒன்றை அமைக்க அன்றைய பணத்தில் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் செலவு என்று கேட்டதும் அதில் தமிழகத்தில் ஒரு கல்லூரியைக் கட்டிவிடலாமே என்ற எண்ணம், அன்றைய முன்னோடி தொழில் நுட்பமான தொலைக்காட்சியைக் கண்டு இது நல்லதா கெட்டதா என்று குழப்பம்.
சி.எஸ். தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். சில பகுதிகளை இங்கே பதித்திருக்கிறார்கள் – பகுதி 1, பகுதி 2. திருப்புமுனை என்று பேராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!
முல்லைப் பெரியார் பற்றி இத்தனை பிரச்சினை இருக்கும் இன்றைக்கு சி. சுப்பிரமணியம் பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தை கேரளத்தின் ஒத்துழைப்பை திறமையாகப் பெற்று செயல்படுத்திய இந்த சம்பவம் “அந்தக் காலம் மாதிரி வருமா” என்று ஏங்க வைக்கிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்திலிருந்து சில பகுதிகள் – பகுதி 1, பகுதி 2
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைப் பற்றி சில பதிவுகள்
காமராஜைப் பற்றி சில பதிவுகள்